சுயம்பு நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. முனிசு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.




http://www.tamilauthors.com/04/494.html  

சுயம்பு 
நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. முனிசு

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   
 
வெளியீடு : கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம், 
பரமத்திவேலூர் – 638 182.

நாமக்கல் மாவட்டம். அலைபேசி : 96981 39000. 
பக்கம் : 96, விலை : ரூ.100

******
      ‘சுயம்பு என்ற தலைப்பே சிந்திக்க வைத்தது. தானாகத் தோன்றுவதை சுயம்பு என்பார்கள். அதுபோல ஆணிடம் தானாகத் தோன்றிய பெண்மை நளினம் காரணமாக திருநங்கையாக மாறுகின்றனர். இந்த நூல் திருநங்கைகளின் உலகத்தை கவிதை வரிகளால் படம்பிடித்துக்காட்டி உள்ளார். அட்டை முதல் அட்டை வரை திருநங்கைகளின் படங்களையே பயன்படுத்தி உள்ளார். வளவளப்பான வண்ணத்தாள்களில் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர். பாராட்டுக்கள்.

      த.மு.எ.க.ச. தலைவர் திரு. ச. தமிழ்ச்செல்வன், கவிஞர் பொன்குமார் சேலம், கவிஞர் சூர்யநிலா சேலம் ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர். நூலாசிரியர் கவிஞர் வெ. முனிசு திருநங்கைகளின் வாழ்க்கையை ஆய்வு செய்து கவிதை வடித்து உள்ளார்.

      மூன்றாம் பாலினமான திருநங்கைகள் சந்திக்கும் புறக்கணிப்பை, வலியை, வேதனையை கவிதைகளாக வடித்துள்ளார். பாராட்டுக்கள்.

விரட்டியடிப்பு / பிறப்புக்குப் பொறுப்பேற்க / பிரம்மன்
      தயங்கும் படைப்பு / ஆதரவு நீட்டா அன்னை / தள்ளி நின்ற
      தந்தை / அடித்து உதைத்த அண்ணன் / இழுத்துத் தள்ளிய
      தம்பி / என்ன செய்வதென்று / தெரியாத / எனது பயணம்.
      கிடைத்த / முதல் உறவு / தாயம்மா / மரணிக்கும் எண்ணம்
      மரணமானது / அன்று முதல்!

மூன்றாம் பாலினமான திருநங்கைகளை முதலில் குடும்ப உறவுகள் அனைத்தும் புறக்கணிக்கின்றன.  வெறுத்து வெளியேறி வீதிக்கு வந்தால் சமுதாயமும் புறக்கணிக்கின்றது. அவர்களின் நிலையில் ஒரு கணம் யோசித்துப் பார்த்து அவர்கள் மீது அன்பு செலுத்திட மனிதநேயம் காட்டிட இந்த சமுதாயமும் குடும்ப உறவுகளும் முன்வர வேண்டும் என்ப்தை கவிதைகள் முழுவதும் வலியுறுத்தி உள்ளார்.

துறவு!

உலகமெல்லாம் பரவி
 இருக்கும் / எங்கள் பிறவி
      ஒரு / துறவி போல் / சொந்தமும் இல்லை / பந்தமும் இல்லை
      சொத்தும் இல்லை / சுகமும் இல்லை / காதலும் இல்லை
      கணவனும் இல்லை / கண் கண்ட தெய்வமுமில்லை!

திருநங்கைகள் வாழ்க்கை பந்த பாசம் உறவு எதுவுமின்றி துறவு வாழ்க்கைப் போன்றது என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார். சமுதாயத்தில் அவர்கள் மீது பரிவு காட்ட முன்வர வேண்டும். அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் மனம் உண்டு. மதிக்கப்பட வேண்டும். கேலி, கிண்டல் செய்வதை விட்டுவிட்டு சக மனிதர்களாக மதித்து அன்பு செலுத்திட வேண்டும். இதுபோன்ற பல எண்ணத்தை விதைத்தன கவிதைகள் ...

விலைமகள்!

பூப்பெய்தா பெண்கள் / மாதவிடாய காணா
      மங்கைகள் / கருப்பை இல்லா கன்னிகள் / மணமாகா
      விதவைகள் / வாழ்க்கைச் சந்தையில் / வாங்கப்படாத
      நாங்கள் / விற்கப்படுகிறோம் / விலைமாதர்களாக!

மூன்றாம் பாலினமான திருநங்கைகள் உடலமைப்பில் உள்ள குறைகளை புரியாமல் இருந்த புதிர்களுக்கு விடை சொல்லும் விதமாக உடலமைப்பின் இயல்பை கவிதை வரிகளின் மூலம் மிக இயல்பாக உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.

ஆக்கல்!

வாழத் துன்பப்படுவதால் / வறுமையில் / நிறமானோம்
      அங்கீகரிக்கப்படாததால் / அன்பில் / ஆழ்கடலானோம்!
      கண்டுகொள்ளப்படாததால் / கருணையில் / கடலானோம்!
      அசிங்கப்படுத்தப்படுவதால் / மனிதநேயத்தில் / உருவமானோம்!
      உதாசீனப்படுத்தப்படுவதால் / உறவில் / உண்மையானோம்!

நூலாசிரியர் வெ. முனிசு அவர்கள், பல திருநங்கைகளை உற்றுநோக்கி அவர்களுடன் பழகி, அன்பு செலுத்தி, அவர்களின் வலியை அறிந்து நேர்முகம் கண்டு ஆய்வுசெய்து உணர்ந்து கவிதைகள் வடித்து இருப்பதால், கவிதைகளில் உண்மை இருப்பதால் படித்து முடித்ததும் நம் மனசும் கனத்து விடுகின்றது.

அழகு!

நாங்கள் / அழகான கோலம் / ஆம் /
      அழகுபடுத்தப்படுகிறோம் / மிதிபடுகிறோம் / அழிக்கப்படுகிறோம்!

திருநங்கைகளில் சிலர் பெண்களை மிஞ்சிடும் அழகுடன் இருக்கின்றனர். அந்த அழகே ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. கோலம் போலவே மிதிபடுகிறோம், அழிக்கப்படுகிறோம் என்ற உவமை சிந்திக்க வைத்தது.

கருவில் கண்டுவிட்டால்!

கருவில் ஆணா பெண்ணா / ஒருவேளை / எங்களையும்
      கண்டுபிடிக்குமானால் / கருவறையே / கல்லறையாகும்
      தாய்ப்பாலே கள்ளிப்பாலாகும் / ஆக்கலும் அழித்தலும்
      அங்கேயே நடந்தேறியிருக்கும்.

கருவில் ஆணா பெண்ணா என்பது போல மூன்றாம் பாலினம் என்பது தெரிவதில்லை. பிறந்து வளர்ந்து ஒரு குறிப்பிட்ட பருவம் வந்த பின்பு தான் அவர்களுக்குள் ஒருவித மாற்றம் நிகழ்கின்றது. இயற்கையாகவே அந்த மாற்றம் வந்துவிடுகின்றது. மாற்றத்தை தடுக்க முடிவதில்லை. கருவிலேயே மூன்றாம் பால் என்று தெரிய ஆரம்பித்தால் முடித்து விடுவர் கதையை என்பதை உணர்ந்து கவிதை வடித்துள்ளார்.

சுயம்பு!

எனது பிரசவிப்பு / நானே தாயாகிறேன்
      நானே வலியாகிறேன் / என்னை நானே பிரசவித்துக்
      கொள்கிறேன் / அரவாணியாய் / பிரசவ வலி மட்டும்
      அப்படியே ஆயுள் முழுவதும்!

திருநங்கை என்ற மாற்றம் தங்களுக்குள் வந்தவுடன் குடும்பம் வெறுத்து ஒதுக்கி விரட்டி விடுகின்றது. அவர்கள அடைக்கலம் தேடி அலைந்து தங்கள் உடலுக்குள் பெண் போன்ற மாற்றத்தை தாங்களே உருவாக்கி விடுகின்றனர். இதற்கான அறுவை சிகிச்சையையும் வலியோடு செய்து கொள்கின்றனர். இந்த வலிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பிரசவ வலியை விட கொடிய வலி தான் என்பது மட்டும் உண்மை. அதனை கவிதையில் உணர்த்தி உள்ளார்.

தாயின் அடைமொழி!

ஆணாக இருந்திருந்தால் / வீரன் சூரன் / என்றிருப்பாய்
      பெண்ணாக இருந்திருந்தால் / அழகி பேரழகி / என்றிருப்பாய்
      அலியாய் பிறந்ததினால் – உன் / அடைமொழி என்னை
      அலங்கரிக்கவில்லையோ?

இந்த உலகில் மிகவும் உயர்வானது தாயன்பு. குற்றம் செய்த குழந்தையின் மீது அன்பு செலுத்துவாள். தன் குழந்தையை என்றும் வெறுக்கவே மாட்டாள். அப்படிப்பட்ட உயர்ந்த தாய் கூட தன் மகன் திருநங்கையாக மாறுகிறான் என்று தெரிந்தால் சொல்லிப்பார்ப்பாள், பிறகு வேறுவழி இல்லை என்று தெரிந்தால், தாயே தன் மகனை வெறுத்து விடுகிறாள். திருநங்கையை ஏற்கும் குடும்பம் இல்லவே இல்லை. அந்த அளவிற்கு சமுதாயத்தில் விழிப்புணர்வு வரவில்லை.

மதுரை அனுப்பானடியில் பிறந்து, திருநங்கையாக மாறிய நர்த்தகி நட்ராஜ் தனது நடனத்திறமையால் உலகம் முழுவதும் வலம் வருகின்றார். முனைவர் பட்டம், கலைமாமணி, பத்மஸ்ரீ என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இந்த அளவிற்கு உச்சம் அடைந்துவிட்டதால் இன்றைக்கு குடும்பத்தில் அங்கீகாரம் தருவர். ஆனால் மற்ற சராசரி திருநங்கைகளுக்கு குடும்பத்தில் அங்கீகாரம், பாசம் நேசம் தருவதே இல்லை என்பதே உண்மை.

பிரசவித்தாய் !

என்னைக் கருவில் உருவாக்கி / இருதனமை கொண்ட
      குழந்தையாய் / நீதானே / பிரசவித் “தாய்
 / பிறகு
      ஏன் வெறுத்
தாய்.

பெற்ற தாயே வெறுத்து விடுகிறாள். காரணம். அக்கம்பக்கம், உறவினர்கள் கேலி பேசுவார்கள் என்ற அச்சமே. இந்த சமுதாயத்தில் மூன்றாம் பாலினமான திருநங்கைகளை குடும்பத்திலும் சமுதாயத்திலும் அங்கீகரிக்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைக்கும் நல்ல கவிதை நூல். பாராட்டுக்கள், வாழ்த்துகள். திருநங்கைகள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். மற்றவர்களும் வாசித்து நேசிக்க வேண்டிய நூல்.
.  

.

கருத்துகள்

  1. மிக அருமையான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  2. திருநங்கை உலகை அறிய நினைக்கும் ஒவ்வொரு மனங்களுக்கும் இந்த நூல் உதவும் என்பதைத் தங்கள் விமர்சனங்கள் மூலம் அறிய முடிகிறது.

    பதிலளிநீக்கு
  3. பால் திரிபு மீப்பெரும் வலி. பகிர முடியாத வரலாற்று வலி. அதிக பட்சம் அவதானிக்கப்படாத உள்ளுறை துயர்.
    இந்த மூன்றாம் பாலினத்தை சம பாலினமாக பாவிக்க புதிய கோட்பாட்டை துவக்கியுள்ளார் கவிஞர்.முனீஷ்
    திருநங்கைகளை துச்சமாக புறமொ துக்கி
    பகடி யோடு நகரும் பெருவாரியான சூழலில் அவர்களை அரவணைத்தும்
    ஆய்வு கொண்டும் தொடர்ந்து அன்பு பாராட்டி நகரும் இவரின் உன்னதப் பண்பு
    கவனிக்கப்பட வேண்டியது. மொழியாளுமை இருண்மை இவைகளை கடந்து திருநங்கைகளை கருணையோடும்
    பொறுப்போடும் தொடர்ந்து எழுத்துலகில் இயங்கி வரும் முனைவர் . கவிஞர் முனீஷ்
    கவனிக்கப்பட வேண்டியவர்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக