கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்,








கவிச்சுவை!

நூல் ஆசிரியர் : 
கவிஞர் இரா. இரவி,

மதிப்புரை : எழுத்து வேந்தர் 

இந்திரா சௌந்தர்ராஜன்,

93, வைகை வீதி, சத்யசாய் நகர், மதுரை-625 003.
பக்கம் 186.விலை ரூபாய் 120. 
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
 தியாகராய நகர்,  சென்னை-600 017.  
தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : 
vanathipathippakam@gmail.com

     நாடறிந்த நல்ல கவிஞர்களில் ஒருவர் திரு. இரா.இரவி அவர்கள்.  தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் பணியாற்றிவரும் இரவி, சுற்றுலா தரும் இன்பங்களை எல்லாம் தன் கவிதைகளில் அளிக்கவல்லவராய் இருக்கிறார்.

     உதவி என்று கேட்ட மாத்திரத்தில், ஓடோடி வந்து இன்முகத்துடன் உதவிடும் இரவியின் பாத்திரப் பண்பை  இவர் கவிதைகளிலும் காணமுடிகிறது.

     வார்த்தைகளை  மடக்கிப் போட்டு கவிதை எழுதுவோர், மத்தியிலே வாழ்க்கையை ஊடுருவிப் பார்த்து கவிதை எழுதுபவராக திரு. இரவி திகழ்வது பாராட்டுக்குரியது.

     கவிச்சுவை எனும் நூலின் கண் 78 கவிதைகள் காணக் கிடைக்கின்றன. இதில் முதல் கவிதை ‘காந்திக்கு ஒரு கடிதம்' எனும் தலைப்பில் ஆரம்பமாகின்றது. திரும்ப காந்தி பிறந்து வந்துவிடக்கூடாது எனும் கருத்தை வலியுறுத்தும்  அவரின் ஏனைய கருத்துகள் எவராலும் மறுக்க முடியாதவை.

     மொழிப்பற்றுடைய திரு. இரவி,

     ‘தமிங்கிலம் என்பது ஒருவகை நோய்
     தமிழகத்தில் விரைவாய்ப் பரவி வருகின்றது!’

என்று ஆங்கிலக்கலப்போடு பேசுவதை நைச்சியமாய் இடித்துரைக்கிறார். அதேபோல் பெண்கல்வி குறித்தும் வளமான சிந்தனைகளை தன் கவிதை வரிகளில் கொட்டி முழக்குகிறார்.

     ‘நெல்மணிகளிட்டு கொலை செய்வதை நிறுத்துங்கள்
      மாமணிகளாய் பெண்களை மதித்து வளர்த்திடுங்கள்

எனும் வரிகள் அதற்கு சாட்சி.

     ‘விழி ஈர்ப்பு விசை’’’’ எனும் தலைப்பில் காணப்படும் காதல் கவிதைகள் கவிஞரின் ரசனை மிகுந்த மனதை நமக்கு காட்டுகிறது. இதனால் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறார். ‘விழிகளில் மின்சாரம் உள்ளது’ – அதை வெளியில் எடுங்கள்’ என்கிறார். இந்த காதலை ‘மலரினும் மெல்லியது’ என்கிறார். அப்படியே முரண்பட்டு ‘மலையினும் வலியது’ என்கிறார். இரு கருத்தையும் மறுக்க நம்மாலும் முடியவில்லை.

     சமூகப் பார்வையோடு கந்துவட்டிக் கொடுமையைச் சாடி, காவிரிப் பிரச்சினையையும் நாடி, விவசாயிகளின் துன்பத்தையும் பேசி இரவியின் கவிதைகள் பன்முகங்களில் நர்த்தனமாடுகின்றன.

     அவ்வளவும் எளிய தமிழ்சொற்களில் அமைந்த கவிதைகள்! மொத்தத்தில் இந்த கவிச்சுவை ஒரு நல்ல கனியின் சுவை!

     திரு. இரவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துகள்