ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை: ப. மகேஸ்வரி, பாரதியார் பல்கலை, கோவை.
ஆயிரம் ஹைக்கூ'
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் மதிப்புரை: ப. மகேஸ்வரி,
பாரதியார் பல்கலை, கோவை.
*****
மதிப்பிற்குரிய ஹைக்கூ கவி, திரு. இரா. இரவி அவர்களுக்கு வணக்கம். தங்களின் “ஆயிரம் ஹைக்கூ” நூலுக்கு ஒரு எளிய வாசிப்பாளராக எனது
கருத்துக்களைப் பதிவிடுவதில் மகிழ்வு.
நூலின் ஆசிரியர் இரவி என்ற பெயர்கூட அவரது ஹைக்கூ அளவே அமையப்பெற்று, அவரது பெயருக்கும் அவரது விருப்பத்துக்கும் (ஹைக்கூ) பொருத்தமாகவே நிலைபெற்றிருப்பது மிகச்சிறப்பு.
மொத்தம் 20 தலைப்புகளில் 1000 ஹைக்கூக்கள். மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எவற்றையெல்லாம் கடந்து செல்கிறானோ, எதுவெல்லாம் மனிதனைக் கடக்கிறதோ, அத்தனையையும் கூர்ந்து நோக்கி புரிதலோடு படைத்திருக்கிறார் இந்த ஆயிரம் ஹைக்கூக்களை.
பேராசிரியப் பெருந்தகை இரா. மோகன் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டதில் நான் சிறப்பாகக் கருதுவது கவிஞர் இரவி அவர்களின் படைப்பாளுமையை செதுக்கிய, செதுக்கிக் கொண்டிருக்கிற மூவரைக் குறிப்பிட்டுள்ளது. ஒன்று தந்தைப் பெரியார் பகுத்தறிவை அனைவர் மனதிலும் விதைத்துச் செயல்படுத்திச் சென்றவர், இரண்டாவதாக முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் ஆசான் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் எதிர்கால இந்தியாவைக் கனவு கண்டு செயல்படுத்தியும் ஊக்கப்படுத்தியும் சென்றவர், மூன்றாவதாக முன்னிருவர் விட்டுச் சென்ற இடத்தையும் நிரப்பி, தன் சொற்களாலும், எழுத்தாலும், செயல்பாடுகளாலும் முக்கியமாக தன் சுறுசுறுப்பாலும் மாணவர்கள் / இளைஞர்கள் மட்டுமல்லாது அனைவர் மனதிலும் தாக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தி நல்ல உயர்வான மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆற்றல்மிகு ஆளுமை முனைவர் இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். மனம் நிறைய மகிழ்வு, முனைவர் இறையன்பு அவர்களின் கருத்துக்களோடு கூடிய அணிந்துரையும் அழகு, சிறப்பு.
அனைத்து கவிதைகளும் ஆழமானவை, அறிவுப்பூர்வமானவை, சிந்தனையை செதுக்குபவை, தமிழுக்கு அழகு சேர்ப்பவை, கவிஞர் இரவி தமிழ்பால் கொண்டுள்ள பற்றை பறைசாற்றுகிறது.
சிந்தனைக்கு சில :
“உடலின் முதிர்ச்சி தடுக்கும்,
உள்ளத்திற்கு முதிர்ச்சி தரும்
செம்மொழித் தமிழ்”
இன்பத்தேன் பாய்ந்தது
காதினிலே,
‘செம்மொழி அறிவிப்பு’
“தமிழருக்குப் புரியவில்லை
அந்நியருக்குப் புரிந்தது
முதல் மொழி தமிழ்”
கவிஞரின் சமூக, முற்போக்கு சிந்தனை, மனிதநேயத்துடனான வரிகள் :
“வல்லரசாவது இருக்கட்டும்,
பட்டினி பஞ்சமில்லா
நல்லரசாகட்டும்”
“காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி”
“திருந்தாத மக்கள்
அமோக வசூல்
சாமியார் தரிசனம்”
“குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம்”
“நிரபராதிக்கும் வழங்கிய
வரலாறு உண்டு
தூக்கு தண்டனை”
“வாழ்வில்
இருள் நீக்கும்
ஒளியாக நண்பர்கள்
அரசியலையும் விட்டு வைக்கவில்லை கவிஞர் ...
“அன்று மக்களுக்காக
இன்று
தன் மக்களுக்காக”
“எறும்பு நுழைந்த
யானைக் காதாய்
அரசியல்வாதிகளால் நாடு”
“நல்லவருக்குப் பஞ்சம்
குறைந்தபட்ச கெட்டவருக்கு
வாக்களிப்பு”
“இருந்தால் வருந்துவார்
லஞ்சப் பணத்தில்
காந்தி படம்”
இயற்கை நேசனாக சில வரிகள் :
“நட்சத்திரக் கவிஞர்கள்
நிலவின் தலைமையில்
வானில் கவியரங்கம்”
“வானிலிருந்து பூமிக்கு
திரவத் தங்கம்
மழை”
“காடுகளில் அறுவடை
மரங்களின் கொலை
பொய்த்தது மழை”
“வரிசை மாறாமல்
பயணம்
எறும்புகள்”
“விழித்த
விதை
விருட்சம்”
பெண்ணியம் சார்ந்த பதிவுகளீன் வரிகள் :
“எரிந்தும் எரியாத
துருவ நட்சத்திரம்
கல்பனா சாவ்லா”
“மலர் சூட
மலருக்குத்
தடை”
“பெண்ணுரிமையின்
முதல்குரல்
கண்ணகி”
சிந்திக்க வைக்கும் சில வரிகள் :
“தரிசு நிலம்
விளைந்தது
உழவன் வியர்வை”
“போட்டி போட்டு
பண்பாடு சிதைப்பு
ஊடகங்கள்”
“மயிலிறகுத் தீண்டலென
மனதைத் தீண்டுவதே
நல்ல கவிதை”
என்பதற்கிணங்க அனைத்துக் கவிதைகளும் மனதைத் தீண்டின!!!
ஆற்றலுள்ள கவிதைகளை வழங்கியமைக்கு நன்றிகள்!h
என்றும் அன்புடன் / வாசகி
மகேஸ்வரி.வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@
கருத்துகள்
கருத்துரையிடுக