அகலாது ; அணுகாது! நூல் ஆசிரியர்கள் : கவிஞர் முனைவர் ஆ. மணிவண்னன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
அகலாது ; அணுகாது!

நூல் ஆசிரியர்
கள் : கவிஞர் முனைவர் ஆ. மணிவண்னன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.  

வெளியீடு : 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017.
 பக்கம் : ரூ.156, விலை : ரூ. 100.
*******
      நூலாசிரியர் கவிஞர் முனைவர் அ. மணிவண்ணன் அவர்கள் காவல்துறையில் உதவி ஆணையர் பணியில் இருந்தபோதும் இலக்கிய நண்பர்கள் காவல்துறை தொடர்பாக உதவிகள் வேண்டினால் தட்டாமல் உதவிடும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர். நல்ல கவிஞர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்பதால் இவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு மாநாடு போல கூட்டம் கூடி விடும்.

      புகழ்பெற்ற வானதி பதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு 156 பக்கங்கள் கொண்ட நூலை குறைந்த விலையில் ரூ.100க்கு வழங்கி உள்ளனர். பாராட்டுக்கள்.

      நூலை சமர்ப்பணம் செய்ததில் அவரது பறவை நேசம் உணர முடிந்தது. ’’கடந்த 02.02.2018ஆம் தேதி மதுரை அருள்மிடு மீனாட்சியம்மன் கோவில் வீர வசந்தராய மண்டப தீ விபத்தில் உயிர்துறந்த புறாக்களுக்கு!’’ நூலாசிரியய்ர் சில ஆண்டுகள் மீனாட்சியம்மன் கோயிலில் ஆய்வாளராகப் பணியாற்றியவர். கோபுரத்தில் வாழும் புறாக்களைப் பற்றி அறிந்தவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னைத் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை அவர்களும், எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் அணிந்துரை வழங்கி சிறப்பித்து உள்ளனர்.

      என் பெயர் இல்லை என்றால் விழாவிற்கு வரமாட்டேன் என்று சொல்லும் கவிஞர்கள் உண்டு. 10.03.2019 அன்று மணியம்மை பள்ளியில் நடந்த தமிழ் மூதறிஞர் இரா. இளங்குமரனாரின் நூல்கள் அறிமுகவிழாவிற்கு பார்வையாளராக வந்து அமர்ந்து ரசித்து சென்றார் நூலாசிரியர். உதவி ஆணையர் பதவியை அவர் எப்போதும் தலையில் வைத்துக் கொள்வதே இல்லை. எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் பண்பாளர்.

      காவல்துறையில் உயர்பதவியில் இருப்பதால் நினைத்ததை எல்லாம் எழுதிவிட முடியாது. அதனை உணர்த்திடும் முத்தாய்ப்பான முதல் கவிதை இதோ!

      செதுக்கப்பட்டவன் நான்! 
      காண்பனவற்றையேயெல்லாம்
      எழுத்தில் கொண்டு வரும் 
      ஆற்றல் உண்டு 
      ஆனால்
      நான் காவல்துறையின் 
      ஓர் அங்கம் 
      நினைத்ததை
      யெல்லாம் 
      எழுத்தில் கொண்டு வரக்கூடாது
      நான் வாயுள்ள ஊமைத்துரை 
      நானே எனது
      எழுத்துக்களுக்கு கடிவாளம் போட வேண்டும்.

சின்னச் சின்ன ஆசை அல்ல, நூலாசிரியர் கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் அவர்களுக்கு பெரிய ஆசை உள்ளது. பாருங்கள்.

      என் முப்பாட்டான் 
      கணியன் பூங்குன்றனார்
      வழியில் 
      யாதும் ஊரே 
      யாவருக் கேளீரென்ற
      எல்லைகளற்ற 
      ஓர் உலகை 
      உருவாக்க ஆசை.
நல்ல ஆசை தான். எல்லைச் சண்டையின் காரணமாக பல நாடுகளில் இராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ் அமைந்தால் இராணுவச் செலவு, மனித உயிர்பலி இருக்காது.

ரசனையின் முரண்பாடு!

அஜந்தா, எல்லோரா 
சித்தன்ன வாசல் ஒவியங்கள்
      தோற்றன என 
மகள்வழிப் பேத்தி 
எங்கள்
      வீட்டுச் சுவற்றில் 
கிறுக்கிய ஓவியங்களைப்
      பாராட்டினேன் 
அதைப் பார்த்த 
எங்க வீட்டுக்கிழத்தி 
உங்கள் பேத்தியை 
அவங்க 
புது சொந்த
      வீட்டில் 
கிறுக்கச் சொல்லுங்கள் 
என்று ஆணையிட்டாள்.

பேத்தியின் ஓவியம் கண்டு தாத்தா பெருமை அடைவதும், கிறுக்கியதால் வண்ணம் தீட்ட வேண்டிய செலவு வந்து விட்டதே என பாட்டி கடிந்து கொள்வதும் வீடுகளில் நடக்கும் பாசி விளையாட்டை கண்களில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார், பாராட்டுக்கள்.
அரசுப்பணி 
ஓய்வுக்குப் பின்?

அரசுப்பணி 
ஓய்வுக்குப் பின்னர் 
என் அனுபவத்தினால்
      உணர்வற்ற தமிழரை 
உணர்வூட்டுவேன்
      நிறைய உணர்வால் 
கொதிக்கும் தமிழனா
      ஆற்றுப்படுத்துவேன் 
இரண்டும் என் கடமை!

ஓய்வுக்குப்பின் என்ன செய்வேன் என்று சொல்லிய விதம் சிறப்பு. மிகவும் தேவையான ஒன்று உணர்வற்று ஏனோ தானோ என்று வாழும் சோம்பேறித் தமிழனுக்கு உணர்வூட்டுவேன். சில தமிழர் கோபத்தில் கூச்சலிடுகின்றனர். அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டியதும் தேவை தான். இரண்டுமே சமுதாயப்பணி நற்பணி.

தொண்டனின் எதிர்பார்ப்பு!

என்னைச் 
சுயமரியாதையாக நடத்துகின்ற
தலைவன் தேவை 
என் கருத்துக்களை
செவிமடுக்கின்ற 
தலைவன் தேவை
எந்த நிலையிலும் 
என்னை ஏமாற்றாத
தலைவன் தேவை.

அரசியலில் நல்ல தலைவர்கள் இன்று இல்லை. அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். மக்களாட்சியில் மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிப்பவராக செவி மடுப்பவராக மதிப்பவராக நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் போல தலைவருக்கு உரிய இலக்கணத்தை விளக்கி உள்ளார்.

தமிழினம்!

இரண்டாகப் பிரிந்து 
நான்காகப் பிரிந்து 
நாற்பதாக மாறி
      தனித்தனி மனிதனாய் /
தவிக்கிறது இன்று.
உண்மை தான். தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. பிரிந்து உள்ளனர். உலகத் தமிழர்கள் யாவரும் ஓரணியில் திரள வேண்டும் என்ற ஆசையை உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.

அறுவடை!

நல்ல முட்டாள்கள் உள்ளவரை

      களவாணி அறிவாளிகளுக்கு 
நல்ல அறுவடை!

இந்தக் கவிதையை இனி நடைபெற உள்ள தேர்தலுக்கும் பொருத்திப் பார்க்கலாம். பணம் கொடுத்து வாக்கை வாங்கிவிட்டு பின் ஐந்து வருடங்கள் வாக்களித்தவன். தலையில் மிளகாய அரைக்கும் அவலத்தை நினைத்துப் பார்த்தேன். உலக அளவில் மக்களாட்சி நடைபெறும் பெரிய நாடு என்று பெருமைக்கு களங்கம் கற்பித்து விட்டனர். வாக்களிக்க பணம் வழங்கி, இப்படி பல சிந்தனைகளை விதைத்தது ஒரு கவிதை.

நட்பில் ... 
நான் கர்ணனாய் 
வாழ விரும்புகின்றேன்.

வெறும் கவிதை மட்டுமல்ல உண்மை தான் நூலாசிரியர் அவர்களிடம் யார் உதவி கேட்டாலும் தட்டாமல் உதவிடுவார். ஆனால் அது சட்டத்திற்கு உட்பட்ட உதவியாக இருக்க வேண்டும். அதனால் தான் அடுத்த வரியில் சொல்கிறார்.

அதனால் எனக்கு உதவுபவர்களை 
துரியோதனனாக
      யாரும் நினைக்க வேண்டாம்.

காக்கிச் சட்டைக்குள் இலக்கிய இதயம், இளகிய இதயம் அகலாது, அணுகாது என்ற கவிதை நூலின் மூலம் வாசகர்களின் உள்ளத்தில் அகலாது இடம்பெற்றுள்ளார். எனவே இவரை துன்பம் எப்போதும் அணுகாது.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்