புதிய உறவு-நூல் உறவு: ---------------------------------------- நூல் விமர்சனம்! ---------------------------------------- நூல் பெயர்: "ஹைக்கூ 500" நூல் ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை -"நெருப்பலைப் பாவலர் ", இராம இளங்கோவன்;பெங்களூரு.





புதிய உறவு-நூல் உறவு:
----------------------------------------
நூல் விமர்சனம்!
----------------------------------------
நூல் பெயர்: "ஹைக்கூ  500"

நூல் ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி.

நூல் மதிப்புரை -"நெருப்பலைப் பாவலர் ", இராம இளங்கோவன்;பெங்களூரு.

வெளியீடு: வானதி பதிப்பகம்,                               
#23, தியாகராயநகர்,                               
சென்னை-600 017.
பக்கங்கள்: 132.
விலை       : ரூ.100.
தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com



                    பொதுவாக மதுரை என்றாலே முச்சங்கம் கண்ட பாண்டிய மன்னரும், மீனாட்சி அம்மன் கோவிலும், நாயக்கர் மகாலும், மல்லிகை மலரும் அனைவருக்கும் நினைவூறும். இதனால், மதுரையை நீக்கிவிட்டு தமிழகத்தின் வரை படத்தை வரைந்துவிட முடியாது. இதேபோல், இன்று மதுரை என்றாலே மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தையும், இதில் பேராசிரியராகப் பணியாற்றியப் பேராசிரியரும் முனைவருமான தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களையும், அய்க்குத் திலகம் இரா. இரவியையும் நீக்கிவிட்டு,  மதுரை இலக்கிய வரலாற்றை எழுதிவிட இயலாது.

             அவ்வண்ணமே இரா. இரவியின் நூலா? தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் அணிந்துரை இல்லாமல் நூல் வெளிவராது என்று கண்ணை இறுகக் கட்டிக்கொண்டு ஐயமின்றி பகரலாம். அந்தளவு வாயின் இரு உதடுகளாய் இணைந்திருப்பவர்கள்.  இவ்வடிப்படையில் இந்த அய்க்கு 500  நூலிலும் இணைந்திருப்பதால் வியப்பில்லை. இந்நூலில் இன்னொருவரும் இணைந்துள்ளார். அவர், இந்நூல் எழுதுவதற்கு கரணியமாக விளங்குகிறார். அவர்தான்.... பதுச்சேரியைக் கலக்கிக் கொண்டிருக்கும் கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்.

                இவர், அய்க்கு நூற்றாண்டை முன்னிட்டு பட அய்க்குப் போட்டி நடத்தியவர். இவர் அறிவித்த புகைப்படங்களுக்கு ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து ஐந்து அய்க்கு எழுதியதால் 100ஓவியங்களுக்கு 500 அய்க்கு வரைந்து ஒளி அய்க்கூக்களை நூலாக்கி வழங்கியுள்ளார். 500அய்க்குக் கவிதை எழுத வழிவகுத்தவரை மறவாமல், "நன்றி மறப்பது நன்றன்று. " என்று நன்றியுடன் அணிந்துரை வழங்க பணித்துள்ள பெருந்தன்மை உடையவராகத் திகைகிறார் நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி அவர்கள்.

              நூலாசிரியரின் இந்நூல் பத்தொன்பதாவது நூலாக அய்க்கு நூற்றாண்டை நினைவூட்டும் ஆவணமாக வெளிவந்துள்ளது. பாராட்டுக்குரியதாகும். இனி நூலுக்குள் நுழைவோம்;படத்துடன் ஒரு சில  அய்க்கூக்களைச் சுவைப்போம் வாருங்கள்.புதியதாய் முளை விட்டிருக்கும் தளிருக்கு கைகளால் நீர் வார்க்கும் படத்திற்கு எழுதியதில்,

               "நீர்த்துளி
                 உயிர்த்துளி
                 செடிகளுக்கு.

           என்று நீர்த்துளியின் அவசியத்தை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். அடுத்து, பார்ப்போர் இரும்பூழ்தெய்தும் வகையில் காட்டு மரங்களை வைத்து பெண்ணின் முகத்தைத் தீட்டியுள்ள ஓவியத்திற்கு மிக பொருத்தமாக,

                 " மழைக்கான
                  வரவேற்புத் தோரணங்கள்
                   மரங்கள்."  -

என்றவர், காளை மாடுகள் படைபோல் திரண்டுவரும் காட்சிக்கு,

                  "காளைகள் சேர்ந்து வந்தால்
                   கிட்டவர நடுங்கும்
                   புலி.

      -என்று சிறுவயதில் கற்றப் பள்ளி பாடத்தை நினைவூட்டும் அய்க்கூவாக மிளிர்கிறது. தொடர்ந்து, அக்காலத்தில் செயற்கை உரமின்றி இயற்கை உரத்தைக் கொண்டு வயல் பயிரிடப்பட்டது. அதற்காக ஆடு, மாடுகள், வாத்துகள் வயலில் விட்டு கிடை மடக்குவது வழக்கம். இந்நிலை இன்று இல்லாததால் உணவுப் பொருட்கள் நஞ்சாகிப் போன அவலத்தை நினைவூட்டும் பாங்கில்,

                   " இன்று இல்லை
                      ஆடுகள் கிடை
                      போடும் பழக்கம். " 

என்ற வரிகள் நம்மை பெருமூச்சு விட வைக்கிறது. தொடர்ந்து வேறொரு அய்க்கூவில், கர்நாடிக்  என்ற  கருநாடக இசையும்,பர்தநாட்டியா என்ற பரதநாட்டியமும்,தோல் கருவிகள் பறை உட்பட தமிழ்க் கலையே! என்றும், உலகின் முதலிசையே தமிழிசை  என்றும்,  பறை முழங்கும் பெண்கள் உள்ள படத்திற்கு.....

                   "தரணியில் 
                   முதலில்
                    தமிழிசையே! "

       என்று ஆணித்தரமாக வலியுறுத்தி இருப்பது மனத்திற்கு இதமாக உள்ளது. பாராட்டுக்கள். வேறு ஒரு படத்தில், வெள்ளத்தில் தோள்மேல் தன் குழந்தையையும், அந்தக் குழந்தை தன் தந்தையின் தலையை இரு கைகளால் பற்றிக் கொண்டிருக்க,  நாய்க்குட்டியை அந்தத் தந்தையின் இருகைகளும் இறுக்கமாக பிடுத்துக் கொண்டிருக்கும். தன் குழந்தையை விட நாயை இறுக்கமாக பிடித்து, எல்லா உயிரும் விலை மதிப்பற்றது. எனும் உணர்வை வலியறுத்துவதற்கு ஏற்ப,

                       "மகளுக்கு இணையாக
                        நாயை நேசிக்கும்
                        உயர்ந்த உள்ளம்."
என்கிறார் கவிஞர். வேறொரு ஈரம் கசிந்து நெஞ்சைப் பிழியும் படமாக, தாய் ஆட்டின் மடியில் குட்டி ஆடு பாலருந்துவதை மண்டியிட்டபடி பசியோடு பார்க்கும் குழந்தையை சித்தரிப்பதாகும். இப்படத்திற்கு ஏற்ற ஐந்து அய்க்கூக்களில்,
                              "ஆட்டுக்குக் கூட
                                பாலூட்ட அம்மா உள்ளது
                                குழந்தைக்கு? "

           என்று கேட்டு துயரில் நம்மை மூழ்கடிக்கிறார் நூலாசிரியர். கவிஞரின் இரக்கக் குணத்தை எண்ணி போற்றுகிறேன்.

                                  "உழவன் வாழ்வில்
                                    ஏற்றம் வந்தாலே
                                    உண்மையான வளர்ச்சி."

              என்கிறார். ஆனால், விவசாயி கோவணமும் பறிக்கப்பட்ட நிலையில், மழையின்றி, நிலமின்றி, விதையின்றி, இன்னும் எத்தனையோ இன்றி இன்றி என்ற நிலையில், தற்கொலைக்கு தள்ளப்படுகிறான் என்பதே வெளிப்படையான  உண்மையாகும். அரசியலார் உணர வேண்டும். உணர்ந்து விவசாயம் உயிர்க்க உதவ வேண்டும் என்பதே நம்முடைய ஏக்கமாகும்.
                      குழந்தையோடு  காளையும் அன்போடு கொம்பால் குத்தாமல், மிதிக்காமல் விளையாடும் படக் காட்சிக்கேற்ப,

                         "பாருங்கள்
                           அன்பிற்கு அடிபணியும்
                            அற்புதக் காளை."

          என்று காளையைப் பாராட்டி அன்பை ஊட்டியுள்ளார். குடிசைக்கு வெளியே மண்ணடுப்பில் உலை கொதிக்கிறது. ஆனால், ஊருக்கே உணவு தந்த விவசாயியின் வீட்டில் அரிசி இல்லை என்பதை,

                              "கொதிக்கிறது உலை
                                போட அரிசி இல்லை
                                 உழவனின் நிலை! "

                என்று வேதனைப் படுகிறார். இதேபோல், நெல்கட்டுத் தூக்கிவரும் விவசாயிகளின் படத்தைப் பார்த்து,

                               "இன்னும்
                                விடியவில்லை
                                விவசாயி வாழ்க்கை."

                 என்கிறார்   உண்மைதான். விவசாயி விடியலுக்காய் நாமும் போராடுவோம். 'கற்றல் நன்றே கற்றல் நன்றே;பிச்சை புகினும் கற்றல் நன்றே! 'என்பதற்கேற்ப, மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து, மேல் சட்டைக்கூட இல்லாமல் ஒரு ஏழைச் சிறுவன் பாட நூலை வாசிப்பது போன்ற வரை படத்திற்கு ஏற்ப,

                                  "வறுமையிலும் செம்மை
                                   பசியிலும் பற்று
                                    கல்வியில். "

               என்று அருமையான ஒரு அய்க்குவை வடித்திருப்பது மிக சிறப்பு. பாராட்டுகள்!  இப்படி நூல் முழுக்க, பக்கந்தோறும் சமுதாயக் கண்ணோட்டத்தோடு அழகாக, அருமையாக, ஆழமாக சிலையைச் செதுக்குதல்போல், செப்பமாக செதுக்கியுள்ளார். வெறும் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, கண்ணுக்கு குளிர்ச்சியாக படங்களுடன் கவிதையும் இணைந்த இந்நூல் புது மகிழ்வை அளிக்கும். ஆகவே, அனைவரும் வாங்கி வாசித்து பயனடையுங்கள். நூலாசிரியர்க்கு  வாழ்த்துகள்!

     

கருத்துகள்