கவிச்சுவை! கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
கவிச்சுவை!
கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு
கவிஞரின் கவிதைகள் காலக் கண்ணாடி
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,
மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்
ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
அருமைச் சகோதரர் இரவி அவர்கள் உலகறிந்த பெருமகன். தன் கணினி ஆளுமைத் திறனால் உலகம் முழுமையும் தம்கவிதையையும் செயற்பாடுகளையும் தகவல் தரும் சாதனையாளர். மதுரையில் எந்த நிகழ்ச்சியானலும் முகநூல் புலனத்தில் வலம்வரச்செய்யும் மனிதநேய மாண்பாளர். என்னுடைய உலகப் பயணத்தில் இலண்டன் சென்றிருந்த போது இதழாளர்கள் ஐ.தி.சம்பந்தமும்,பொன் பாலசுந்தரமும் இரவி அவர்களின் நட்பையும் தொண்டுணர்வையும் பெருமைபடக் கூறியபோது மகிழ்ந்தேன். ஆனால் அவர்அரசுப் பணியில் சுற்றலாத் துறையில் உள்ளதால் இது நாள்வரை வெளிநாடு செல்லவில்லை. பலமுறை நம் பன்னாட்டுத் தமிழுறவுமன்ற மாநாடுகளுக்கு அழைத்துள்ளேன். அவர் பங்கேற்க இயலா நிலை,
இன்றைய ஐக்கூ கவிஞர்களில் தலையாய கவிஞர் நம் கவிஞர பெருமகன். இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகத்தின்பரிசை இரவி அவர்கள் பெற்றுள்ளார். இன்னும் ஏராளமான் பரிசுகளைப் பெற்றுள்ள பெருமைக்குரியவர் நம் இரவி.
நூலிற்கு மதிப்புரை எழுதுவதில் இரவி தலையானவர். அவரிடம் வழங்கும் நூல்களுக்கு அவர் வழங்கியுள்ள மதிப்புரைகளையேதனிநூலாக வெளியிட்டு எழுத்தாளர்களுக்கு பெருமை சேர்க்கும் பேருள்ளம். அதை இணைய தளத்திலும் பதிவிட்டுள்ளார். அவரின்இணையதள முகநூல் முகவரியைக் காணுங்கள்.
இத்தனை முகவரியிலும் இரவியின் இலக்கியப் பங்களிப்பு மகத்தானது. வளர்க இரவியின் கணினித் தொண்டு.
கவிஞர் இரவி உரைநடை கவிதை என 19 நூல்களை யாத்துள்ள பெருமைக்குரியவர். மதுரை மாநகரில் எந்த அமைப்பாகஇருந்தாலும் தன்னலம் கருதாது தொண்டாற்றும் செயல் மறவர். எல்லாவற்றிற்க்கும் மேலாக தந்தை பெரியார் கொள்கையைப்பின்பற்றும் மிகச் சிறந்த பகுத்தறிவாளர்.
அண்மையில் யான் மதுரை சென்றிருந்த போது முனிச்சாலையில் 50 ஆண்டுகளாகப் பருத்திப்பால் விற்பனை செய்யும் ஒருகோனார் கடையில் எனக்கு ஒரு பால் வாங்கிக் கொடுத்து அந்தப் பருத்திப் பால் கடையையும் அறிமுகப்படுத்தி எனக்கு ஒருகவிச்சுவை நூலையும் தந்தார். இது அவரது 18 ஆம் படைப்பு. கவிஞர் தொடாத துறை என்று எண்ணும் அளவிற்கு கவிதைப்பதிவுகளை தந்துள்ளார் நம் கவிஞர்.
அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் பேரன்பிற்கு உரியவர். தமிழ்ப்பணியில் கவிஞரின் படைப்புகள் தொடர்ந்துவெளியாகி வருகிறது. தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் இரவியின் படைப்புகள் வெளிவருகிறது.
அறிஞர் பெருமகன் முனைவர் இரா.மோகன் அவர்கள் “நூற்றுக்கு நூறு மெய்யுரையாகும்“ என இந் நூலைக் கூறியுள்ளார்.முனைவர் அ.கோவிந்தராசு அவர்கள் “குறள் வெண்துறை யாப்பில்” இந்நூலை வடித்துள்ளார் என சான்றளிக்கிறார்.
வித்தகக் கவிஞர் பா.விசய் அவர்கள் நாம் அனைவரும் அனுபவித்த ஒன்றை தம் வாழ்த்துரையில் தருகிறார்.
“கவிஞர் இரவி அவர்களுடைய அன்பும் நட்பும் என்றும் எல்லோருடைய இதயத்திலும் நின்று நிலைத்து நீடித்து நல்லுறவையும்நல்லுணர்வையும் நாற்றங்காலாய் பதியவிட்டுக் கொண்டிருக்கும் கிடைத்தற்கரிய வரம்”
தம் நூலில் பெரியார் சிந்தையாளர் நன்னன், கவிஞர் கவிக்கோ அப்துல் இரகுமான், கணினி அறிஞர் சுடிபன் காகின்சு ஆகியோர்பற்றி நெஞ்சில் நிலக்க வைத்துள்ளார்.
இன்றைய தமிழ் மொழியின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர். அதுவும் பாமரனும் புரியும் வண்ணம் தம்நடையில் வழங்குறார்.
”உணவில் கலப்படம் உடலுக்குக் கேடுதரும் உன்னத மொழியில் கலப்படம்மொழிக்குக் கேடு ” (பக்கம் 49)
நம் மறையாம் திருக்குறளை அனைவரும் ஏற்கும் அற்புதம் எனும் தலைப்பில் திருக்குறளை தூக்கிப் பிடிக்கிறார்.
சினம் அடக்கி வாழ்வில் சிறக்க வைக்கும் சிந்திக்கவைத்து ஒளி ஏற்றும்திருக்குறள் (பக்கம் 69)
ஓலைச்சுவடி முதல் அலைபேசித் திரை வரை ஓங்கி உரைக்கும் ஒலிக்கும் ஒப்பற்ற திருக்குறள் (பக்கம் 71)
தம் இணையதளங்களில் திருக்குறள் கருத்துக்களை பதிய வைத்து அறிய தொண்டாற்றும் திருக்குறள் தொண்டர் நம் கவிஞர்பெருமகன்.
பெண்களைப் பற்றி ஒரு அற்புதமான பதிவைத் தருகிறார் நம் கவிஞர். வள்ளுவப் பேராசானின்
அறிதொறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு (1110)
என்ற குறளுக்கு விளக்கமாக ஒரு கவி தருகிறார்.
”புரிந்துகொள்ள முடியாத புதிர் பெண் புரிந்தது போலத் தெரியும் புரியாத பெண் (பக்கம் 76)
அன்னையின் பெருமையை ஒரே வரியில் கூறுகிறார் கவிஞர்.
சுமையையும் சுகமாகக் கருதுபவள் அன்னை. (பக்கம் 91)
அன்னை எந்தக் காலத்திலும் தம் மக்களின் துயரங்களைத் தாங்கும் பல குடும்பங்களைக் காண்கிறோம். பிறக்கும் சுமைமட்டுமல்ல பிறவிச் சுமையையும் தாங்கும் தாய்மார்கள்.
மண்ணில் வாழும் தேவதை என குழந்தைகளைப் பற்றி அரியதொரு கவிதையைத் தந்துள்ளார் கவிஞர்.
கள்ளம் கபடம் இல்லாதது என்றும் கேட்டிட எவர்க்கும் இனிமை மிக்கது (பக்கம் 92)
இந்தக் கவிதை வள்ளுவப் பேராசானின்
குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் (66)
என்ற திருக்குறள் வரிகளை நமக்கு உண்ர்த்தும் வண்ணம் கூறியுள்ளார் நம் கவிஞர்.
இன்று நம்மோர் மத்தியில் எந்த நிலையிலும் பொறாமை குணம் மேலோங்கி உள்ளது, ஒருவர் உயர்ந்தால் நாமும் பின்பற்றிஉயர வேண்டும் என்ற மனப்பக்குவம் இருக்க வேண்டும். உயர்ந்தவரும் வழிகாட்டியாக வாழ வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சிபூத்திருக்கும் இக்கருத்தை நம் கவிஞர் மிக அழகாக “மனத்திற்கிட்ட கட்டளைகள்” எனும் தலைப்பில் வடித்துள்ளார்.
பொறாமைப்படாத நல் நெஞ்சம் வேண்டும் பூத்திட்ட பூவாக மலர்ந்த உள்ளம் வேண்டும் (பக்கம் 103)
காதலைப் பற்றிப் பாடாமல் இருப்பாரா கவிஞர். அழகாக உறுதியாக நிலையாக காதலைப் பற்றி எழுத்தில் செதுக்கியுள்ளார்.மலையினும் வலியது காதல் எனும் தலைப்பில் பாடிய கவிதை
மலரினும் மெல்லியது காதல் ஆனால் மலையினும் வலியதுகாதல்! (பக்கம் 112)
பகுத்தறிவுக் கவிஞர் இரவி மூடவழக்கங்களை என்றும் கண்டிப்பவர். தந்தை பெரியாரின் கொள்கை மறவர். பகுத்தறிவு கமலவிஞ்ஞானம் தழைக்க இரவியின் கவிதை மூடப்பண்டாரங்களை சிந்திக்க வைக்கிறது.
யாகம் வளர்ப்பதால் வருவதில்லை மழை யாவரும் மரம் வளர்த்தால் வரும்மழை (பக்கம் 127)
தமிழர்களின் முல்லை நில மக்களின் ஏறு தழுவதலை தடை செய்த மத்திய மாநில அரசுகளைக் சென்னை மெரினாக்கடற்கரை தொடங்கி கண்டித்து தமிழகமெங்கும் புரட்சி வெடித்தது. காலக் கண்ணாடியாம் நம் கவிஞர் மாணவர்களின் ஊக்கத்தைமிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
மிரண்டது டெல்லி பிறந்தது சட்டவழி மன்றத்தில் சட்டம் இயற்றிஅனுப்பினார். (பக்கம் 162)
கவிஞர் இரவியின் கவிதைக்கள் காலக் கண்ணாடியாக நம் வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. பகுத்தறிவுக் கனல் கனன்றுகொண்டே உள்ளது. மானிட வாழ்வின் சிறப்பை அழகொளிரத் தருகிறது. உறவுகளின் பெருமையைப் பறைசாற்றுகிறது.
கவிஞர் பெருமகன் மென்மேலும் நூல்கள் யாத்து தொண்டறம் தொடர நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக