வென்று காட்டலாம் வா!
நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
கவி ஓவியா வெளியீடு, 68/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011. பக்கம் : 80, விலை : ரூ.100
******
நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ‘கவிஓவியா’ என்ற மாத இதழின் ஆசிரியர். இதழில் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். இதழில் படித்திருந்தாலும் மொத்தமாக நூலில் படித்ததில் மகிழ்ச்சி. நூலாசிரியர் சென்னையில் வாழ்ந்தாலும் பிறந்த ஊரான மயிலாடுதுறையை பெயரோடு இணைத்துக் கொண்டவர். பிறந்தமண் பற்று மிக்கவர். எல்லோருக்குமே பிறந்தமண் பற்று இருக்க வேண்டும்.
தன்னம்பிக்கை குறித்து, திருக்குறள் உரை போலவே, வந்தது, வருகின்றது, வரும் – முக்காலமும் தேவையான ஒன்று திருக்குறள் உரையும், தன்னம்பிக்கைக் கருத்துக்களும். ஆங்கிலத்திலும் பல நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும்ம் நமது தாய்மொழியான தமிழ்மொழியில் இருந்தால் படிப்பது இனிது, உள்வாங்குவதும் எளிது.
சிற்றிதழ்களின் புரவலர் கவசசுடர் கார்முகிலோன் அணிந்துரை நல்கி உள்ளார். நூல்ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ஊருக்கு உபதேசம் என்று இல்லாமல் தன்னம்பிக்கையுடன் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். அதனால் அவரது தன்னம்பிக்கைக் கட்டுரைகள் உயிர்ப்புடன் உள்ளன. படிக்கும் வாசகர் உள்ளத்தில் தன்னம்பிக்கை விதை விதைக்கின்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுரை மலரும் குறிஞ்சி மலர். இந்த நூல் எனும் மலரில் 12 கட்டுரைகள் உள்ளன.
முதல் கட்டுரையின் தலைப்பு ‘உன்னால் முடியும்’. “உன்னால் முடியாது என்று சொல்பவர்கள் எதிரில் அதைச் செய்து காட்டுவது தான் ... வெற்றி!” – வால்டேர். இந்த வைர வரிகளுடன் கட்டுரையை தொடங்கி உள்ளார். ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அறிஞர்களின் தன்னம்பிக்கை பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நல்ல யுத்தி. பொன்மொழியைப் படத்துடன் கட்டுரையைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளன.
காலத்தை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வதில். ஒருவரது வெற்றி அடங்கியிருக்கிறது – தந்தை பெரியார்.
உண்மை தான். காலம் பொன் போன்றது. அல்ல பொன்னை விட மேலானது, பொன் கூட பணம் கொடுத்தால் பெற்று விடலாம். இழந்த நேரத்தை எதைக் கொடுத்தும் பெற முடியாது. அப்படிப்பட்ட நேரத்தை அருமையை நன்கு உணர்த்தி உள்ளார்.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். உழும்போது ஊர்வழியே போய்விட்டு அறுக்கும் போது அரிவாளோடு வந்தானாம்! அதுபோல பலர் உழைக்காமலே இருந்து விட்டு திட்டமிடாமலெ இருந்து விட்டு எனக்கு அதிர்ட்டம் இல்லை, தலைவிதி என்று புலம்பி வருகின்றனர். சோம்பேறிகளை சுறுசுறுப்பாளர்கள் ஆக்கிட உதவிடும் நூல் இது.
நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு!
உன் இயல்பில் இரு! உன் போக்கில் போ! உன் அடிமனத்தின் குரலைக் கேள்! – ஜென்.
பொருத்தமான இடங்களில் ஜென் பொன்மொழிகளின் கதைகள் பயன்படுத்தி உள்ளார்.
எல்லோருக்கும் உள்மனத்தின் குரல் உண்டு. அதனை எல்லோரும் உற்றுக் கேட்பதே இல்லை. ஒரு சிலர் மட்டுமே உற்றுக் கேட்கின்றனர்.
‘எந்த ஒரு செயலையும் விரும்பி செய்தால் வெற்றி கிட்டும். வேண்டாவெறுப்பாக செய்தால் கிட்டாது வெற்றி’ என்பதை விளக்கி உள்ளார்.
“ஒரு குறிக்கோளை வகுத்துக் கொள். அதைப்பற்றியே சிந்தனை செய். அதனையே உன் வாழ்வாக கருதிக்கொள். அது பற்றி கனவு காண். அதனுள்ளே வாழ், உனது நாடி, நரம்பு, புத்தி மற்றும் உடலின் ஒவ்வொரு பாகத்திலும், அந்தவொரு குறிக்கோள் மட்டுமே நிரம்பியிருக்கட்டும். மற்ற எண்ணங்களை தவிர்த்திடு, இதுவே வெற்றிக்கான வழி!”
இந்த வைர வரிகளை இன்றைய இளையதலைமுறையினர் கடைபிடித்து நடந்தால், சாதிக்கலாம், வெற்றி பெறலாம். கல்வெட்டுப் போல மனதில் புரிந்து வைத்துக் கொண்டு வாழ்வில் நடந்தால் வாழ்க்கை சிறக்கும். இதுபோன்ற பல வைர வரிகள் நூல் முழுவதும் நிரம்பி உள்ளன. ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல். படித்து முடித்தபின் நமக்கு ஒரு தெம்பு தரும் நல்ல நூல். தாழ்வு மனப்பான்மையை தகர்த்து ஏறிந்து தன்னம்பிக்கை விதைக்கும் விதை நூல் இது.
“உங்களுக்காக இன்னொருவர் வேலை செய்யலாம் உங்களுக்காக வேறொருவர் சிந்திப்பதில்லை” என்று க்ளெமெண்ட் ஸ்டோன் என்ற அறிஞர் கூறியிருக்கிறார்.
நமக்காக நாம் தான் சிந்திக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
விவேகானந்தர் சொல்வார் நீ என்னவாக வேண்டுமென்று விரும்புகிறாயோ, அதுவாகவே நீ ஆகின்றாய் என்று என்னவாக வேண்டும் சிந்தியுங்கள், கனவு காணுங்கள் திட்டமிடுங்கள், செயல்படுத்துங்கள் வெற்றி பெறலாம் என்பதை கட்டுரைகளின் மூலம் நன்கு விதைத்து உள்ளார்.
“அதிகமாக கோபப்படுபவர்களின் ஆயுள் குறையும்” என்று விஞ்ஞானம் சொல்கிறது. மின்சாரத்தில் கை வைத்தால் என்னாகும்? யோசித்துப் பாருங்கள், அதிர்வும் ஆபத்தும் நமக்குத் தான். அது போலவே நாம் உண்டாக்கி கொள்கிற கோபமும் நம் வாழ்க்கையை சிதறடித்து நாசமாக்கி விடும்.
சினம் கோபம் கொடியது என்பதை விளங்கும்படி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உள்ளார். காந்தி, கலாம், லிங்கன் என்று சாதனையாளர்களின் சாதனைகளை எடுத்து இயம்பி திறம்பட எழுதி உள்ளார். பாராட்டுக்கள். “வென்று காட்டலாம் வா”, நூல் படித்தால் உண்மையில் “வென்று காட்டலாம் ...”.
கருத்துகள்
கருத்துரையிடுக