மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.





மதுராபுரி! 

நாவல் !

நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 
 சன்லாக்ஸ் பதிப்பகம், 3, விசாகா நகர், G.S.T. சாலை,
ஹார்விபட்டி பேருந்து நிறுத்தம், திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
பக்கம் : 512, விலை : ரூ.600          .

******
      மாமன்னர் திருமலை நாயக்கரின் வரலாறே இந்த நாவல். மாமன்னர் பற்றிய பல வரலாற்று நூல்களைப் படித்து ஆராய்ந்து உண்மையும் கற்பனையும் கலந்து வடித்துள்ள நாவல் இது.  திருமலை மன்னர் பற்றிய வரலாறு கூறும் முதல் நாவல் இது. நாவலாசிரியர் ம.கேசவ நாராயணன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிந்தது.

      நாவலில் வரும் காட்சிகளுக்கு பொருத்தமாக நவீன கணினி ஓவியங்கள் மிக நன்று.  திரைப்படம் பார்ப்பது போன்று உணர்வைத் தருகின்றன.  பாராட்டுக்கள்.  இந்த நாவலை திரைப்படமாகவும் எடுக்கலாம். நல்ல கதையம்சத்துடன், கலைநயத்துடன் விறுவிறுப்பான திருப்பங்களுடன் எதிர்பார்க்காத முடிவுகளுடன் நாவல் வடித்து உள்ளார்.

      மதுரையை பாண்டியர்கள் உள்பட பல மன்னர்கள் ஆண்டபோதும் திருமலை நாயக்கர் சுவடு பதித்துச் சென்றுள்ளார். இன்னும் பிரமாணடமாகக்  காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் அரண்மனையின் பெரிய தூண்கள் அவர் வரலாறு கூறும் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்துள்ளார். வெவ்வேறு மாதங்களில் நடந்த சித்திரைத் திருவிழாவை ஒருங்கிணைத்தது.  கலையம்சம் மிக்க புதுமண்டபம் எழுப்பியது. மற்ற மதத்தவர்களுக்கு மதிப்பளித்தது என மன்னருக்குரிய இலக்கணத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்த திருமலை மன்னரின் வரலாறு நாவல் முழுவதும் உள்ளது. படிக்கப்படிக்க மன்னரின் மீதான மதிப்பு உயர்ந்துகொண்டே செல்கின்றது.

      மதுரை என்ற நகரத்தை கட்டிஎழுப்பிய மாமன்னன். பல்லாயிரம் ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் மதுரை அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கின்றது. ஆட்சிகள் மாறியபோதும் காட்சி மாறாத மதுரையாக உள்ளது. மதுரையை மதுராபுரி என்று பெயர்சூட்டிய் இருப்பதும் சிறப்பு.

      திருமலை பூபதியும் மாரப்பனும் எதிரி நாட்டினரிடம் மாட்டிக் கொண்டவுடன் வாள் வீசி வீரத்துடன் தப்பிக்கும் காட்சியை திரைப்படக் காட்சி போல நம் கண்களுக்கு காட்சிப்படுத்தி உள்ளார். திருமலை பூபதி மிகப்பெரிய வீரராகவும் திகழ்ந்துள்ளார் என்பதை உணர முடிந்தது.

      அடுத்து ஒரு போர்க்களக்காட்சி, அவரது வரிகளிலேயே படித்துப் பாருங்கள்.

 “அதுவரை தற்காப்புப் பாணியை கையாண்டு வந்த திருமலை சற்றுமுன் தொம்சம் செய்த காட்டுயானையை விட உக்கிரமாகி விட்ட்தை கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்து குரல் எழுப்பியது.  “உம் அப்படித்தான் அடி, விடாதே, வெட்டு என திருமலை வாள் சுழற்றியவிதமே அப்துலுக்கு புரிபடவில்லை."

      உல்லகான் என்ற மல்யுத்த வீரன் மதுரைக்கு வந்து சண்டைக்கு வர இங்கு ஆண்கள் இல்லையா ? என்று சவால் விடுகிறான். போட்டிக்கு வந்த விருமன் தோற்கிறான். பிறகு செங்கன்னாவின் பேரன் வேங்கடகிருஷ்ணன் நான் மோதுகிறேன் என்கிறான். திருமலை மன்னர் நானே மோதுகிறேன் என்று தயார் ஆகின்றார்.
 மன்னரைத் தடுத்துவிட்டு வேங்கடன் மோதி உல்லகானை தோற்கடிக்கிறான். அந்த சண்டைக்காட்சியை ஒரு மல்யுத்தம் பார்ப்பது போன்ற உணர்வை தந்து விடுகின்றன.  நாவல் படிக்க விறுவிறுப்பாக உள்ளது.  ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக உள்ளது.

திருமலை மன்னரின் அண்ணன் முத்துவீரப்பன் தனக்கு வாரிசு இல்லை என்றவுடன் தம்பி திருமலைக்கு ஆட்சிப்பொறுப்பை நல்கிய வரலாறு நாவலில் வரும் பாத்திரங்களின் பெயர்க்ள் அனைத்தும் ஆய்வுசெய்து அவற்றை அப்படியே நாவலில் பயன்படுத்தி இருப்பது ஆசிரியரின் சிறப்பு.

விஜயநகர பேரரசின் வருகைக்கு கீழிருந்த மதுரையை திருமலை நாயக்கர் சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட வரலாறு நூலில் உள்ளது. இராமநாதபுரத்திற்கு படைகள் சென்ற வரலாறு. இப்படி நாவல் முழுவதும் மன்னர் திருமலை நாயக்கரின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை ஒட்டியே நாவல் வடித்து உள்ளார்.

நாவலின் கடைசிப்பகுதியில் போர்க்காட்சி படிக்கும்போது நமக்கு பாகுபலி திரைப்படம் நினைவிற்கு வரும்.  மிக பிரமாண்டமாக விளக்கமாக நுட்பமாக சுற்றி வந்து தாக்குதல் நடத்தும் எதிரி நாட்டு போர்முறை எல்லாம் விளக்கமாக விபரமாக எழுதி உள்ளார். 

கற்பனை ஆற்றல் குற்றால அருவியாகக் கொட்டி உள்ளது. நாவலை சுவையாகவும் சொல்நயத்துடன் மிக அழகாக எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.

மன்னர் சேதுபதியும், மன்னர் திருமலை நாயக்கரு பேசிக்கொள்வது போன்ற காட்சி வருகின்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வருவது போன்ற உணர்வைத் தந்தன.

பின்னர் சேதுபதியை விடுவித்து மன்னர் திருமலை நாயக்கர், ‘நீ என் நண்பன் என்று கட்டித் தழுவிக் கொண்ட வரலாறு நூலில் உள்ளது.

மீனாட்சியம்மன் கோவில் அருகே அன்னசத்திரம் என்று இருந்தது.  தற்போது இல்லை. மறக்காமல் அன்னசத்திரம் பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.

திருமலை மன்னர் மைசூர் வரை சென்று போர் நடத்திய வரலாறு நாவலில் உள்ளது.

விண்னுலகத்து அழகாபுரியை தம் மண்ணில் உருவாக்கிய திருமலை நாயக்கர் தனது பெயரை மதுராபுரியில் சரித்திரமாக்கி விட்டு சென்றார்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
      இறையென்று வைக்கப் படும்           (திருக்குறள்)

மதுரையை சொர்க்கமாக மாற்றிய மாமன்னர் திருமலை நாயக்கரின் வரலாறு நாவலாக அறிந்து பிரமித்துப் போனேன். அவர் கட்டிய அரண்மனையில் 25 ஆண்டுகள் அரசுபபணி புரிந்தவன் நான். அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. 

அது இன்னும் பல்கிப் பெருகிட காரணமானது இந்த நாவல். இந்த நாவலை திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் உள்ள அவரது சிலை முன்பே வெளியிட ஏற்பாடு செய்தது சிறப்பு. விழாவிற்குச் சென்று வெளியிட்ட நாவல் பற்றி பேசி வந்தேன். 

நாவல் ஆசிரியருக்கு பாராட்டுக்கள். இந்த நாவலுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

.
.

கருத்துகள்