ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்





ஹைக்கூ 500 ...

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.


நூல் விமர்சனம் : கவிபாரதி  மு. வாசுகி மேலூர் 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கம் : 132, விலை : ரூ. 100

******

      மதிப்பிற்குரிய ஹைக்கூ கவிஞர் இரா. இரவி அவர்களின் 19வது நூலான ஹைக்கூ 500 நூலைப் படித்தேன். சிறுவயதில் வகுப்பில் ‘படம் பார்த்து கதை சொல்’ என்பார்கள். ஆனால் படம் பார்த்து கவிதை சொல்லியிருக்கிறார் நம் கவிஞர்.

      வரைந்த
      உருவப்படத்தையே
      அட்டைப்படமாக மாற்றியிருப்பது – நூலுக்கு
      விளம்பரமாகவும் அமைந்து விட்டது.

      சிரிப்புக்கும்
      சிந்தனைக்கும் சொந்தமானவர் மட்டுமல்ல
      கவிஞரின் கற்பனைக்கும்
      கைகொடுப்பவர் இரா. மோகன் ஐயா என்றால் அது மிகையல்ல.

      போட்டி வைத்தவரிடமே (புதுவை தமிழ்நெஞ்சன்)
      அணிந்துரை வாங்கியிருப்பது
      அழகிலும் அழகு!

      கவிஞரைப் பற்றிய உரை படிக்கும் பொழுது
      இவர் பெற்றிருப்பது
      விருதா? விழுதா?
      வினவுகிறது மனம்!

      நூல்களின் பட்டியல் போன்று – இனி
      விருதுகளின் பட்டியல் ஒன்றும் வெளியிட வேண்டும்
      அத்தனை நீளம் ...

      படத்திற்கு கவிதையெழுதுவது ஒரு கலை! அது
      அனைவருக்கும் கிட்டிவிடுவதில்லை – ஆனால் நம்
      கவிஞருக்கோ அது கைவந்த கலை!

      காட்டு விலங்கு அல்ல
      வீட்டு உறுப்பினர்
      காளை!

என்ற வரிகளில் விலங்கின் மீதான பாசத்தை நமக்கும் ஊட்டுகிறார்.!

      பூனையே கவனம்!
      கொஞ்சம் அசந்தால்
      விறகாகி விடுவாய்!

என்ற எச்சரிக்கை வரிகள் படத்திற்கு நூறு சதவீதம் பொருத்தமாய் அமைந்துள்ளது!

      சுருங்கின எல்லைகள்
      சுருங்கவில்லை எண்ணங்கள்
      தமிழ்நாடு!

என்று தமிழகத்தின் பெருமையை ஐந்தே சொற்களில் அடக்கியிருப்பது சிறப்பு!

      சிறுதுளியில் பெருவெள்ளம் என்று இரா.மோகன் ஐயா குறிப்பிட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை! கவிஞர்கள் பலருக்கும் கிடைக்கட்டும் அளக்க முடியாத நன்மை!



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்