http://tamilauthors.com/ Cinema/044.html
கனா!நடிப்பு : ‘இனமுரசு’ சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஸ்திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
கனா!நடிப்பு : ‘இனமுரசு’ சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஸ்திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
******
‘இனமுரசு’ சத்யராஜ் அவர்கள் இந்தப்படத்தில் மட்டை விளையாட்டு ரசிகராகவும் மண்ணை விரும்பும் உழவராகவும் அற்புதமாக நடித்துள்ளார். ‘பாகுபலி’ படத்தில் கம்பீரமாக நடித்த சத்யராஜ், அவரா, இவர்! என வியக்கும் அளவிற்கு பாத்திரத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றி மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார், பாராட்டுக்கள்.
‘காக்கா முட்டை’ திரைப்படம் தேசிய விருது பெறுவதற்கு காரணமாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஸ் இந்தப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். மிகவும் கடின உழைப்பை நல்கி உள்ளார்.
மட்டை விளையாட்டு எனக்கு பிடிக்காத விளையாட்டு. "11 முட்டாள்கள் விளையாடுவதை 11000 முட்டாள்கள் பார்க்கின்றனர்” என்ற பெர்னாட்ஷா கருத்தை வழிமொழிந்து வந்தவன் நான். அதனால் தான் படத்தை தாமதமாகச் சென்று பார்த்தேன். மட்டை விளையாட்டு பிடிக்காதவர்களையும் பிடிக்கச் செய்து விட்டது இந்தப்படம்.
ஒரு கிராமத்துப் பெண் சந்திக்கும் ஏச்சு பேச்சு, கேவலம் என எல்லாவற்றையும் திரையில் காட்சிப்படுத்தி எல்லாவற்றையும் தாண்டி சாதனை படைக்கிற பெண்ணின் கதை. கனவை நிறைவேற்றி விடுகிறாள். மட்டை விளையாட்டில் இந்தியா தோற்றதற்காக அப்பா அழுவதைக் கண்ட சிறுமியின் மனதில் இந்தியாவிற்காக நான் விளையாடி அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைப்பேன் என்று சபதம் ஏற்கிறாள். சபதத்தில் பல தோல்விகள் சந்தித்து இறுதியில் வெல்கிறாள்.
மட்டை விளையாட்டு பயிற்சியாளர் நெல்சனாக வரும் சிவகார்த்திகேயன் குறைந்த நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். திறமை உள்ள கிராமத்துப் பெண்களும் விளையாட வாய்ப்பை போராடி பெற்றுத் தருகிறார்.
உழவர்கள் படும்பாட்டை திரையில் காட்டி கண்ணீர் வரவைத்துள்ளார் இயக்குநர். பொதுவாக எந்தத் திரைப்படம் பார்த்தாலும் நான் அழுவதில்லை. ஆனால் இந்தப்படம் என் கண்ணில் கண்ணீர் வரவழைத்தது. படத்தில் வசனம் நன்று, பாராட்டுக்கள்.
‘ஆசைப்பட்டு விட்டால் அடம்பிடித்தாவது அடைந்தே தீரணும்’, ‘இந்த உலகம் நான் வெற்றி பெறுவேன் என்று சொன்னால் நம்பாது ; வெற்றி பெற்றவன் சொன்னால் நம்பும்’ – இதுபோன்ற முத்தாய்ப்பான வசனங்கள் பல உள்ளன.
1000 கோடிகளை சுருட்டி விட்டு வெளிநாட்டிற்கு ஓடியவன்களை விட்டுவிட்டு, ஏழை உழவர்களை வங்கிகள் நடத்தும் முறைக்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளனர். வங்கி மேலாளர், சத்யராஜ் அவர்களிடம், ‘உன் மகள் மட்டை விளையாட்டு விளையாடுவதற்கு பதிலாக குத்தாட்டம் போடச்சொல்லுங்க பணம் வரும்’ என்று சொன்னதும் மேலாளரின் சட்டையை ஏத்திப் பிடிக்கும் கோபம் மிகச்சிறப்பு.
படத்தின் இறுதிக்காட்சியில் இந்தியா தோற்பது போல காட்டி பின் அடுத்து வெற்றி பெறும் காட்சி, படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு முதலில் வருத்தம், பின்பு மகிழ்ச்சி, நல்ல காட்சி அமைப்பு.
படத்தில் குத்துப்பாட்டு இல்லை ; வெட்டுக்குத்து இல்லை ; வெளிநாடு காதல் காட்சிகள் இல்லை ; இயந்திரங்கள் நடக்கவில்லை ; கிராபிக் தந்திரகாட்சிகள் இல்லை. ஆனாலும் படம் வெற்றி பெற்றுள்ளது. காரணம் நல்ல திரைக்கதை. இதனை மசாலாப்பட இயக்குநர்கள் உணர்ந்து, இனி இதுபோன்ற படங்கள் எடுக்க வாருங்கள். இந்தப்படம் மிக நல்ல படம் என்று நீதியரசர் சிவக்குமார் அவர்கள் குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அதன் காரணமாக சென்று பார்த்தேன். வியந்தேன். பார்க்காமல் இருந்திருந்தால் ஒரு நல்ல படத்தை பார்க்கத் தவறி இருப்பேன். நீதியரசர் சிவக்குமார் அவர்களுக்கு நன்றி.
எந்தப் பாத்திரம் என்றாலும், அந்தப் பாத்திரமாகவே மாறி விடுகிறார் இனமுரசு சத்யராஜ் அவர்கள். குணசித்திர நடிப்பில் தனிமுத்திரை பதித்து வருகிறார். பாராட்டுக்கள். வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாகி முரசு கொட்டி, பின் குணசித்திர நடிகராகி அமிதாப்பச்சன் போலவே, எந்தப்படத்தில் நடித்தாலும் அந்தப்படத்தில் சிறப்பான நடிப்பை நல்கி மக்கள் உள்ளங்களில் நிற்கும் பகுத்தறிவாளர் சத்யராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக