மனதில் ஹைக்கூ ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !






மனதில் ஹைக்கூ ...
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !


மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை-18. அலைபேசி : 98414 36213 பக்கம் : 64 விலை : ரூ. 60
******
ஜென் பௌத்தம் ஹைக்கூ கவிதைகளின் பிறப்பிடம் எனலாம். ஜென் குருக்கள் தமது ஆன்மிகத்தின் கணநேர அனுபவங்களைச் சிக்கெனப் பதிவு செய்ய வடித்துக் கொண்ட வடிவமே ஹைக்கூக் கவிதை வடிவம் “ஹொக்கு” என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஐ+கூ = ஐக்கூ, ஐ = கடுகு, கூ = உலகம். கடுகு போல சிறிய கவிதை வடிவில் உலகளாவிய கருத்துக்களைச் செறிவுடன் செறிந்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவே ஐக்கூ. மின்னல் வேக விரைவு உலகம் தனது அவசர நிலைக்கு ஏற்ப இலக்கியங்களை வடிவித்து கொண்டதே ஹைக்கூ கவிதைகள். “சான்றோர் அலைவரிசை நன்மை” தரும் என்னும் கூற்றுக்கேற்ப தமிழாகரர் முனைவர் இரா.மோகன், வெ.இறையன்பு இ.ஆ.ப., வித்தகக் கவிஞர் பா.விஜய் ஆகியோர்களின் நெருங்கிய நண்பர் கவிஞர் இரா.இரவி அவர்கள். இவரின் கவிமலர்.டாட்.காம் மூலம் பல இலட்சம் வாசகர்கள் இவரின் கவிதையைப் படித்து மகிழ்கின்றனர்.

கடவுள் நம்பிக்கையற்றவர், மூட நம்பிக்கை எதிர்ப்பாளர் இவர். கவிதைக் கலைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையிலான கவியரங்கின் செயலராக உள்ளார். ஹைக்கூ திலகம், கவிஞர் இரா. இரவி அவர்களின் 9வது நூல் ‘மனதில் ஹைக்கூ’ தன் மனதில் உதித்த 204 ஹைக்கூ கவிதைகளை நூலாக்கி உள்ளார் கவிஞர். “ஹைக்கூ திலகம்”, “கவியருவி”, “கவிமுரசு”, “ஹைக்கூ செம்மல்”, துளிப்பாச்சுடல்”, “எழுத்தோலை”, கலைமாமணி விக்ரமன் விருது” முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு சுற்றுலாவியல் துறையில் உதவி சுற்றுலா அலுவலராக பணியாற்றி வருகிறார். அரசுப் பணியோடு இலக்கியப் பணியும் ஆற்றி வருகின்றார். கவிதை மட்டுமல்லாது கதை, கட்டுரை, இலக்கியப் பட்டிமன்றம், நூல் விமர்சனம் என தன் இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.

ஹைக்கூ திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் ஒன்பதாவது நூல் “மனதில் ஹைக்கூ” தன் மனதில் உதித்த 204 ஹைக்கூ கவிதைகளை நூலாக்கி உள்ளார். இந்நூல் வரலாற்று சிறப்புமிக்க “மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியாக வைக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. இந்நூல் கவிஞர் இரா. இரவியின் கெழுதகை நண்பர் தமிழாகர் இரா.மோகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நூல் முதல்பதிப்பையும் தாண்டி, இரண்டாம் பதிப்பாக வாசகர்களின் கைகளில் தவழ்கின்றது.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்த மொழி
நம் தமிழ் மொழி!”

இதையே நூலும்,

“உடலின் முதிர்ச்சி தடுக்கும்
உள்ளத்திற்கு முதிர்ச்சி தரும்
செம்மொழித் தமிழ்!”

என்று எடுத்துரைக்கிறது.
கண்ணிற்க குளிர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி காற்றில் ஆடும் மலர்கள். கவிதை பாடும் தென்றல் என்று இயற்கையின் பெருமையைக் கூறிக்கொண்டே போகலாம். நூலும் இயற்கையைப் பற்றி,

“கண்ணால் காண்பதும் பொய்
மலையை முத்தமிடும்
மேகம்!”

“கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பைப் போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி!”

என்று எடுத்துரைத்து இயற்கைக்கும் நமக்குமான உறவை எடுத்துரைக்-கின்றது. சங்க காலத்தில் களவு வாழ்வாக இருந்த காதல் சம காலத்தில், கற்பு வாழ்வாக சிறந்தது. ஆனால், இவ்இருபத்தோராம் நூற்றாண்டில் சில காதல் கனவுலகில் தொடங்கி கண்ணீரில் முடிகின்றது. இதை,

“கண்களில் தொடங்கி
கண்ணீரில் முடியும்
சில காதல்!”

“செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்!”

காதல் புரிவது தவறில்லை. காதலித்தார் கடைசிவரை கருத்து ஒருமித்து இல்லற வாழ்வில் இணைய வேண்டும் என நூல் எடுத்துரைக்கின்றது.

மகாகவி பாரதியாருக்கும் கவிஞருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் கவிஞர் படிக்கும் போது பள்ளி வளாகத்தில் பாரதியாரின் திருவுருவச்சிலையே அவரை கவிதைகள் எழுத ஊக்கப்படுத்தியதாக அவரே தன் நேர்முக நிகழ்ச்சிகளில் கூறிவருகின்றனர்.

“விவேக வரிகளால்
வீரம் விதைத்தவர்
மகாகவி!”

“பாமரனுக்கும் புரிந்திட
பா படித்தவர்
மகாகவி!”

முண்டாசுக்கவி மறைந்து பல ஆண்டுகள் ஆயினும் அவர் புகழும் புலமையும் நமக்கும் நம் சந்ததியினருக்கும் என்றும் நினைவில் இருக்கும் என்று நூல் சுட்டுகின்றது.

வாழ்வில் ஒழுக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நூல் எடுத்துரைக்கும் விதமாக,

“தொகை கூடக்கூட
துணி குறைந்தது
கவர்ச்சி நடிகை!”

“கதையை விட
சதைக்கே முன்னுரிமை
திரைப்படத்தில்!”

மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்ற சொல் மக்கள் உலகம் வேண்டுவது ஒழுக்கமே என்பதை நூல் முன்வைக்கின்றது.

தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்துமுடிக்க முடியுமென்று நம்புவதும், நம்பிக்கையைச் செயல்படுத்த திட்டமிடுவதும் அதை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல், விடாமுயற்சியுடன் அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேறுவதும் தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. உன்னால் முடியும் தம்பி, இதை,

“மூச்சு இருக்கும் வரை முயற்சி
முயற்சி இருக்கும் வரை மூச்சு
வெற்றி உறுதி!”

என்று உடன்பாட்டுச் சிந்தனையை நூல் முன்வைக்கின்றது. கவிஞர் கண்ணதாசன் 1948ல் திரைக்கு எழுதிய முதற்பாடலிலேயே,

“கலங்காதிரு மனமே, நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்றார்.
கவிஞர் கண்ணதாசன் பற்றி நூல்.

“திருக்குறளின் நுட்பத்தைத்
திரைப்பாடலில் வடித்தவர்
கவியரசு”.

“காலத்தால் அழியாத
கல்வெட்டுக் கவி புனைந்தவர்
கவியரசு!”

கண்ணதாசன் பாடல்கள், இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதது. காலமெல்லாம் வாழும்! எனபதை முன்நிறுத்தி நூலும் பாடலாசிரியர் கண்ணதாசன் பெருமையை எடுத்தியம்புகிறது.

சங்க இலக்கியமான புறநானூற்றில் ‘கள்’ உண்ணுதல் பற்றிய பதிவு நம்மிடம் உள்ளது. ஆனால் இக்காலக்கட்டத்தில் அதிகமான மது உட்கொண்டு இளைஞர் பலர் தம் வாழ்வையே தொலைக்கின்றார். இதையே, நூல் ...

“அடைவதாக வந்து
இழக்கின்றனர் நிம்மதி
டாஸ்மாக்!”
“பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
டாஸ்மாக்!”
“குடி குடியைக் கெடுக்கும்!” என்பது சான்றோர் மொழி. மது குடிக்கும் பழக்கத்தின் கொடுமையை அறிந்து நம் தேசத்தந்தை காந்தியடிகள் மதுவிலக்கை ஒரு கொள்கையாகவே கருதினார்.

இலக்கியங்களில் தலைவன், தலைவியர் இருவருக்கும் தூதாக, ஒரு வாயிலாக பறவைகளும், விலங்குகளும் இருந்தன. அதன் எச்சமாக இன்று நாம் பறவைகளையும் விலங்குகளையும் வீட்டு விலங்காகவும், செல்லபிராணியாகவும் சரணாலயங்களில் வைத்தும் பாதுகாத்தும் வருகின்றோம்! பறவைகளிடம் இருக்கும் ஒற்றுமை கூட மனிதர்களிடம் இல்லை. இதை நூல் ...

“கூடி வாழும் பறவைகள்
மோதி வீழும் மனிதர்கள்
யார் உயர்திணை?”

என்னும் சிந்தனையை முன்வைக்கின்றது. இறுதியாக நில மாசுபாடு, நீர் மாசுபாடு என்று இக்காலகட்டத்தில் மாசுபாட்டால் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாளை நாம் சுவாசிக்கும் காற்றையும் விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டுவிடும் என நூல் முன்வைக்கிறது.

“இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்!”

என்று நூல் முன்வைக்கிறது!”
கவிஞரின் பன்முகப்பார்வையான மனதில் ஹைக்கூ இக்காலத்துக்கும் எக்காலத்திற்கும் ஏற்றவகையில் படைத்திருக்கும் கவிஞரின் படைப்புத்திறன் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது!

கருத்துகள்