ஹைக்கூ 500 ...
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : 132, விலை : ரூ. 100
******
ஹைகூ என்ற சொல்லுக்கு தமிழில் வண்ணத்துளிப்பா, குறும்பா, கடுகுக் கவிதை, மத்தாப்பூக்கவிதை, மின்மின் கவிதை என பல பொருள் உண்டு. துளிப்பா உலகில் முடிசூடிய மன்னர் ஹைகூ திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் 19ஆவது நூல் “ஹைக்கூ 500” ஆதிகால மனிதன் மொழி தோன்றுவதற்கு முன் தம் கருத்தை படங்களின் மூலம் வெளிப்படுத்தினான் என்பது நாம் அறிந்தது.
அதன் எச்சமாக ஹைக்கூ நூற்றாண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, புதுவைத் தமிழ் நெஞ்சன் அவர்கள் அவருக்கு பிடித்த 100 படத்தை முகநூலில் பதித்து ஹைக்கூ எழுதும் போட்டி வைத்தார். அதில் பல கவிஞர்கள் கலந்து கொண்டனர். ஒரு படத்திற்கு 5 கோணங்களில் சிந்தித்து 500 ஹைக்கூ எழுதியவர் கவிஞர் இரா. இரவி அவர்கள். துளிப்பா
வரலாற்றில் பொருள் ஒன்று என்றாலும் தம் சிந்தனையால் பல துளிப்பா எழுதிடுபவர்.
ஹைக்கூவே தம் வாழ்வாகக் கொண்டவர். இந்நூலின் முன் அட்டைப்படம் கவிஞரின் படமும் அதனை அடுத்து சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது. பின் அட்டையில் பேராசிரியர் இரா. மோகன் மற்றும் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகிய இருவரின் செம்மையான அணிந்துரை மேலும் அழகுச் செய்கின்றது. இந்நூல் கவிஞரின் பன்முகப்பார்வையாக எழுதப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. இன்றைய சூழலில் பகிரும் மனப்பான்மை பலருக்கும் குறைவு. இதை எடுத்துரைக்கும் போது, “கொடுப்பதிலும் இன்பம் மனப்பான்மை உண்டு, கொடுத்துப்பார்”. “உதவுவதில் உயிர்ப்பு உண்டு உதவிப்பார்” என்கிறது நூல்.
பாரதியார் கூறும் ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்பதற்கேற்ப நூலில் “தூக்கி ஏறி ஊதுகுழல் ஏந்திடு எழுதுகோல்!” “வேண்டாம் அடுப்படி வேண்டும் கல்வி கல்லூரிக்குப் புறப்படு” என்னும் துளிப்பா. இங்கு பாரதியாரை நினைவு கூறுகின்றது. சங்க காலம் முதல் சம காலம் வரை இயற்கையைப் பற்றி கவிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.
அதன் அடிப்படையில் நூலும் “பார்க்க மகிழ்ச்சி விழிகளுக்குக் குளிர்ச்சி மரங்களின் வளர்ச்சி” எடுத்துரைக்கின்றது. “பாவேந்தர் கூறும் என்னருத் தமிழ்நாட்டில் கண்” என்னும் தமிழ்நாட்டின் பெருமையை நூலும் “தோன்றியபூமி முதல் மனிதன் முதல் மொழி தமிழ்நாடு” என்கின்றது. காதலைப்பாடாத கவிஞர் இல்லை காதலைப் பாடோதார் கவிஞரே இல்லை என்னும் கூற்றுக்கேற்ப கற்காலம் தொடங்கி கணினிகாலம் வரைக் காதல் உள்ளது. நூல் ‘அவள் எதிர்பார்ப்பது பாராட்டு இல்லை அன்பு’ என எடுத்துரைக்கின்றது. உலக உயிர்கள் தோன்றிடக் காரணம் தாய் அதைக் கவிஞர் ‘உலகில் சிறந்தது உன்னதமானது தாயன்பு!” என்கின்றார்.
விலங்குகளிடமும் மனிதநேயமும் பரிவும் காட்டவேண்டும் என்பதை “பலம் மிக்க யானை பலவீனமானது பாவையின் பட்டுக்கரம் பட்டு! “மழை வெள்ளத்திலும் மெய்ப்பித்தார் விலங்குநேயம்!” என்பதை இந்நூல் அஃறிணை உயிர்கள் மீதான பரிவையும் பாசத்தையும் எடுத்துரைக்கின்றது. தமிழரின் பாரம்பரிய கலையான தப்பாட்டம் பற்றி நூல் “பெயர் வைத்தது யாரோ? சரியான ஆட்டத்திற்கு தப்பாட்டம்” என்று நம் தமிழரின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கின்றது.
வள்ளுவர் கூறும் ‘உழுதுண்டு வாழ்வரே வாழ்வர்’ என்பதற்கேற்ப உணவு தருபவன் மட்டுமல்ல உடை தருபவனும் உழவன் என்பதை நூல் ‘நம் மானம் காக்கும் பருத்தி தருபவனும் உழவனே” என்கிறது. நம் தமிழ்நாட்டின் மரம் பற்றி “தமிழ்நாட்டின் மரம் தேட வேண்டி உள்ளது பனைமரம்” இறுதியாக “அழகை விட சிறந்தது அறிவு” என்னும் தரம்மிகுந்த துளிப்பாவை நூல் எடுத்துரைக்கின்றது.
படம்வைத்து முதன்முதலில் 500 ஹைக்கூ எழுதிய கவிஞரின் படைப்புத்திறன் பாராட்டுதலுக்கும் வியப்புக்கும் உரியது! முதலில் படத்தை பார்த்துவிட்டு துளிப்பா படிக்கும் வாசகர் மனதில் துளிப்பா நிச்சயம் பதியும் என்பது உண்மை.
.
கருத்துகள்
கருத்துரையிடுக