ஆயிரம் ஜன்னல் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.ஆயிரம்  ஜன்னல் வீடு !

நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் !

அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

******

நூலாசிரியர் கவிஞர் இராம்பிரசாத் ‘ராம்கி டுவிட்டு தலைகீழ்’ நூலின் மூலம் புகழ்பெற்றவர்.  குட்டி ய்ப்பான் என்று போற்றப்படும் சிவகாசிக்கு பெருமை சேர்த்து வருபவர்.  பட்டப்படிப்பு இளங்கலையே சிவகாசியிலும் முதுகலையை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும் பயின்று வருபவர்.  மாவட்ட ஆட்சியராக வரவேண்டும்  என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கு தயாராகி வருபவர்.  ஆயிரம் ஹைக்கூ படைத்துள்ளார்.  பாராட்டுக்கள்.

எல்லா வயதினரும் விரும்பி வாசிக்கும் கவிதை ஹைக்கூ.  படிக்கும் வாசகரையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. இந்த வடிவம் யப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வடிவம் என்றாலும் அவர்களைப் போல இயற்கையை மட்டும் பாடாமல் சமுதாய விழிப்புணர்வு கருத்துக்களையும் ஹைக்கூவில் வடித்துள்ளார்.

முரண்சுவை நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றது.  எள்ளல் சுவைக்கும் பஞ்சமில்லை, சிந்தையில் சிறு மின்னலை உருவாக்கி வெற்றி பெறுகின்றன.  நூலாசிரியர் இராம் பிரசாத் அவர்கள் மாணவ பருவத்திலேயே ஆயிரம் ஹைக்கூ வடித்து இருப்பது பாராட்டுக்குரியது.  வருங்காலங்களில் இன்னும் படைப்பார்.  இலக்கிய உலகில் சிறந்த இடம் உயர்ந்த இடம் கிடைக்கும் என்று உறுதி கூறலாம்.

வறண்ட காவிர்ப் 
படுகை மத்தியில்
நீர் காத்த அய்யனார் கோவில்!

முதல் ஹைக்கூ கவிதையிலேயே சிந்தனை மின்னலை வெட்டி உள்ளார்.  பகுத்தறிவு சிந்தனை விதைத்து உள்ளார். 

மீன்களிருந்த 
குளத்தை மூடிவிட்டு
மீன்வளத்துறை கட்டிடம்!

உண்மை தான்.  ஏரி, குளம் என நீர்நிலைகள் இருந்த இடங்களை அரசுக் கட்டிடங்கள் ஆக்கிரமித்து விடுகின்றன.  மதுரை உயர்நீதிமன்றம் இருப்பதும் உலகனேரி என்ற ஏரியின் மீது தான். 

நதிநீர் இணைப்பு 
நடத்திக் காட்டினான்
பால்காரன் வீட்டுப்பாலில்!

நதிநீர் இணைப்பு சாத்தியமில்லை என்கின்றனர் சில அரசியல்வாதிகள். அவர்களுக்கு சாத்தியம் தான் என்பதை உணர்த்தும் விதமாக எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.

சமாதி கட்டி விட்டார்கள் 
மயானத்திற்கு
மின்சார சுடுகாட்டால்!

உண்மை தான். உலகமயம் உலை வைத்தது, வெட்டியானின் வாழ்க்கைக்கும் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

ஊழல் பணம் 
நேர்மையாகிறது 
 உண்டியல் காணிக்கை.

ஊழல் புரியும் அனைத்து அரசியல்வாதிகளும் பயபக்தியுடன் திருப்பதி சென்று வருகின்றனர். ஊழல் பணத்தில் காணிக்கையும் செலுத்துகின்றனர்.  நாட்டில் நடக்கும் போலித்தனத்தை வேடத்தை தோலுரித்துக் காட்டும்.

தலைமுடி இல்லை 
இருந்தும் இளநீரை
சீவுகிறது அரிவாள்!

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு.  இடத்திற்கு இடம் மாறுபடும். சீவுதல் என்ற சொல்லை வைத்து விளையாடி சிந்திக்க வைத்துள்ளார். பாராட்டுக்கள்.

எதை எதையோ சுமந்த 
செய்தித்தாள்கள்
இறுதியில் வடையை !

செய்தித்தாள் வந்த நேரம் படிக்கப் போட்டி இருக்கும்.  மறுநாள் வாசிக்க ஆள் இருக்காது.  பழைய காகிதமாகி வடை மடிக்கச் சென்று விடும். வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூவாக இதனைப் பார்த்தேன்.

நிலா நிலா ஓடி வா 
பசியாறியது குழந்தை
பட்டினியில் நிலவு!

நிலா உண்ணாமல் பட்டினியாக இருந்து குழந்தைகளின் பசியாற்றி வருகின்றது என்று வித்தியாசமான கோணத்தில் இதுவரை யாரும் சிந்திக்காத விதத்தில் சிந்தித்து எழுதியுள்ளார். நன்று.

கணவன் மனைவிக்குக் 
கொடுத்த வெள்ளை ரோஜா
தாஜ்மகால்!

தாஜ்மகால் பற்றி கவிதை எழுதி உள்ளேன், கவிதைகள் படித்து உள்ளேன்.  இந்தக் கோணத்தில் இதுவரை யாருமே எழுதியது இல்லை.  தாஜ்மகால் வெள்ளை ரோஜா மிக நல்ல உவமை.

பெண்ணியம் கட்டுரை 
எழுதி முடித்தாள்
கணவரின் ஆணைக்கிணங்க!

பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஆணாதிக்க சமுதாயம் இன்னும் மாறவில்லை. அப்படியே தான் உள்ளது என்பதை படம்பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று.

குறி சொல்பவர்களின் 
நாடகம் தெரிய வந்தது 
வெற்றிலை மையில்!

வெற்றிலையில் எதுவுமே தெரியாது. ஆனால் இவர்கள் அது தெரியுதா? இது தெரியுதா? என்று மிரட்டி, ஆம் என்று சொல்ல வைப்பார்கள். சிறுவயதில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. குறி சொல்பவர்களின் பித்தலாட்டத்தை உனர்த்தி பகுத்தறிவை விதைத்து உள்ளார். 

எரிந்து கொண்டே 
எரிபொருள் தீராமல்
சூரியன்!

சூரியன் ஓய்வு எடுக்காமல் உழைத்து வருபவன். சூரிய சக்தியே எரிபொருளாகவும் பயன்பட்டு வருகின்றது.  சூரியனின் எரிபொருள் மட்டும் தீர்வதே இல்லை.  அது தீராததால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இப்படி பல சிந்தனைகளை விதைத்தது. 

எந்த வகை 
இரத்தத்தையும் ஏற்கும் உடல் 
‘கொசு’!

மனிதர்களுக்கு இரத்தம் பிரிவு மாற்றி ஏற்றினால் மரணம் கூட நிகழ்ந்துவிடும் என்பார்கள். ஆனால் கொசுவோ எல்லாப் பிரிவு இரத்தத்தையும் குடித்து உயிர் வாழ்கின்றது.

பாட்டிகளும் போடும் 
லிப்ஸ்டிக்
வெற்றிலை – பாக்கு!

முரண் சுவை, எள்ளல் சுவை ததும்பிட ஹைக்கூ கவிதைகள் சிந்திக்க வைத்துள்ளன. சிரிக்கவும் வைத்துள்ளன. விழிப்புணர்வும் விதைத்துள்ளன.  நூலாசிரியர் கவிஞர் இராம்பிரசாத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். 

சிறிய வேண்டுகோள். வருங்காலங்களில் ஆங்கிலச் சொல் தவிர்த்து எழுதுங்கள்.
.

.

கருத்துகள்