நன்றி தகவல் உதவி இனிய நண்பர் இதாயத் துபாய் .
மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் திறக்கப்படுகிறது - காணொளி
உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
குவைத் தற்போது வளைகுடா நாடுகளில் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக குவைத்தில் உலகிலேயே நான்காவது மிக நீளமான கடல் பாலம் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்ற பெயரில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.
'பட்டு நகரம்' என அழைக்கப்படும் 'சுபையா நகரம்', மக்கள் வாழ முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு, அதிக முதலீடுகளை கவரும் விதத்தில் இந்த பாலம் கட்டப்படுவதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. குவைத் நகரையும், சுபையா நகரத்தையும் இணையும் வகையில் அங்கு ஏற்கனவே ஒரு தரை வழிப்பாதை இருக்கும் நிலையில், அந்த பாதையூடாக சுபையா சென்றடைய 70 நிமிடங்கள் தேவைப்படுகிறன. ஆனால், இந்த புதிய கடல் பாலம் மூலம் 20 நிமிடங்களில் சுபையா சென்றடைந்து விடலாம்.
இந்த பாலம் 36 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 27 கிலோ மீட்டர் பாலம் கடலில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்ட 5 வருடங்கள் ஆகியுள்ளன. 2013 நவம்பரில் இந்த பாலத்தை கட்ட தொடங்கி இருக்கிறார்கள். சுமார் 300 கோடி டாலர் செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் பெரிய அளவில் தூண்கள் நிறுத்தப்பட்டு பாலம் அமைக்கபட்டுள்ளது.
அத்துடன், இது பயன்பாட்டிற்கு வரும் நேரத்தில் சுபையா நகரில் சுமார் 100 கோடி டாலர் அளவுக்கு முதலீடுகள் குவியும் என குவைத் அரசு நம்புகிறது. மேலும், அங்கு, 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் ஆலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேற்படி கடல் பாலத்திற்கு கடந்த 2006ஆம் ஆண்டு உயிரிழந்த குவைத் இளவரசர் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் வரும் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. சுமார் 300 கோடி டாலர் செலவில் ஏறக்குறைய 5 ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள இந்த பாலம் 2018 டிசமபர் இறுதியில் திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்தப் பாலம் பயன்பாட்டிற்கு தயாரானதையடுத்து சில நாட்களாக சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குவைத் பொதுப்பணித்துறை அமைச்சகம் வெளியிட்ட காணொளி காட்சியை பெற எம்மை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது முகநூல் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக