.சமுதாயச் சாளரம்! நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.





.சமுதாயச் சாளரம்!

நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.




புதுகைத் தென்றல் வெளியீடு, 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை-600 026. பக்கம் : 144, விலை : ரூ. 90.


******

     நூலாசிரியர் புதுகை மு. தருமராசன் அவர்கள் புதுகைத் தென்றல் மாத இதழின் ஆசிரியர் புதுக்கோட்டையின் பெருமைகளில் ஒன்றானவர்.  பிறந்த ஊரான புதுகையை தன் பெயரிலும் தான் நடத்தும் இதழிலும் முன்னிறுத்தி வருபவர் பிறந்தமண் பற்று மிக்கவர்.



     நூலக உலகம் இதழாசிரியர் ந. ஆவுடையப்பன் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார்.  ஒரு இதழின் தலையாய பகுதி தலையங்கம், இதுவரை கவன ஈர்ப்பு, விழிப்புணர்வு என்று வந்த தலையங்கத் தொகுப்பின் வரிசையில் சமுதாயச் சாளரம் வந்துள்ளது.



     மாதா மாதம் புதுகைத் தென்றல் இதழில் படித்து இருந்தபோதும், மொத்தமாக நூலாகப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.  சமுதாயத்தை படம்பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக உள்ளது.  இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து இந்நூலைப் படிக்கும் வருங்கால சந்ததிகளுக்கு நாட்டுநடப்பை வரலாற்றை சமூக நிகழ்வை படம்பிடித்துக் காட்டும் ஆவணமாக நூல் உள்ளது.



2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.  பாராட்டுக்கள்.



மாத இதழ் நடத்துவது என்பதே நெருப்பாற்றில்  எதிர்நீச்சல் போடுவது போன்றது.  திட்டமிட்ட நாளில் நூல் பணி முடித்து அச்சேற்றி வெளிக்கொணருவது பெண்ணின் பிரசவ வலிக்குச் சமம்.  தலையங்கம் எழுதுவது ஆசிரியரின் முதன்மைப்பணி. அப்பணியினை செவ்வனே செய்துள்ளார்.



45 கட்டுரைகள் உள்ளன.  விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சரித்திரச் சாதனை முதல் கட்டுரை.  அறிவியல் சாதனையை மனதாரப் பாராட்டி உள்ளார்.  பாராட்ட வேண்டியதைப் பாராட்டி ஆள்வோரின் குறைகளையும் துணிவுடன் சுட்டிக்காட்டி பத்திரிகையாளரின் கடமையை செம்மையாகச் செய்துள்ளார். சல்லிக்கட்டு தடை இருந்த காலத்தில் நீக்க வேண்டும் தடையை என்று குரல் கொடுத்துள்ளார்.



கரை சேருமா? கல்வித்துறை என்ற கட்டுரையில் பெற்றோர்களே தேர்வுக்கூடம் சென்று பதில்களை வீசியெறிந்த அவலத்தை சுட்டிக்காட்டி கண்டனத்தை எழுதி உள்ளார்.



நாட்டு நடப்பை உற்றுநோக்கி மனதில் பட்ட நியாயத்தை மக்களுக்கும் அரசுக்கும் அறிவுறுத்தும் விதமாக வடித்திட்ட தலையங்கம் சிறப்பு.  தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று வலியுறுத்தி உள்ளார.  கர்மவீரர், கலாம் கட்டுரையில் மாமனிதர் கலாமிற்கு புகழாரம் சூட்டி உள்ளார்.



“பிறந்த மண்ணில் நல்லடக்கம் என்பது சிறப்புத்தான்.  எனினும், தலைநகர் தில்லியிலிருந்து குடியரசு தலைவராகச் செயல்பட்ட கலாம் அவர்களுக்கு இந்தியாவின் தலைநகரிலும் ஒரு நினைவுச்சின்னம் அமைவது, மேலும் சிறப்பாகும் என்பது பலருடைய எண்ணமும் விருப்பமும் ஆகும். தில்லியிலும் கலாமிற்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றா கோரிக்கை நன்று.



நூலாசிரியர் புதுகை மு. தருமராசன் அவர்கள், வங்கி அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றபின், ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி உழைத்து வருபவர்.  சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்து கொள்வார்.



.  விழாக்களின் படங்களையும் செய்திகளையும் புதுகைத் தென்றல் இதழில் பதிவு செய்திடுவார்.  மதுரையில் நடக்கும் நூல் வெளியீட்டு விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.  இந்நூலும் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் மதுரையில் வெளியிட்ட நூல் தான்.



பருப்பு, வெங்காயம் விலை ஏறினால் குறைக்க வேண்டும் என்று குரல் தருகிறார்.  புனிதப் பயணங்களில் விபத்து நேராவண்ணம் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிறார்.  மன்சாட்சி, மழை சாட்சி கட்டுரையில் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பிற்கு கண்டனத்தை எழுதி உள்ளார்.  அஞ்சலக சேமிப்பில் வட்டி விகிதம் குறைந்ததற்கு கண்டனத்தை முன்வைக்கிறார்.  வேலையில்லாத் திண்டாட்டம் ஒழித்து எல்லோருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.



ஹார்வர்ட் பலகலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை வேண்டும் என்ற அவசியத்தை நன்கு வலியுறுத்தி உள்ளார்.  அவர் வலியுறுத்தியபடி இன்று தமிழ் இருக்கை அமைந்து விட்டது.



‘ஒலிம்பிக் போட்டியில் ஒளிர்வோம்’ கட்டுரையில் பல்வேறு திட்டங்களை பயனுள்ள தகவல்களை வழங்கி 2020 இல் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்று உத்வேகம் தந்துள்ளார்.  ‘நாடும், மொழியும் நம் இரு கண்கள்’ கட்டுரையில் தமிழ்மொழியின் சிறப்பையும், அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார்.



‘இளையவர்களின் கைகளில்’ கட்டுரையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இளையோர் எழுச்சியுடன் கடமையாற்றிட எழுதி உள்ளார்.  ‘விசுவரூபம் எடுக்கும் விவசாயிகள் பிரச்சனை’ கட்டுரையில் உழவர்களின் இன்னல்களை எடுத்துஇயம்பி உள்ளார்.



மாணவர் நலனை நீட்டி முடக்கும் நீட் தேர்வு கட்டுரையில் தமிழக மக்களின் உள்ளக்குமறலை நன்கு பதிவு செய்துள்ளார்.



“நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு போராடிப் பெறப்பட்ட இந்திய சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கி பிரிவினைகளை ஏற்படுத்தும் பல்வேறு போக்குகளுக்கிடையே இப்போது நீட் தேர்வும் தலையை நீட்டியுள்ளது”.



நதிகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும் கட்டுரையில் பருவமழையின் போது பெய்யும் மழைநீரை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்து உள்ளார்.  சமுதாயத்தின் காலக்கண்ணாடி இந்நூல்.

.

கருத்துகள்