மூளைக்குள் சுற்றுலா! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி.
--
மூளைக்குள் சுற்றுலா!
நூல் ஆசிரியர் :
முதுமுனைவர் முதன்மைச் செயலர்
நூல் ஆசிரியர் :
முதுமுனைவர் முதன்மைச் செயலர்
வெ. இறையன்பு, இ.ஆ.ப.
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி.
******
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல். சுற்றுலாத்துறையின் ஆணையாளராகவும், செயலராகவும் இருந்து சுற்றுலாத்துறையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நற்செயல்கள் புரிந்தவர். சுற்றுலாவைப் பற்றி நல்ல புரிதல் உள்ளவர். மூளைக்குள் கடின சுற்றுலா நடத்தி ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வடித்துள்ளார்.
நூலாசிரியரின் ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூல் படித்துவிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டு இருந்தார். “இறையன்பு அவர்களே நினைத்தாலும் இதுபோன்ற நூலை எழுத முடியாது” என்று. இந் நூலிற்கும் அது பொருந்தும். அவரே நினைத்தாலும் இதுபோன்று இன்னொரு நூல் எழுத முடியாது. அவ்வளவு சிறப்பு.
இந்த நூலில் மூளையின் செயல்பாடுகள் படித்த போது, வியந்து போனேன். கையளவு உள்ள மூளை மலையளவு செயல்புரிகின்ற விதம் கண்டு வியந்து போனேன். இந்த நூலில் மூளை மட்டுமல்ல நாடி, நரம்பு, எலும்பு, பல், இனாமல் என உடல் உறுப்புகள் அனைத்தையும் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார்.
பொருத்தமான அழகிய வண்ணப்படங்களும் இடம்பெற்றுள்ளன. படிப்பதற்குச் சுவை கூட்டுகின்றன படங்கள். நூலினை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மிகச் சிறப்பாக அச்சிட்டு உள்ளனர். முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் என்றால் தனிக்கவனம் செலுத்து மிகச்சிறப்பாகப் பதிப்பித்து விடுகின்றனர்.
டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். அணிந்துரையில் சுட்டியுள்ள மேற்கோள்கள் நூலின் நோக்கத்தை சிறப்பை தெளிவாக உணர்த்தி விடுகின்றன.
ஆசிரியரின் முன்னுரையில் இருந்து சிறு துளிகள் : “அறிவியல் குறித்த புத்தகங்களை எழுத வேண்டும் என்கிற விருப்பம் வெகுநாட்களாகவே இருந்தது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் உடல்மொழியோடு தொடர்புபடுத்தி எழுதியபோது அந்த முயற்சி சாத்தியம் என்கிற நம்பிக்கை பிறந்தது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே மூளையைக் குறித்து தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்”.
நூலாசிரியர் அய்ந்து வருட உழைப்பு இந்நூலின் மூலம் அறுவடை ஆகியுள்ளது. நல்ல விளைச்சல். மூளை குறித்து அறிவியல் அறிஞர்கள் சொன்ன மேற்கோள்கள் பல நூலில் இடம்பெற்றுள்ளன. மனித மூளைகள் மட்டுமல்ல, மனிதக் குரங்குகள், புழு, பூச்சி, எறும்பு என சகல உயிர்களின் மூளை பற்றிய தகவல்கள் நூலில் உள்ளன. தகவல் களஞ்சியமாக நூல் உள்ளது.
‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்பது நாமக்கல் கவிஞரின் வைர வரிகள். இன்று நூல் படித்து முடித்த பின்பு, ‘மனிதன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற மனநிலை வந்து விடும். உலகில் உள்ள உயிர்களில் மிகமிக உயர்ந்த இனம் மனித இனம். எவ்வளவு ஆற்றல், எவ்வளவு செயல்பாடு, எவ்வளவு முன்னேற்றம், மனித மூளையின் மகத்துவம் உணர்த்தி மனிதனாகப் பிறந்ததற்கே ஒவ்வொரு மனிதனும் கர்வம் கொள்ளும் விதமாக நூல் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல சிந்திக்க சிந்திக்க சிறகடிக்க வைக்கும் அட்சயப் பாத்திரம் தான் மூளை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
எள்ளல் சுவையுடன் சில ஒப்பீடுகளும் நையாண்டிகளும் நூல் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளன. நூலிலிருந்து சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு.
"தொன்று தொட்ட காலமாக ‘தங்க விதி’ என்கிற ஒன்று மானுட சமுதாயத்தை இயக்குகிறது. அதுவே நம் சட்டம், ஒழுக்கம், நீதி நூல்கள், நாட்டாண்மை போன்ற அத்தனைக்கும் அடிப்படை. ‘மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அதையே நீ அடுத்தவர்களுக்கும் செய் என்பது தான் அது. அதைப் போலவே, ‘அடுத்தவர்கள் நமக்கு எதைச் செய்யக் கூடாது என எண்ணுகிறோமோ அதை மற்றவர்களுக்கு நாம் செய்யக் கூடாது’."
உண்மையில் தங்கமான விதி தான். இந்த விதியை உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் கடைபிடித்தால் உலகில் அமைதி நிலவும். சண்டை, சச்சரவுகள் வராது. இந்நூல் படிக்கும் வாசகர்களும் இந்த விதியைக் கடைபிடித்து நடந்தால் சமுதாயம் சீர்படும். செம்மைப்படும். சிறந்து விளங்கும். வன்முறைகள் ஒழியும். மன நிம்மதி பிறக்கும். அரிய பல தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன.
“யானையின் கருவுற்றிக்கும் காலம் 660 நாட்கள். ஒட்டகம் 406, குதிரை 345, குரங்கு 235, சிங்கம் 120, புலி 106, முயல் 40, அணில் 35, சுண்டெலி 23.
மனிதர்களுக்குப் பத்துமாதம் என்பது தான் எல்லோரும் அறிந்த தகவல். பலரும் அறியாத அரிய தகவல்களான யானை தொடங்கி எலி வரை கருவுற்றிருக்கு காலம் மட்டுமல்ல, அவற்றின் செயல்பாடுகள், வாழ்வியல் முறை, நுட்பமான சிறப்புகள் என எல்லாம் உள்ளன நூலில்.
“கோயில்கள் தேவையில்லை, சிக்கலான தத்துவமும் தேவையில்லை. நம் மூளை இதயம் ஆகியவையே கோயில்கள். கருணையே தத்துவம். இதுவே என் எளிய மதம்” – தலாய்லாமா.
தலாய்லாமா அவர்களின் மேற்கோள் நூலில் உள்ளது. நமது மூளையில் மனிதாபிமானம் இருந்தால் மதச்சண்டைகளுக்கு, சாதிச்சண்டைகளுக்கு வேலை இருக்காது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
கரையான் புற்றில் 10 டிகிரி வெப்பம் குறைவாக இருந்துள்ளது. அதனை ஆராய்ந்து அதே நுட்பத்தில் ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேவில் ஒரு பெரும் கட்டிடத்தை கட்டி உள்ளார்கள் – என்ற தகவல் நூலில் உள்ளது. இப்படி எறும்பு, புழு, பூச்சி எல்லாம் மனிதனுக்கு பலவற்றை கற்பித்து உள்ளன. அவற்றிலிருந்து பாடம் கற்று பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களை படித்து வியந்தேன்
.
மூன்று வகையான மூளைகள் உள்ளன என்று அதன் வகைகளை விளக்கி உள்ளார்.
“மனிதனின் மூளையே முக்கிய உறுப்பு, அதை முட்டுக் கொடுக்கவே உடல்” என்று எடிசன் குறிப்பிட்டார். இப்படி மூளை பற்றிய அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன.
மனித உறுப்புக்களில் தலையாய உறுப்பு மூளை. மூளை இறந்து விட்டால் மற்ற உறுப்புக்கள் இருந்தும் பயன் இல்லை. மூளைச்சாவு அடைந்தால் உடல் உறுப்பு தானம் நடைபெறுகின்றது. இந்த அற்புதமான மூளையை காப்பதற்கு தான் கடினமான மண்டைஓடு உள்ளது.
மூளைக்குத் தேவையான உணவுகள் எவை? எப்படி செயல்படுகின்றன? நரம்புகளின் செயல்பாடு, படிக்கப் படிக்க பிரமிப்பு வந்தது. படித்துவிட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது. என்சைக்ளோபீடியா போல கூகுள் போல தகவல் களஞ்சியம் இந்நூல்.
மூளையோடு பிறந்ததற்காக உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கர்வம் கொள்ள வேண்டும். கையளவு மூளையில் கடலளவு செயல்பாடு. ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற கடலில் மூழ்கி முத்தெடுக்க வாருங்கள். ‘MASTER PIECE’ ஆக வந்துள்ள நூல். நூலை வாங்கிப்படித்து பயன் பெறுங்கள்.
.மருத்துவம் பயின்ற மருத்துவரால் கூட இப்படி நுட்பமாக எழுத முடியாது மருத்துவம் பயிலாத முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.அவர்கள் உடல் குறித்து, மூளை குறித்து, நரம்பு குறித்து, எலும்பு குறித்து மிக விரிவாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் நூலிற்கு வழங்கிய அணிந்துரையில் நூல் ஆசிரியர் :
முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.அவர்கள் குறிப்பிட்டு இருந்தார் ."தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் அருகே அவர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும் :"
".இது நூல் ஆசிரியர் முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.அவர்க ளுக்கும் பொருந்தும் "வெ. இறையன்பு, இ.ஆ.ப .அவர்களின் அருகே அவர் எழுதிய 100 நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும் .
வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் எழுத்து பேச்சு என்ற இருவேறு துறையிலும் தனி முத்திரைப் பதித்து உள்ளார்கள் .எழுத்திலும் கவிதை கதை கட்டுரை ,கேள்வி பதில் என பல்வேறு வகையிலும் நூல்கள் எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .சகல கலா வல்லவராக உள்ளார்கள் .
முழு மனிதன் ஆவதற்கு ஒரு நூலாவது எழுதி இருக்க வேண்டும் என்பது பொன்மொழி .வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் 100 நூல்கள் எழுதி விட்டார்கள் .இது அளப்பரிய சாதனை .இன்னும் எழுதுவார்கள் .
அவர் எழுதும் ஒவ்வொரு நூலும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக அமைந்து விடுகின்றது .இந்த நூலிற்காக சாகித்ய அகாதெமி விருது வழங்க வேண்டும் என்பது என் ஆசை .ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு .
கருத்துகள்
கருத்துரையிடுக