நிலம் தொட ஆசை! நூல் ஆசிரியர் : கவிஞர் வட்டூர் அ.கு. ரமேசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


http://www.tamilauthors.com/04/475.html






நிலம் தொட ஆசை!

நூல் ஆசிரியர் : கவிஞர் வட்டூர் அ.கு. ரமேசு !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 

வெளியீடு : ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம்,
காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.

******
நூல்ஆசிரியர் கவிஞர் வட்டூர் அ.கு.ரமேசு அவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்.  முகநூலில் கவிதைகள் எழுதி வருபவர். இந்நூலில் உள்ள கவிதைகளை முகநூலில் படித்து இருக்கிறேன். 

பதிப்பாளர் இனிய நண்பர் வதிலை பிரபா பதிப்புரை வழங்கி உள்ளார்.  திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பழநிபாரதி அணிந்துரை நல்கி உள்ளார்.  கவிஞர் ச. பூங்காற்று ரவி வாழ்த்துரை வழங்கி உள்லார்.  வலங்கைமான் நூர்தீன் வாழ்த்துரை தந்துள்ளார்.  “நான் ஒரு ஈழத்தமிழன், எனது ஊர் வட்டுக்கோட்டை. எங்கள் ஊர் படித்த பண்டிதர்கள், கவிஞர்கள், புலவர்கள் என்று தமிழ் இலக்கியம் சார்ந்த சான்றோர்கள் நிறைந்த ஊர்”

நூலாசிரியர் என்னுரையில் வழங்கி உள்ள காட்சி அன்றைய ஈழத்தை படம்பிடித்துக் காட்டியது.  கவிதைகளும் ஈழமொழியிலேயே உள்ளன.  ஈழத்து திருவிழாக்களின் பெருமைகளை பறைசாற்றி உள்ளார்.  நூல் படிக்கும் வாசகர்கள்க்கும் செழிப்புமிக்க அந்த ஈழத்து ‘நிலம் தொட ஆசை’ பிறந்து விடுகின்றது.

எங்க ஊர் நீச்சல் குளம்!
      நானும் நல்லித் தேங்காய் கட்டி
      அனுப்பப்பட்டேன் நீச்சல் வீரனாக
      முதல்நாளே ஒரு குறும்
னால் நீரில்
அழுத்தப்பட்டு விதி வழியே தள்ளப்பட்ட
      என் நீச்சல் கனவும் தரையில் நீச்சலடிக்க
      இன்றுவரை கனவில்தான் நீச்சலடிப்பு.

அன்று ஒருவன் செய்த சேட்டை காரணமாக வாழ்வில் நீச்சல் பயிலாமல் போன வருத்தத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.

ஏறு தழுவுதலில் மட்டும் 
ஏன் இந்தக் காழ்ப்புணர்ச்சி
      தமிழன் மொழியை மழுங்கடிக்க நினைக்கும்
      உங்கள் துரோக புத்தியா? 
வீர விளையாட்டையும்
      வீழ்த்த நினைப்பது 
உடன்பட்டோமேயானால்
      உழுது விடுவார்கள் 
தமிழர் நெஞ்சங்களை.

‘தடை! அதை உடை!!’ என மெரினா புரட்சி வெடித்து வெற்றி கண்ட சல்லிக்கட்டு பற்றியும் தன் கருத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.

விட முடியாமல் தவிக்கின்றேன்
      விட நினைத்து
      விரும்பிய மதுவை!

இன்றைய இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி விட முடியாமல் தவித்து வருகின்றனர். சமுதாயம் குடியால் சீரழிந்து வருகின்றது.  குற்றங்கள் பெருகி வருகின்றது. 

என்னவளே உன்னைக் 
கண்ட நாள் முதல் 
தேய்ந்து போகிறேன். 
விண்மதியாய் 
மழை இல்லை 
நனைந்து போகிறேன் 
உன் நினைவலைகளால்!

காதல் கவிதையும் நூலில் இடம்பெற்றுள்ளன.  ஊறுகாய் போல உள்ளது சிறப்பு.  சோறு போல அதிகமாக இல்லாதது சிறப்பு. 

மொழிக்குத் தெரியும் 
தன்னை பேசினால்
      இனத்துக்குப் பெருமையென்று 
பேசிக்கொள்ளத்தான்
      துணிவில்லை கோழைகளுக்கு!
.
தமிழர்கள் சிலர் தமிழில் பேசத் தயங்குகின்றனர்.  அந்நிய மொழியான ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர்.  தமிழர்களே தமிழர்களோடு பேசும்போது தமிழிலேயே பேசுங்கள் என்று அறிவுறுத்த் வேண்டிய அவலநிலை இன்று.

வண்டுகளின் 
நன்றி நவிலல்களுக்காக
      மலர்வதல்ல 
ஒவ்வொரு மலர்களும்!

வண்டுகள் மலர்களுக்கு நன்றி சொல்வதே இல்லை.  வண்டு ஆணாகவும் மலர் பெண்ணாகவும் குறியீடாகயும் பொருள் கொள்ளலாம்.  மனைவி சமைத்த உணவை மூன்று வேளை மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு குறைந்தபட்சம் நன்றாக உள்ளது என்று சொல்லாத கணவன் உண்டு.

ஆமையின் 
முடிவுதான் அதற்கு 
இரவும் பகலும்!

ஹைக்கூ வடிவிலும் கவிதைகள் உள்ளன.  சில கவிதைகள் 4 வரிகள் உள்ளன.  ஹைக்கூ நுட்பம் அறிந்து 3வரி ஹைக்கூவாக செதுக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.  ஆம் ஆமை கூட்டுக்கு வெளியே தலையை நீட்டினால் பகல், உள்ளே இழுத்துக் கொண்டால் இரவு.  இப்படி ஆமையை நம் கண்முன் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். 

அவன் கருகிய ஈரலை 
அவன் முன் 
கட்டித் தொங்கவிட்டாலும்
      குடிக்கும் போது கேட்பான் 
அதையும் சைட் டிஷ்சாக.
      குடி உயிரைக் குடிக்கும்!

குடிகாரனின் இன்றைய நிலை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.  குடிகாரனின் மனநிலையை உணர்த்தியுள்ளார்.  பாராட்டுக்கள். 

ஈழ்த்தமிழர் நாவிலும், எழுத்திலும் தான் நல்ல தமிழ் வாழ்கின்றது.  உங்களுடைய எழுத்தில் இனி ஆங்கிலச் சொல் கலக்க வேண்டாம். தமிழரைப் பிடித்துள்ள தமிங்கிலம் என்ற நோய் ஈழத்தமிழரை பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

நரி முகத்தில் விழித்தால் 
யோகம் கிடைக்குமாம்
யாரோ ஒருவன் 
சொல்லிவிட்டுப் போகிறான். 
நரியே நரி முகத்தைப் 
பார்த்தால் யோகம் கிடைக்குமா? 

மனிதர்கள் நரிகளாக இருக்கிறார்கள் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தி மூட நம்பிக்கையைச் சாடி நரி முகத்தில் விழித்தால் யோகம் என்பதெல்லாம் போலியான கற்பிதங்கள் என்பதை உணர்த்தி உள்ளார்.

கொடுத்த பணம் 
ஓட்டானது
      நாட்டின் நிலை 
பிணமானது !

வாக்குக்குப்ப பணம் தந்து, வாக்கு வாங்கி வென்றவர்களிடம் வாய் திறந்து கேள்வி கேட்க முடியாத மௌனிகளாகி விட்டனர் வாக்காளர்கள்.  வாக்களிக்க கையூட்டு என்ற அவல நிலை உலக அரங்கில்  தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு தரும் நிகழ்வானது.  இனியாவது மக்கள் திருந்த வேண்டும்.  செய்த தவறுக்கு வருந்த வேண்டும்.

நீர்நிலையற்று 
கிடக்கிறாய் நீ 
உன் நிலம் தொட ஆசை /

      உவர்ப்பாகக் கிடக்கிறேன் 
நான் கடலாக!

      நூலின் தலைப்பிலான கவிதை புலம் பெயர்ந்தோர் வலியை உணர்த்துகின்றது. செல்வ செழிப்போடு இயற்கை வளத்தோடு கொழித்திட்ட இலங்கை இன்று இல்லை, கடல் கடந்து வந்து உவர்ப்பானது வாழ்க்கை.  ஆனாலும் நிலம் தொட ஆசை என்று ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். 

மழைக்கு முளைத்த காளான் 
குடையானது 
சிறுவண்டுக்கு!

இயற்கையைக் காட்சிப்படுத்தி உள்ளார். காளான் குடையானது சிறுவண்டுக்கு. நல்ல கற்பனை, நல்ல காட்சி. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள், நூலாசிரியர் கவிஞர் வட்டூர் அ.கு.ரமேசு அவர்கள் முதல் நூலிலேயே முத்திரை பதித்து உள்ளார்.
*****

கருத்துகள்