ராம்கி டுவிட்டூ தலைகீழ்! நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



ராம்கி டுவிட்டூ தலைகீழ்! 

நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 

கந்தகப் பூக்கள் பதிப்பகம், குட்டியணஞ்சான் தெரு,
சிவகாசி  626 123 விலை : ரூ. 40
.
******
      ராம்பிரசாத் என்ற கவிஞர் ‘ராம்கி டுவிட்டூ தலைகீழ் என்ற பெயரில் கையடக்க நூல் எழுதி உள்ளார். வித்தியாசமாக உள்ளது.  இரண்டு வரிக்கவிதைகள் முதல் பக்கம் ஒரு வரி, அடுத்த பக்கம் இரண்டாம் வரி என்று உள்ளன. நூல் படித்து முடித்து விட்டு தலைகீழாகத் திருப்பினால் மற்ற கவிதைகள் தொடங்குகின்றன.  தமிழுக்கு புதுவரவு. டுவிட்டரில் பதிவது போல இரண்டுவரிக் கவிதைகள்.  பாண்டு என்ற கவிஞரின் டுவிட்டூ, அகம் புறம் என்ற கவிதை நூல் படித்ததன் பாதிப்பாக இந்நூல் எழுதியதாக என்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

      டுவிட்டூ பாண்டூ அணிந்துரை அளித்துள்ளார்.  முனைவர் ந. அருள்மொழி வாழ்த்துரை வழங்கி உள்ளார். இனிய நண்பர் பதிப்பாளர் கந்தகப்பூக்கள் ஸ்ரீமதி பதிப்புரை நல்கிஉள்ளார்.

      பத்துப்பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய கருத்துக்களை இரண்டே வரிகளில் உணர்த்தும் விதமாக இருப்பதே டுவிட்டூ. அந்த வகையில் ரத்தினச் சுருக்கமாக கருத்தாழம் மிக்கதாக எழுதி உள்ளார்.  குறைந்தபட்ச கவிதைகள் என்றாலும் அதிகபட்ச சிந்தனையை விதைத்துள்ளன
.
      சிவப்பு சிக்னலுக்காக காத்திருக்கிறது
      பிச்சைக்காரன் மகிழ்வு
!

பொதுவாக வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு சிவப்பு விளக்கு எரிந்தால் காத்திருக்க வேண்டுமே என்ற எரிச்சல் வரும், பொறுமை இருப்பதில்லை, ஆனால் பிச்சைக்காரனுக்கு பிச்சை எடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது சிவப்பு விளக்கு. அவன் மகிழ்கிறான்.

      புத்தகத்தில் மட்டும் 
      தீண்டாமை ஒரு பாவச்செயல் !

      கணினி யுகத்திலும், இரட்டைக் குவளை முறையும், இரட்டை சுடுகாட்டு முறையும் தொடர்வது வெட்கக்கேடு.  சமீபத்தில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்ற கொடிய தீண்டாமை காட்டிய நிகழ்வு நடந்தது.  காந்தியடிகள் செய்யக்கூடாது என்று சொன்ன பாவத்தை சிலர் இன்றும் செய்து வருவது வேதனை. 

      தீபாவளி பண்டிகை 
      ஆடு கோழிகள் நரகாசுரன்களா?

உண்மை தான். தீபாவளி பண்டிகை என்றால் பல்லாயிரம் ஆடுகளும், கோழிகளும் பலியாகி விடுகின்றன.  அவைகள் செய்த குற்றமென்ன என்ற கேள்வியை முன்வைக்கிறார் நரகாசுரன்களா? என்ற கேள்வி மூலம்.

மழையில்லா விவசாயி 
வாழ்வில் இடி!

உண்மைதான். கடனை வாங்கி பயிரிட்டுக் காத்திருப்பான். மழை பொய்த்து விடும், பயிர் வாடிவிடும்.  நட்டத்திற்காக வருந்தி உழவன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் உண்டு.  கசா புயல் தாக்கி தென்னைகள் காய்ந்ததில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் ஓர் உழவர்.  இப்படி பல சிந்தனைகளை விதைத்தது. 

சாலை விரிவாக்கத் திட்டம் நிலுவை
      மகிழ்ந்தன மரங்கள்!

எட்டுவழிச் சாலை என்ற பெயரில் விளைநிலங்களை கையகப்படுத்திட சென்ற போது போராட்டங்கள் வெடித்தன. கைதுகள் நடந்தன. நீதிமன்ற தீர்ப்பால் தற்காலிகமாக நின்றது கையகப்-படுத்துதல்.  உழவனும் மரங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தன.

ரியல் எஸ்டேட் வெறி!
      செவ்வாய் கிரகத்தில் பிளாட்டுகள்!

ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளைநிலங்களை எல்லாம் விலை பேசி, வீட்டடி மனைகளாக்கி பணம் சுருட்டி வருகின்றது ஒரு கும்பல். அவர்களுக்கான கண்டனத்தை இரண்டே வரிகளில் வடித்துள்ளார்.

காட்டில் தேர்தல் பிரச்சாரமின்றி
வென்றது சிங்கமே!

உலக அளவில் மக்களாட்சி நடக்கும் பெரிய நாடு இந்தியா.  ஆனால் தேர்தல் அன்று உலக அரங்கில்  பெருமை தேடித் தந்தது. இன்றோ சிறுமை தேடித் தந்துள்ளது.  வாக்களிக்கப் பணம் தந்து நடத்தும் தேர்தல் அவலத்தை நன்கு உனர்த்தி உள்ளார்.

வாகன முகப்பில் ‘கடவுள் துணை
விபத்தில் பயணிகள் உயிரிழப்பு.!

 இரண்டே வரிகளின் மூலம் மூடநம்பிக்கையைச் சாடி பகுத்தறிவு விதையை விதைத்துள்ளார். படிக்கும் வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார்.

கைதிகளுக்குப் பேச்சுப் போட்டி!
      தலைப்பு விடுதலை இந்தியா!

சிறையில் வாடும் சிறைவாசிகள் விடுதலை பற்றி பேசுவது எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். 

பசியோடு மாணவன் படித்தான்
      உணவு உற்பத்தி முறை!

பசியோடு வாழும் ஏழை மாணவர்கள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றனர். வறுமை ஒழியவில்லை, ஏழ்மை ஒழியவில்லை.  வறுமைக்கோடு அழியவே இல்லை.  ஆள்வோர் வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதி தந்து அவர்கள் வறுமையை ஒழித்து வளமாகி விடுகின்றனர்.

நோட்டு கேட்கும் மகன்
       புரோ நோட்டுடன் அப்பா!

பெற்ற குழந்தைக்கு நோட்டு வாங்கிக் கொடுக்க முடியாத தந்தைகள் உண்டு.  அதற்காக வட்டிக்கு கடன் வாங்கும் அவலநிலையும் உண்டு. தனியார் கல்வி நிறுவனங்கள் பகல் கொள்ளை கூட்டுக்கொள்ளை அடித்து வருகின்றனர்.  கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய ஆள்வோர்கள் டாஸ்மாக் மதுக்கடைக்கு விற்பனை குறியீடு நிர்ணயித்து கோடிகள் திரட்டி வருகின்றனர்.

கப்பலுக்குச் சளைத்தவனல்ல
      மிதப்பதில் குடிகாரன்!

மிதப்பதாக நினைத்துக் கொண்டு மூழ்குகிறான் குடிகாரன். அவன் மட்டுமல்ல, குடும்பத்தையே மூழ்கடித்து விடுகிறான். நாட்டில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்று பெருகி விட்டது.

   மது அருந்தும் பழக்கம் பெருகி விட்டது.  சமுதாயம் சீரழிந்து வருகின்றன.  நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுப்பழக்கமே காரணமாகின்றது.  குடியை ஒழிக்க, மதுக்கடைகள் மூடிவிட முன்வர வேண்டும்.

இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக வடித்த இருவரி கவிதைகள் சிறப்பு. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

கருத்துகள்