கவிஞர் இரா .இரவியின் 20 வது நூல் "இறையன்பு வானம் " தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ,கலைமாமணி, முனைவர் கு. ஞானசம்பந்தன் ஆகியோரின் அணிந்துரையுடன் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது .







கவிஞர் இரா .இரவியின் 20 வது நூல் "இறையன்பு வானம் " தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ,கலைமாமணி, முனைவர்
கு. ஞானசம்பந்தன் ஆகியோரின் அணிந்துரையுடன் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின்  வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது .

இறையன்பு வானம் !. நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி.
அணிந்துரை கலைமாமணி, முனைவர்
கு. ஞானசம்பந்தன், 
எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.ஜி.டி., டி.ஜே.,தகைசால் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை-625 009
தலைவர், நகைச்சுவை மன்றம், மதுரை.

பழம் ஒன்று ; சுளை நூறு ..  

“அமுதகம்" எண். 155, டெப்டி கலெக்டர் காலனி, 3-வது தெரு, கே.கே. நகர், மதுரை-625 020.  தொலைபேசி : 0452-2581505, அலைபேசி :98424 – 52050
மின் அஞ்சல் : 
humour_sambandan@yahoo.co.in
     இந்தியாவின் தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான மதுரை மாநகரின் சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி வருபவர் தான் என் இனிய நண்பரும், நற்றமிழ் கவிஞரும், சிறந்த மேடைப் பேச்சாளரும், வலைதளத்தின் மூலம் உலகை வலம் வருபவருமான ஹைக்கூ கவிஞர் திரு. இரா. இரவி அவர்கள். 

இடதுசாரிச் சிந்தனையும், இறைமறுப்புக் கோட்பாட்டையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நல்ல மனிதர்.  தொடர் வாசிப்பும், வாசித்துத் தான் ரசித்த, ருசித்த செய்திகளை உடனடியாக உலகறியச் செய்யும் பண்பும் கொண்ட இனியவர்.

     ‘சூரியனும் ஒரு தொழிலாளி’ என நினைத்து அச்சூரியனோடு போட்டி போடும் சுறுசுறுப்பான இவரது இயக்கமே இவருக்கு இரவி (சூரியன்) என்ற பேரைப் பெற்றுத் தந்திருக்குமோ! எனப் பெருமிதமாக இவரைப் பற்றி நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

     கவிஞர் இரவி பல்கலைக்கழகத்தில் சென்று படித்ததில்லை.  ஆனால் இவர் படைத்த கவிதை நூல்கள் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருப்பது இவரின் உழைப்புக்குக் கிடைத்த பெருமை.
     இதோ இவரது புதிய முயற்சியாக நம் கைகளில் தவழும் ‘இறையன்பு வானம்’ என்னும் அற்புதமான புதிய நூல்.

     திரு. இறையன்பு I.A.S. அவர்களை தமிழ் கூறும் நல்லுலகில் அறியாதவர்கள் யாரும் இல்லை. 

     விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படுபவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன்.  அதுபோல, எழுத்தாளர்களின் எழுத்தாளர், சிந்தனையாளர்களின் சிந்தனையாளர், பேச்சாளர்களில் சிறந்த பேச்சாளர் எனத் திகழ்பவர் திரு. இறையன்பு அவர்கள்.

     இறையன்பு I.A.S. அவர்கள் மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கக்கூடியவராக, தமிழக அரசின் முதன்மைச் செயலராக, முதுமுனைவராக நூற்ற்க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர் என்னும் பெருமை உடையவாரகத் திகழ்ந்து வருபவர்.

இத்தகைய பெருமைகளைய உடைய திரு. இறையன்பு அவர்கள் எண்ணப் பூக்களாம் நூல்களில், சிந்தனை என்னும் தேனை எடுத்து நம் கைகளில் ஒரு தேனடையாக வழங்கியிருக்கிறார் இந்நூலாசிரியர் இரவி என்னும் இலக்கியத்தேனீ.

இறையன்புவின் 25க்கும் மேற்பட்ட நூல்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கும் இந்நூலாசிரியர் இரவி, இந்நூலில் தன் வாழ்க்கை அனுபவங்களையும், மேடை அனுபவங்-களையும், கவிதைகளையும் தக்க இடங்களில் சுவை விருந்தாக கற்போருக்குப் படைத்து விருந்தளித்திருக்கிறார்.  இப்பாங்கு பாராட்டிற்குரியதாக, இந்நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்ற உத்தியாக விளங்குகிறது எனச் சொல்லலாம்.

‘இறையன்புக் களஞ்சியம்’ எனும் கலைக்களஞ்சியம் போன்ற நூலைத் தமிழ்த்தேனீயாகிய இரா. மோகன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.  இந்நூல் குறித்து இரவி அவர்கள் தன் ஆய்வுரையில் ‘இரசாயனம் கலக்காத தூய கனிச்சாறு இது, உடலுக்கும், உள்ளத்திற்கும் நலம் பயக்கும் நன்னூல் இந்நூல்’ எனும் இரவியின் சொல் விளையாட்டுக்கு ஒரு சபாஷ்.

‘முடிவெடுத்தல்’ எனும் நூலைப்பற்றி நாம் அறிந்துகொள்ள அவர் கூறும் வார்த்தைகள் இதுதான். ‘இறையன்பு அவர்கள் பேச்சாளர், எழுத்தாளர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த நிர்வாகி என்பதால் முடிவெடுத்தலை மிகத் தீர்க்கமாக எடுத்துரைக்கிறார்.  

எந்த முடிவையும் ஆழமாகத் சிந்தித்து சட்டென்று முடிவெடுக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக, ‘செம்மொழி சிறப்புப் பூங்கா’, ‘இரண்டு நிமிடங்களில் எடுக்கப்பட்ட முடிவு’ என்பதைச் சுட்டிக்காட்டி இந்நூலை வாங்க வாசகர்களே உடனே முடிவெடுங்கள் என முடித்திருப்பது அருமை.

‘சுயமரியாதை’ எனும் நூல் பற்றிக் கூறும்போது ‘உயர்வு என்பது பிறப்பால் வருவது அன்று.  உயிரியல் ஆபத்தால் ஏற்படுவது’ எனக்கூறும் இறையன்பு அவர்களின் சிந்தனைத் துளிகளை பன்னீராய் நம்மீது தெளித்து, எந்த மனிதன் யாவரையும் சமம் என்று கருதுகிறானே அவனே மனிதன், அவனே நல்ல மனிதன்’ என்பன போன்ற செய்திகளையும் எடுத்துக் கூறுகிறார்.  இத்தோடு இந்நூலில் இறையன்பு அவர்களின் சொந்த வாழ்வின் அனுபவங்களும் உண்டு எனச் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர் இரவி.

‘உலகை உலுக்கிய வாசககங்கள்’ எனும் நூலைப்பற்றிக் கூறும்போது, ‘102 வாரங்கள் தொடராக வந்த இந்நூலை முழுமையாகப் பார்க்கும்போது  ஒரே நூலில் இவ்வளவு செய்திகளா? என்று மேதகு அப்துல் கலாம் அவர்களே வியந்தார்கள் என்றால் இந்நூலின் பெருமைக்கு ஈடேது.  நூலாசிரியர் இறையன்பு கவிஞராகவும் திகழ்வதால் கட்டுரைகளில் கவித்துவம் மிளிர்கிறது என்கிறார் இரவி.

இலக்கியத்தில் மேலாண்மை, வைகை மீன்கள், அவ்வுலகம், நினைவுகள், கேள்வியும் நானே! பதிலும் நானே!, காகிதம், வனநாயகம், சின்னச் சின்ன வெளிச்சங்கள் எனும் தலைப்புகளில் வெளிவந்துள்ள இறையன்பு அவர்களின் நூல்களை, ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக’ நமக்கு அறிமுகம் செய்யும் நூலாசிரியர் ஹைக்கூ இரவி அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். 

ஏனெனில் இந்நூல்களை எல்லாம் தன் நேரத்தைச் செலவுசெய்து அவர் வாசித்திருக்கிறார், நேசித்திருக்கிறார், நமக்கும் படைத்துத் தந்திருக்கிறார்.

‘முடிவெடுத்தல்’ என்னும் நூல்பற்றிக் கூறவரும்போது, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தைச் சான்றாகக் காட்டும் இடம் மிக அருமை.  ‘மதுரையிலிருந்து இடமாறுதல் காரணமாகப் பெங்களூருக்குச் சென்றபோது பணிச்சுமையும், மனச்சுமையும் அவரை வாட்டினவாம்.  பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடைபெறலாமா என்று நினைத்தபோது, அவரது வாழ்க்கைத் துணைவியார், ‘விரைவில் நம் மகனின் திருமணம் நடக்கவிருக்கிறது.  திருமண அழைப்பிதழில் உங்கள் பணி என்று அச்சிட வேண்டிய இடத்தில் விருப்ப ஓய்வு என்று அச்சிட்டால் சரியாக இருக்குமா? என்று கேட்டார்களாம்.  அவர்களின் வார்த்தையால் விருப்ப ஓய்வு என்னும் முடிவுக்கு முடிவு கட்டினேன்’ என நகைச்சுவை உணர்வோடு ஆசிரியர் இரவி எடுத்துக்கூறும் பகுதி சிறு நாடகக் காட்சி.

இந்நூலுக்கு சிகரம் வைத்தாற்போல் கவிஞர் இரவியின் 17ஆவது நூலான ‘ஹைக்கூ உலா’ எனும் நூலுக்கு முதுமுனைவர் இறையன்பு I.A.S. அவர்கள் அணிந்துரை வழங்கியிருப்பது அழகுக்கு அழகு செய்வது போலவும், மரியாதைக்குப் பதில் மரியாதை தருவது போலவும் நமக்குத் தோன்றுகிறது.  அவ்வணிந்துரையை திரு. இரவி அவர்களின் நூலுக்குக் கிடைத்த விருதாகவே நாம் கருதலாம்.

முக்கனிகளில் ஒன்று பலா. இப்பழம், ஒரு பழமாக இருந்தாலும் அதில் சுளைகள் அதிகமாகவும், சுவை தேனின் இனிமையாகவும் இருப்பதைப் போல ‘இறையன்பு வானம்’ எனும் இவ்வொரு நூலில் எல்லாச் சுவைகளையும் விருந்தாக்கித் தந்திருக்கும் ஹைக்கூ இரவி அவர்களின் வாசிக்கும் பணி தொடரட்டும், தமிழை நேசிப்பவரின் எண்ணிக்கை கூடட்டும்.

*****
.

கருத்துகள்