கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா



கவிச்சுவை ! 

நூலாசிரியர்  இரா. இரவி !

மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா


பக்கம் 186.விலை ரூபாய் 120.  
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, 
 தியாகராய நகர், 
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : 
vanathipathippakam@gmail.com

தோரண வாயில் :

       சங்க இலக்கியப் பொற்களஞ்சியங்கள் பதினெட்டு ; சங்கம் மழுவிய காலத்தில் உதித்தெழுந்த நீதிக் குவியல்கள் பதினெட்டு ; மனித குலத்திற்கு சித்தாந்தம் எது? வேதாந்தம் எது? என தெரிவித்த சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ; ஆணினத்தோடு பெண்ணினமும் போட்டியிட்டு ஏறத் துடிக்கும் சபரிமலை சன்னதியின் படிகள் பதினெட்டு ; நாள்களில் எல்லாம் புனிதமான நாள் ; காவிரி அன்னை ஆர்ப்பரிக்கும் ஆடி பதினெட்டு.

 கவி இரவியின் இலக்கியச் சோலையில் பூத்த மலர்களின் எண்ணிக்கையும் பதினெட்டு.  ஆம்! இவரது நூல்களில் எல்லாம் சிறந்த நூல் இந்த ‘கவிச்சுவை நூல்.
ஏழு ஏழாய் ...

       மனித வாழ்வை எட்டு எட்டாகப் பிரிக்கச் சொன்னது ஒரு சித்தர் பாடல்.  ஹைக்கூ சித்தரான இரா.இரவியோ இந்த ‘கவிச்சுவை நூலை ஏழு ஏழாய்ப் பகுக்கிறார்.  அது அறுசுவை கடந்து ஏழுசுவையாய் நூலை வாசிப்போர் உள்ளத்தைத் திகட்ட வைக்கிறது.

எது முதல் எது வரை?

       ஆரம்பப் பள்ளி முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வரை. மனுநீதிச் சோழன் முதல் மகாத்மா காந்தி வரை, காகிதக் கப்பல் முதல் விண்வெளிக் கப்பலோட்டிய கலாம் வரை, சிட்டுக்குருவி முதல் சிதறடிக்கும் டயனோசர் வரை, உயிர்க்குயிராம் தமிழ்மொழி முதல் உருதுமொழி வரை, தித்திக்கும் மிட்டாய் முதல் திருநெல்வேலி அல்வா வரை, சிவகங்கை சீமை முதல் சிருங்கார ஜப்பான் வரை ; நூற்று எண்பத்தெட்டு பக்கங்கள் கொண்ட இந்த கவிச்சுவை நூல் ஆதி முதல் அந்தம் வரை சமூகத்தை அலசி ஆராய்ந்து செல்கின்றது.

மலரும் மகரந்தமும் :

       பழமொழியும், புதுமொழியுமாய், எதுகை, மோனை இயைபோடு, அநீதியைத் தட்டிக் கேட்டும், அர்த்தமுள்ளவற்றைத் தட்டிக் கொடுத்தும், விடுகதைகள் பங்கிற்கு விட்டுக் கொடுத்தும், ஆன்மீகம் தவிர்த்து, அறிவியல் இணைத்து, சமூகம் குறித்த சாதனையும், வேதனையுமாய் கவிச்சுவை நூல் நகர்கின்றது.  எங்கும் முரண் ; எதிலும் முரண் என்னும் விதமாய வரிக்கு வரி சுவை கூடுவதோடு, பக்கத்திற்குப் பக்கம் பெண்ணியமும் தலைகாட்டுகின்றது.
கவிஞரின் கரங்களில் ...

       இந்நூலில் மணல் வீடு கோட்டை ஆகின்றது! உப்பு மூட்டை, பஞ்சு மூட்டையாய் மாறி மனதை லேசாக்குகிறது.  கவிஞரின் கலைந்த கனவு கூட கரும்பாய் தித்திக்கிறது ; ஒற்றைச் சிறகு உயிர்பெற்று ஜெட் வேகத்தில் உயரப் பறக்க எத்தனிக்கிறது! கவிஞர் எழுதுகோலைக் கரத்தில் ஏந்தியவுடன் யுத்தம் கூட நிசப்தமாகி விடுகின்றது.  பட்ட மரம் துளிர்க்கின்றது.  பச்சை நிலமோ படம் காட்டுகின்றது.  ஓடுகின்ற குதிரை இருபுறமும் இறக்கை கட்டி பறக்கத் துவங்குகிறது.

சொல் விளையாடல்!

       “நிம்மதி என்பது பணத்தில் இல்லை!
       நின் மதியைப் பணத்திலிருந்து விலக்கு!
                   (ப. 43).

சாட்டையடி கவிதை :

       “இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
       எல்லா நாட்டுக்காரனும் ஆளுகின்றான் 
 இன்று                        (ப. 66)

கல்வெட்டுக் கவிதை வரிகள் :

       “மானே! தேனே! என்று மயக்கியது போதும்
       மகளிருக்கான இட ஒதுக்கீட்டைத் 
தாருங்கள்!            
                  (ப. 28)

போகிற போக்கில் :

       தமிழென்னும் கடலில், புரட்சி என்னும் படகினில், இயற்கை, சமூகம் என இரு துடுப்பு கொண்டு, கவிதாதேவி வழிகாட்ட இலக்கியப் பயணம் மேற்கொள்ளும் ஹைக்கூ சித்தராம் இரா. இரவி அவர்களின் எழுத்துலகம் ஒளிரட்டும் என இணையதள வாசகியர் சார்பாக வாழ்த்துகிறோம்.
.

கருத்துகள்