வேர்களோடு உறங்குபவள் நூல் ஆசிரியர் : கவிதாயினி குணா ஜானகி, இலண்டன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வேர்களோடு உறங்குபவள்
நூல் ஆசிரியர் : கவிதாயினி குணா ஜானகி, இலண்டன்!
நூல் விமர்சனம் :
கவிஞர் இரா. இரவி.
ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம்,
காந்தி நகர் முக்கியச் சாலை,
வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 80, விலை : ரூ. 100
******
நூலாசிரியர் கவிதாயினி குணா ஜானகி அவர்கள் இலண்டனில் வசிப்பவர். இந்நூலை பதிப்பாளர் இனிய நண்பர் வதிலை பிரபா வழங்கினார்.இந்நூலை “அன்னை பானுமதிக்கும், தந்தை தம்பையாவுக்கும்” காணிக்கை ஆக்கி பெற்றோர் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அணிந்துரை நல்கி உள்ளார்.
“தூங்க மறுக்கும் விழிகளின் தாகம் போக்க
உன் கவிதையொன்றை
பரிசாகக் கேட்டேன்
நீயோ
வான் சிரித்த நட்சத்திரப் பூக்களை
என்மடி மேல் பரப்பிவிட்டு
மனம் மூடிக் கொண்டாய்!
கவிதை கேட்ட காதலிக்கு நட்சத்திரங்களை பரிசளித்த காதலன் மிகவும் உயர்வானவன். நட்சத்திரம் போன்று மின்னிடும் கவிதைகள் என்றும் பொருள் கொள்ளலாம்.
மண்ணின் மணம்
விண் முழுவதும்
ஆழ்ந்து பரவிய போதும்
நிலவுக்கும் அவளுக்கு
மான தூரமென்னவோ
இன்னமும் கைகூடவில்லை !
மண்ணின் மணம் மழை தூரலின் போது உணரலாம். அந்த மணம் வான்வரை சென்று மணம் பரப்புகின்றது. ஆனாலும் நிலவை நெருங்க முடியவில்லை என்பதை உணர்த்தி உள்ளார்.
அவள் ஒவ்வொரு தடவையும்
விழும் போதெல்லாம்
தன்னைத் தூக்கி நிறுத்தும்
தோல்வியைப் பாராட்டுகிறான் !
விழும்பொழுதெல்லாம் எழுந்து நிற்பது தான் எழுச்சி. விழந்து விட்டோமென்று சோம்பி இருந்து விடக்கூடாது. முயற்சிகள் தோற்கலாம். முயற்சிக்க தோற்கக் கூடாது என்பதை உணர்த்தியது.
ஒருமுறையேனும்
உயிர் உதிருமுன்
விழி பொருத்திக் கொள் !
ஏனெனில் அவை தானமாக்கப்பட்டு விட்டன. காதல் கவிதையிலும் உன் தானம் விழிப்புணர்வு விதைத்தது சிறப்பு. மண்ணுக்கும் தீயுக்கும் இரையாகும் விழிகளை மனிதனுக்கு வழங்கிட மனம் இருப்பதில்லை பலருக்கு!
இறக்குமுன் ஒருமுறையாவது வந்து பார்த்துவிடு, இறந்து விட்டால் விழிகளை எடுத்துச் சென்று விடுவார்கள் என்று காதலனுக்கு விண்ணப்பம் விடுவது நன்று. மனமும் மௌனமும் பேசாத பொழுதுகளில் நம் நினைவுகள் பூத்திருப்பதை
பனியில் உறங்கிக் கொண்டிருக்கும்
மலர்கள் பரிமாறக் கூடும்.
மூளையின் ஒரு மூலையில் காதல்
நினைவுகள் என்றும் இருக்கும்
பசுமையான நினைவுகள்.
பேசாத மலர்களும் பேசும் காதல் பரவச நிலையை உணர்த்திடும் கவிதை நன்று. அந்தப் பூக்கரங்களைப் பற்றுகையில் அவை வாடிக் கொண்டிருப்பதை
நீ அறிந்திருக்கவில்லை
மீளவும் ஒரு பிறப்புக்கான
நீண்ட காலத் தவத்திற்காக
அது யாசித்ததையும்
ஏனோ நீ கண்டு கொள்ளவில்லை !
காதலனின் கவனக்குறை சுட்டிக்காட்டும் விதமாக வாழுவதை நீ அறியவில்லை என்கிறார். யாசித்ததை காதலன் கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். உள்ளத்தில் உள்ளது கவிதை. உண்மை தான், உள்ளத்து உணர்வுகளை புதுக்கவிதைகளாக வடித்துள்ளார்.
மிகவும் இலகுவாக
நீ என் மனத்தோடு இணைந்திருந்தாய்
ஆழ்ந்த நதியின் வேகத்தை
நான் உணரவில்லை
உன் அன்பின் பிரவாகத்தில்
கட்டுண்டிருந்தேன் !
.
காதலன் மிகவும் இலகுவாக மனத்தோடு இணைந்து இருக்கிறான். அவனது அன்பில் மகிழ்ந்து இருக்கிறாள் காதலி. காதல் வயப்பட்ட காலங்களில் இருவருமே பூமியில் நடந்தாலும் விண்ணில் மிதப்பார்கள். அது ஒரு கனாக்காலம். படிக்கும் வாசகர்களுக்கும் அவரவர் காதல் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெற்றுள்ளார், பாராட்டுக்கள்.
ஒரே ஒரு முறை பேசிவிடு
உன் வார்த்தைகளின் இனிமையை
நினைவில் கொணர்ந்தேன்
கவிதை மனம்
உனக்கான தேடலைத் தவிர்து
நினைவுகளின் சுமையாக
கால வெள்ளத்தில் தத்தளித்தது
உனக்கும் எனக்குமான பிரிவுகளில்
மீட்டப்படாத வீணையாக நானும்
நறும்பறுந்த இதயத்துடன் நீயும் பயணித்தோம்!
காதல் கைகூடி திருமணத்தில் சுபம் என்று முடிவது கொஞ்சம். பிரிவாகி வேதனையில் வீழ்வதே அதிகம். பிரிவின் வலியை கவிதைகளில் நன்கு உணர்த்தி உள்ளார்.
மீட்டப்படாத வீணை என்ற உவமை சிந்திக்க வைத்தது. பாராட்டுக்கள்.
தூரங்களால்
அளக்கவோ,
அழிக்கவோ முடியாத
பார்வைகளை நீ பரிமாறிக் கொள்வதாய் தான் உணர்கிறேன்.
பின்னிரவில் அமைதியாக
முன்னிரவின் நேர்மையாக
நீ உடன் இருக்கும் போது
அழகிய நினைவுகளுக்குப்
பஞ்சமென்ன!
பார்த்ததும் காதல் என்பார்கள். காதலுக்கு அடித்தளம் கண்கள் தான். பார்வையின் வீச்சை கவிதை வரிகளால் உணர்த்தி உள்ளார். காதலன் உடன் இருந்தால் அழகிய நினைவுகளுக்குப் பஞ்சம் இருக்காது என்பது உண்மை தான்,
என் ஒவ்வொரு சொற்களின் முடிவிலும்
காதலைப் பிணைத்திருந்தாய்
விழி நீரெடுத்து
நான் தந்த பாடலுக்குப் பரிசாக
மார்பில் முகம் புதைத்து
மெள்ளக் கேவினாய்!
காதலன் பேசிடும் ஒவ்வொரு சொற்களிலும் காதலை இணைத்து இருக்கிறான். காதலியின் கண்ணில் கண்ணீர் கண்டதும் மார்பில் முகம் புதைத்து காதலனும் அழுகிறான். காதல் காட்சியை கவிதை வரிகளின் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்.
துளித்துளியாகக் காதலை
என் பாதையெங்கும்
தெளித்து வைத்திருந்தவன் யாரோ?
பாதையெங்கும் மலர் தூவலாம் இயலும். காதலையே தூவி இருக்கிறான் காதலன் வித்தியாசமானவன். காதல் கவிதைகள் படிக்கப் பரவசம் தருபவை. எந்த வயதிலும் எல்லாக் காலத்திலும் படித்து மகிழலாம் காதல் கவிதை.
கருத்துகள்
கருத்துரையிடுக