தமிழ் உலா! நூல் ஆசிரியர் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழ் உலா!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
நூல் ஆசிரியர் :
பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : 242, விலை : ரூ. 160
******
தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் வழங்கி உள்ள தமிழ் உலா. இலக்கியச் சுற்றுலா. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என மூன்று வகை பாக்களையும் சிந்தைக்கு விருந்தாகவும் உயிர் நீட்டிக்கும் மருந்தாகவும் வழங்கி உள்ளார்.
வானதி பதிப்பகம் தமிழ்த்தேனீ இரா.மோகன் வெற்றிக் கூட்டணியின் 46-ஆவது நூல் இது. இருவருக்கும் பாராட்டுக்கள். நூலிற்கு பொருத்தமான அட்டை. வள்ளுவர் கோட்டத்தில் தேரில் அமர்ந்து தமிழ் உலா செல்லும் வாய்ப்பு. பேராசிரியர் வ.ஜெயதேவன் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார்.
நூலினை ஐந்து பகுதிகளாகப் பிரித்து கவிதைத் துறைமுகம் 10 தலைப்பிலான கட்டுரைகள், செவ்விலக்கியப் பேழை 10 கட்டுரைகள், சான்றோர் அலைவரிசை 11 கட்டுரைகள், தன்னம்பிக்கை முனை 5 கட்டுரைகள் ஆக மொத்தம் 36 கட்டுரைகள் முத்தாய்ப்பானவைகள்.
நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனிதேநேயம் என பல்வேறு இதழ்களில் மாதாமாதம் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். என் போன்ற இலக்கிய நண்பர்களுக்கு தட்டாமல் அணிந்துரைகள் வழங்கி வருகிறார். இவற்றை தொகுத்து நூலாக்கி ‘தமிழ் உலா’ என்றா பெயரில் ‘இலக்கிய பலா’வை வழங்கி உள்ளார். எழுத்து, பேச்சு இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார்.
சமீபத்தில் மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவிற்கு நானும் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் சென்றிருந்தோம். திரு.ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்கள் எழுதிய ‘பன்மாயக் கள்வன்’ நூல் வாங்கினார்கள். அந்த நூல் படித்து முடித்து, அதற்கான ஆய்வுரை உடனடியாக கவிதை உறவில் பிரசுரமானது.
அக்கட்டுரை இந்த நூலிலும் இடம்பெற்றுள்ளது. தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். உடனுக்குடன் பதிவு செய்து வருகிறார்.
இந்த நூலில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள அக்கட்டுரையிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு :
“ஊருக்கு நான் அரசன்
உனக்கு அடிமை
என்கிறான்
வெல்லப் பாகுமொழி
என்னை
வென்றெடுத்த பாகுபலி”
அரசன் x அடிமை, ‘வெல்லப்பாகுமொழி’, ‘வென்றெடுத்த பாகுபலி’ அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும் களி நடம் புரிந்து நிற்கும் ஓர் அற்புதமான காதல் ஓவியம் இது”.
ஒரு படைப்பாளிக்கு இதை விட வேறு மகிழ்ச்சி இல்லை. கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும் வராத மகிழ்ச்சி. படைப்பை படித்துவிட்டு பேராசிரியர் பாராட்டும் பாராட்டு மொழி கோடிக்கும் மேல். இக்கட்டுரையை திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தபோது மிகவும் மனம்மகிழ்ந்து நூலாசிரியர் பேராசிரியர் மோகன் அவர்களை பாராட்டினார்கள்.
இப்படி பல படைப்பாளிகளுக்கு மகிழ்ச்சியை வரவழைத்துள்ள ஆய்வு நூல் இது.
தினமணி ‘கவிதை மணி’ இணையத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல், வாரா வாரம் தலைப்பு வழங்கி, கவிஞர்களின் கவிதைகளை பதிவு செய்து வந்தவர் கவிஞர் திருமலை சோமு. தற்போது சீனாவில் வானொலியில் பணியாற்றி வருகிறார். அவர் எழுதிய ‘மனசுக்குள் பெய்யும் மழை’ என்ற நூல் படித்து வடித்த கட்டுரை சிறப்பு.
சீனாவிலிருந்து மனமகிழ்ந்து நெகிழ்ந்து புலனத்தில் பாராட்டினார்.
எல்லா
பாவங்களையும் தொலைக்க
நதியில் நீராடச் சொன்னார்கள்
நதிகளை தொலைத்த
பாவத்தை
எப்படித் தீர்ப்பது?
எனப் பொட்டில் அடித்தாற்போல் கேட்கும் இக்குறுங்கவிதையின் வாயிலாக இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களை எல்லாம் தம்பால் ஈர்த்தவர் திருமலை சோமு”.
இதனைப் படித்தபோது புஷ்கரணி என்ற பெயரில் நீராடியவர்கள் நினைவிற்கு வந்தார்கள். பாவம் செய்யாதிருப்பதே சிறப்பு. பாவம் போக்க மூழ்குவதில் இல்லை சிறப்பு. இப்படி பல நினைவுகள் வந்து போயின.
சங்க இலக்கியம் எனும் அருமருந்தில் எளிமை என்ற தேன் தடவி, இனிமையாக வழங்கி உள்ளார்.
முடிவாக தலைவனின் முறையீட்டினையும் தனது உள்ளத்து உணர்வையும் கருத்தில் கொண்டு, தலைவி தலைவனை ஏற்றுக்கொள்ளல் வேண்டும் என்பது தோழியின் வேண்டுகோள்”.
இங்ஙனம் உளவியல் நுட்பமும் பொருந்திய பாடல்கள் குறுந்தொகையில் நிறைய உள்ளன.
“ஒரு நாள் வாரலன் ; இரு நால் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி என்
என்ற குறுந்தொகை பாடலை எழுதி,
‘பன்மாயக் கள்வன்’ என்ற திருக்குறளை
மேற்கோள் காட்டி விளக்கிய விதம் அருமை.
திருவள்ளுவரின் அரசியல் சிந்தனைகள் கட்டுரை சிறப்பு. இன்றைக்கு அரசாள்வோர் அவசியம் படித்து திருந்த வேண்டிய அறிவார்ந்த கட்டுரை.
மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை தமிழ்த்தேனீ இரா.மோகன், ‘பேராசிரியர் மு.வ.-வின் மொழி ஆளுமை’ கட்டுரையில் இடம்பெற்றுள்ள மு.வ.-வின் கருத்து.
“நம் வாழ்க்கையில் மூன்று கூறுகள் உள்ளன. ஒன்று : உலகத்தால், சுற்றுப்புறத்தால் அமையும் வாழ்க்கைப்பகுதி. மற்றொன்று : உடம்பால் அமையும் பகுதி. இன்னொன்று : மனத்தால் அமையும் பகுதி”.
‘தஞ்சை சி.நா.பீ. உதயதுல்லா-வின் எண்ணப் பூக்கள்’ கட்டுரையில் இடம்பெற்றுள்ள கவிதை ஒன்று.
அழுது கொண்டே பிறந்து
மறையும் போது பலர் அழுமாறு
மறைதலே
சிறந்த வாழ்க்கை!
ஆம், ஒருவரின் இறப்பிற்கு பலரும் அழ வேண்டும், மகிழக் கூடாது.
மனதில் கவலை இருந்தால் இந்த நூலை வாங்கி வாசியுங்கள், கவலை காணாமல் போகும் ; இன்பம் பிறக்கும் ; மகிழ்ச்சி பொங்கும்...
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக