பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்!
கவிஞர் இரா. இரவி.
******
‘மணிவிழா’ நாயகர் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களுக்கு அகவை அறுபதா? நம்ப முடியவில்லை. துடிப்பு மிக்க இருபது வயது இளைஞன் போல செயல்பட்டு வரும் செயல்வீரர். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களைப் போல உணர்ச்சிமிக்க பாடல்களை வடித்து வரும் வல்லவர். மனதில் பட்டதை தயக்கம் எதுவுமின்றி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசியும் எழுதியும் வருபவர்.
கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர். மூடநம்பிக்கைகளை பாடல்களில் சாடி வருபவர். மூவடி என்ற துளிப்பா இதழ் ஹைக்கூ இதழ் நடத்தி வருபவர். தினந்தோறும் துளிப்பாக்களை முகநூலில் பதிவு செய்து வருபவர். துளிப்பா நாளிதழ் நடத்தி தினமும் துளிப்பாக்களைப் பதிவு செய்தவர்.
துளிப்பா நூற்றாண்டு விழாவை புதுவையில் சீரும் சிறப்புமாக நடத்திக் காட்டியவர். துளிப்பா பாவலர்களுக்கு விருதுகள் வழங்கி மகிழ்ந்தவர். எனக்கும் வழங்கினார். மாதாமாதம் பாட்டரங்கம் நடத்தி வருபவர். நூல்கள் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி வருபவர். ஓய்வறியாத சூரியன் போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். துளிப்பா வடிப்பதில் தனிமுத்திரை பதித்து வருபவர். தான் மட்டுமன்றி தன் மனைவியையும், மகள் தமிழ்மொழியையும் துளிப்பா எழுத வைத்து நூல்கள் வெளியிட்டு வருபவர்.
" தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்" என்ற பொன்மொழிக்கு ஏற்ப புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் புதல்வி தமிழ்மொழி ஹைக்கூ நூல் எழுதி விருதும் பாரட்டும் பெற்று வருகிறார். சென்னை கன்னிமாரா நூலகத்தில் துளிப்பா விருது நான் பெற்றபோது செல்வி தமிழ்மொழியும் பெற்றார்கள்.
பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன், பாட்டுக்கொரு புலவன் பாரதி வாழ்ந்த புதுவைக்கு நாள்தோறும் பெருமை சேர்த்து வருபவர். மலர்களையும் செடிகளையும் இயற்கைக் காட்சிகளையும் படம்பிடித்து முகநூலில் பதிவுசெய்திடும் நல்ல பதிவாளர்.
புதுவையில் எங்கு அநீதி நடந்தாலும் உடன் பொங்கி எழுந்து கண்டனத்தை உரக்கப் பதிவு செய்து விடுவார். தேனீயைப் போல சுறுசுறுப்புத் திலகமாக விளங்குபவர். நூல்கள் வெளியிடுவதில் என்றும் சோர்வு அடையாதவர். இனிய நண்பர் கன்னிக்கோவில் இராசாவுடன் இணைந்து, ‘தேனடை’ என்ற நூலின் மூலம் ஹைக்கூ கவிதை எழுதும் ஹைக்கூ கவிஞர்கள் வெளியிட்ட ஹைக்கூ நூல்கள் பற்றிய அரிய தகவல்களை, நூல்கள் வெளியான வருடம் உள்ளிட்ட புள்ளிவிபரங்களுடன் ஆவணமாக தொகுத்து வழங்கியவர்.
முகநூலில் பிடித்த நிழற்படத்தை பதிவுசெய்து அதற்கு துளிப்பாப் போட்டி நடத்தியவர். நானும் அவர் பதியும் நிழற்படங்களுக்கு ஐந்து துளிப்பாக்கள் எழுது முகநூலில் பதிவுசெய்து வந்தேன். அத்துளிப்-பாக்களைத் தொகுத்து ‘ஹைக்கூ 500’ என்ற எனது 19வது நூல் தயாராகி வருகின்றது. அந்நூலிற்கு பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களும், தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களும் மிகச்சிறப்பான அணிந்துரை நல்கி உதவி உள்ளனர்.
சென்னையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களுக்கு புதுவையில் இருந்து வந்து தவறாமல் கலந்து கொள்வார். இனிய நண்பர்கள் பொதிகை மின்னல் ஆசிரியர் பாவலர் வசீகரன், மின்மினி இதழ் ஆசிரியர் பாவலர் கன்னிக்கோவில் இராசா நடத்தும் இலக்கிய விழாக்கள் இவர் இல்லாமல் நடக்காது.
தமிழ் தமிழர் தமிழ்நாடு மூன்றின் மீதும் அளவற்ற பற்று மிக்கவர். தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டிற்கு ஒரு இன்னல் என்றால் உடன் தட்டிக்கேட்கத் தயங்காதவர். சமரசத்திற்கு இடமின்றி பகுத்தறிவுக் கொள்கையில் குன்றென நிற்பவர்.
இவரது துளிப்பாக்கள் கல்லூரி பாட நூலில் இடம்பெற்றுள்ளன. துளிப்பா ஆய்வாளர்கள் ஆய்வு செய்து உள்ளனர். பட்டிமன்ற மேடைகளில் இவரது துளிப்பா மேற்கோள் காட்டி வருகின்றனர். இவரது பல துளிப்பாக்களில் மிகவும் புகழ்பெற்ற துளிப்பா ஒன்று.
கொடி தந்தீர்
குண்டூசி தந்தீர்
சட்டை?
குண்டூசி தந்தீர்
சட்டை?
சட்டை என்ற சாட்டையடி கேள்வியின் மூலம், ஏவுகணைகள் பல ஏவியது போதும், நாட்டின் வறுமையை, ஏழ்மையை ஒழிக்க முன்வாருங்கள் என்று ஆள்வோருக்கு அறிவுறுத்தும் சிறப்பான துளிப்பாக்கள் எழுதி வருபவர்.
பதச்சோறாக ஒன்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். இவரது பல துளிப்பா நூல்களுக்க்கு விரிவான விமர்சனம் எழுதி தமிழ்ஆதர்ஸ் டாட்காம் Www.tamilauthors.com என்ற உலகப்புகழ் இணையம் உள்பட பல்வேறு இணையங்களிலும் வலைப்பூவிலும் பதிவு செய்துள்ளேன்.
‘ஹைக்கூ 500’ என்ற நூலிற்கு பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் வழங்கிய அணிந்துரையைப் படித்து விட்டு தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் எண்ணம், சொல், செயல் வேறுபாடு இல்லாத மாமனிதர். புதுவையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு ஓய்வின்றி உழைத்து வரும் செயல் மறவர்.
மணி விழா நாயகருக்கு மணியான வாழ்த்துக்கள். துடிப்புடன் செயல்படும் தங்கள் வருங்காலகங்களில் இன்னும் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கின்றேன். உங்கள் உடலுக்குத் தான் வயது 60. உங்கள் உள்ளத்திற்கு வயது என்றும் 20 தான். புத்துணர்வுடன் செயல்படும் புதுவை இளைஞருக்கு வாழ்த்துக்கள் ; பாராட்டுகள்...
கருத்துகள்
கருத்துரையிடுக