மிடறு மிடறாய் மௌனம்!
நூல் ஆசிரியர் : கவிஞர் வதிலை பிரபா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம்,
காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 64, விலை : ரூ. 80
******
‘மிடறு மிடறாய் மௌனம்’ பெயர் மட்டுமல்ல, நூலின் வடிவமைப்பு, உள் அச்சு என யாவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளன. பாராட்டுக்கள். திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி அணிந்துரை நல்கி உள்ளார்.
அவர் அணிதுரையில் குறிப்பிட்டபடி கவிஞர் வதிலை பிரபா அவர்களின் முகநூலில் இக்கவிதைகளை வாசித்தவன் நான். நூலாக்குங்கள் என்று கருத்தும் வழங்கி இருந்தேன். நூலாகக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
காதல் கவிதையில் மானே தேனே மயிலே மயிலே என்ற வழக்கமான வர்ணனைகளை விட்டு, வித்தியாசமாக புதுக்கவிதை எழுதி உள்ளார். தெளிவுரை தேவை இல்லை. எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாகவே கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.
மௌனம் நிரப்பிய கோப்பை
கொஞ்சம் கொஞ்சமாய்
பருகிக் கொண்டிருக்கிறாள்
காலியாகிறேன் நான்!
முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. காலியாகிறேன் என்பதற்குக் பல பொருள் உள்ளன. ஒன்றும் இல்லாமல் காலியாகி விடுகிறேன். மௌனத்தை உடைத்து பேசும் தருணம். எப்படியும் பொருள் கொள்ளலாம். கவிஞர் வதிலை பிரபா வித்தியாசமாக சிந்தித்து வேறுபட்டு புதுக்கவிதை எழுதி உள்ளார்.
உன் மௌனத்தால்
என்னை
நிரப்பிச் சென்று விட்டாய்
நிரம்பாமல் திரும்பிக் கொண்டிருக்கிறேன்
நான்!
தலைவன், தலைவியைக் கண்டதும் ஒன்றும் பேசாமல் கடந்து சென்றாலும் தன்னைக் கடத்திச் செல்கிறாள் என்பது போல சங்க இலக்கிய காதல் காட்சியைப் புதுக்கவிதையாக்கி உள்ளார்.
சிம்னி விளக்கில்
அலைந்து கொண்டிருக்கிறது
நெருப்பின் மௌனம்
நீ
என்னுள் ஒளிர்ந்து
கொண்டிருக்கிறாய்!
காதலித்தவர்கள் அறிந்த ஒன்று. காதல் காலங்களில் காதலி முகமோ, காதலன் முகமோ உள்ளத்தின் உள்ளே ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கும். எதைப் பார்த்தாலும் துணையின் முகமே வந்து நிற்கும். மலரும் நினைவுகளை மலர்விக்கும் கவிதை நன்று.
பெருத்த சப்தத்துடன்
உடைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் மௌனத்தை!
மௌனம் சப்தம் என முரண்சுவை உள்ளது. பேசாமலே மௌனம் சாதிக்கும் காதலியின் மௌனத்தை உடைக்க காதலன் பெருத்த சப்தம் செய்வது இயல்பான ஒன்று தான்.
சொற்களை எரித்து விடு
சாம்பலாய் உதிரும் மௌனம்!
விழி இரண்டும் பேசுகையில் இதழ்களின் உச்சரிப்பு அவசியமன்று. சொற்களை பேசாதிருந்தால் மௌனம் தான். பேசிய சொற்களை விட பேசாத மௌனத்திற்கு பல பொருள் உண்டு. மௌனன் என்ற ஒற்றைச் சொல்லை வைத்து சொல் விளையாட்டு விளையாடி புதுக்கவிதைகளை புதுமையாக வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
விளக்கை
பற்ற வைப்பது போன்று
பற்ற வைக்கிறாள்
மௌனத்தை
மெல்ல ஒளிரத் தொடங்கியது
மேலும்
தன் புன்னகையால் தூண்டுகிறாள்
இன்னும் பிரகாசமாய் ஒளிர்ந்தது
அவனும்
அணையாமல்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள்.
பாவையின் பார்வையே பரவசம் தான் புன்னகை புரிந்தால், அதனைக் கண்டால் காதலன் உள்ளத்தில் ஒளி என்பது ஒளிர்வதும் இயல்பான ஒன்று தான்.
பலத்த ஓசைகளுக்கு
நடுவே தான் உன்
மௌனத்தைப் பிரித்தெடுக்கிறேன்
ஆழப்பெருங்கடலின்
பெரும் ஆரவாரமும்
பொங்கும்
பிரவாகமாயும்
நிரம்பியிருக்கிறது
உன் மௌனம்!
எத்தனையோ குரல்கள் கேட்டாலும் காதலியின் குரல் தனியாகக் கேட்கும். ஆயிரம் முகங்களிலும் காதலியின் முகம் தனித்தே தெரியும். அதுபோல மௌனமும் அறிவேன் என்கிறார். மௌனத்தின் பொருளும் விளங்கும் என்கிறார். காதலித்தவர்கள் உணரும் உன்னத வரிகள். பாராட்டுக்கள்.
உன்
இதழ் உதிர்க்கும்
ஒற்றை
வார்த்தையில்
இல்லாத வன்மம்
உன் மௌனத்தில் இருக்கிறது.
மௌனம் நன்று. நன்று என்றவர் மௌனத்தில் வன்மம் உள்ளது என்கிறார். ஆம் காதலிக்கிறேன் என்ற ஒற்றை சொல்லை உதிர்க்காமல் நீண்ட காலமாகவே மௌனம் சாதித்து வந்தால் அது வன்மம் தான். காதலன் நொந்து நூலாகி விடுவான். எனவே மௌனம் எப்போதும் இனிப்பதில்லை.
சொற்கள் மீறுமா
உன் மௌனம்
சொற்களை பூமியில்
பெரும் சப்தத்துடன்
பூக்கட்டும்
மௌனம் கீறி
நம் காதல்!
மௌனம் உடைந்தால் தான். காதல் மலர் மலரும் எனவே மௌனமான ஆள் அரவமற்ற இடத்தில் மௌனம் உடைத்து சொற்கள் பிறக்கட்டும். காதல் பூக்கள் பூக்கட்டும்.
செல்லும் இடமெல்லாம்
எனக்கு மௌனத்தையே
தந்து விட்டுச் செல்கிறாய்
ஓயாமல்
பேசிக் கொண்டிருக்கும்
உன் மௌனத்தை
என்ன செய்வது?
கவிதைகள் முழுவதும் மௌனம் என்ற சொல்லும் முரண்சுவையும் நிரம்பி உள்ளது. படிக்கும் வாசகர்களின் மன மௌனத்தை உடைத்து விடுகின்றன கவிதைகள். காதல் பற்றிய நினைவலைகளை உள்ளத்தில் எழுப்பி வெற்றி பெறுகின்றன. ஓயாமல் பேசுதல் மௌனம் முரண்சுவை நன்று.
மௌனம் கொடுத்த
பற்றி எரியும் காதலில்
வளருமா? காமம்?
சின்ன சுடர் போதும்
உன்னுள் விளக்கேற்ற
பற்ற வை
மௌனம் ஒளிரும்!
பற்றவை பற்றி எரியும் என்று எழுதாமல் ஒளிரும் என்றா சொல்லாட்சி அருமை. மௌனம் என்று ஒற்றைச் சொல் மூலம் மௌன யுத்தம் நடத்தி உள்ளார். மிடறு மிடறாய் மௌனம் படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் மிடறு மிடறாய காதல் பற்றிய பசுமை நினைவுகளை மலர்வித்து வெற்றி பெற்றுள்ளார். நூலாசிரியர் வதிலை பிரபா அவர்களுக்கு பாராட்டுக்கள்
.
.
கருத்துகள்
கருத்துரையிடுக