பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்!
நூல் ஆசிரியர்கள் :
பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் !
பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கம் : 120, விலை : ரூ. 120
******
'பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்' என்ற இந்த நூல் இலக்கிய இணையர், அதாவது முதுமுனைவர்வெ. இறையன்பு மொழியில் "மற்றவர்களை இயக்கும் இணையர்" தமிழ்த்தேனீ இரா.மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இருவரும் எழுதிய 12 கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ளது.
இந்நூலிற்கு அணிந்துரை நல்கியுள்ள பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள்தான் இந்நூல் வரக்காரணமாக இருந்துள்ளார்கள். இலக்கிய இணையர்களிடம் ‘சிலப்பதிகாரம் பற்றி நூல் எழுதுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதன் காரணமாக சிலப்பதிகாரம் பற்றி ஏற்கனவே எழுதிய கட்டுரைகளையும் புதிய கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கி அவரிடமே அணிந்துரையும் பெற்று விட்டனர்.
அணிந்துரையிலிருந்து சிறு துளிகள் : “இலக்கிய உலகில் இரு சுடர்களாக ஒளிரும் இணையர் வழங்கிய இலக்கியப் பரிசு என்றே போற்றுகிறேன்; வழக்கம்போல வனப்புற பதிப்பிக்கும் வானதி பதிப்பகம் ஓங்கி உயர்வதற்கு இந்நூலும் துணை செய்யும் எனத் துணிகிறேன்.”
அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு யாவும் மிகவும் நேர்த்தி. இலக்கிய இணையர் – வானதி பதிப்பகம் வெற்றிக்கூட்டணியின் வெற்றிப் பதிப்பாக வெளிவந்துள்ளது. சிலப்பதிகாரத்தின் சிறப்பை இயம்பிடும் ஆகச்சிறந்த நூலாக வெளிவந்துள்ளது.
முக்கிய நகரங்களில் கம்பன் கழகம் தோற்றுவித்து, கம்ப இராமாயணம் பரப்பி வருகின்றனர். ஆனால் சிலப்பதிகாரம், இராமாயணம் அளவிற்கு இன்னும் புகழ்பெறவில்லை. தமிழர்களின் காப்பியம் தமிழர்களை இன்னும் சரியாக சென்றடையவில்ல்லையே என்ற மனக்குறை எனக்கும், தமிழறிஞர்களுக்கும் உண்டு. அந்த மனக்குறையினை நீக்கிடும் வண்ணமாக வராதுவந்த மாமணியாக இந்நூல் வந்துள்ளது, பாராட்டுக்கள்.
சிலப்பதிகாரம் முழுமையாக படித்திராத பலருக்கும் நல்ல வாய்ப்பாக, சிலப்பதிகாரம் பற்றி அறிந்துகொள்ள உதவியுள்ள நூல். மகாகவி பாரதியாரின் வைரவரியினை ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்ற தலைப்பில் முதல் கட்டுரை தொடங்கி உள்ளனர். இந்த நூலும் வாசகர்களின் ‘நெஞ்சை அள்ளும் நூல்’ என்றால் மிகையன்று.
பேச்சு, எழுத்து என்ற இருதுறையிலும் இலக்கிய இணையர் தனி முத்திரை பதித்து வருகிறார்கள். இந்நூலின் மூலம் தமிழன்னைக்கு மற்றுமொரு மகுடத்தை வழங்கி உள்ளனர். ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைவூட்டும் வண்ணம், தமிழர்களின் சிறப்பை, தமிழின் சிறப்பை, தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பை இயம்பி உள்ளனர்.
மற்ற மொழியில் உள்ள காப்பியங்கள் எல்லாம், ஒன்று-கடவுள் பற்றி இருக்கும் அல்லது நாடாண்ட மன்னரைப் பற்றி இருக்கும். ஆனால் சிலப்பதிகாரம் தான் குடிமக்கள் காப்பியம். சாதாரண குடிமகன் பற்றிய வரலாற்றை எடுத்தியம்பிய காவியம். காலம் உள்ளவரை நினைவில் நிற்கும் காப்பியம். பெண்மையைப் போற்றும் காப்பியம்.
குடிமக்களில் ஒருத்தி, தன் கணவன் அநியாயமாகக் கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்திஅறிந்து கொதித்தெழுந்து மன்னனிடம் நீதிகேட்ட வரலாறு காப்பியமானது. பண்டைக் காலத்திலேயே குடிமக்கள் உரிமைக்கு முதல்குரல் எழுப்பியவள் கண்ணகி. இன்றைய மக்களாட்சி முறைக்கு கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுத்தந்தவள் கண்ணகி.
சிலப்பதிகாரத்தில் உள்ள மிக முக்கிய வரிகளை எடுத்துக்காட்டி விளக்கம் கூறி ஆய்வு கட்டுரைகளை வழங்கி உள்ளனர்.
இது ஒரு நாடகக் காப்பியம். திங்களைப் போற்றும், ஞாயிறு போற்றுதும், பூம்புகார் போற்றுதும் என்ற தன்மைப் பன்மை நடையில் தொடங்குகின்றது. மங்கல வாழ்த்துப் பாடலின் தொடக்கம். இப்படி பல்வேறு கோணங்களில் சிலப்பதிகார ஆய்வினை நிகழ்த்தி உள்ளனர்.
கட்டுரை தொடங்கும் போது சிலப்பதிகாரம் குறித்து அறிஞர்கள் கூறிய முக்கிய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். கட்டுரையைப் படிக்கும் ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளன. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு முன்பாக கண்ணகியை அறிமுகம் செய்துள்ளார் என்ற நுட்பமான செய்தி வரை நூலில் பதிவு செய்துள்ளனர். மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம் பற்றிய விளக்கம் நூலில் உள்ளன.
சிலப்பதிகாரம் பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதிய கருத்துக்கள் மேற்கோளாகக் காட்டியுள்ளனர். மு.வ., தெ..பொ.மீ., பிரபஞ்சன், பிரபாகரன், எஸ். வையாபுரி பிள்ளை, கா. செல்லப்பன், எஸ். இராமகிருஷ்ணன், ப. அருணாசலம், சரளா ராஜகோபாலன், ம.பொ.சி., வாலி, இரா.தண்டாயுதம், கா.மீனாட்சிசுந்தரம், பூவண்ணன் என பலரின் பல்சுவை கருத்துக்கள். சிலப்பதிகாரம் தொடர்பாக எழுதியவற்றை எடுத்து எழுதி உள்ளனர்.
சிலப்பதிகாரம் தொடர்பாக வெளிவந்த பல்வேறு நூல்களைப் படித்து அதிலுள்ள மகர்ந்தங்களைச் சேகரித்து இலக்கியத் தேனாக வழங்கி உள்ளனர். உற்றுழி உதவிய நூல்கள் என்று 21 நூல்களின் பட்டியலும் நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளன.
“புதிய தமிழ்க்கவிதைகளில் சிலப்பதிகாரத்தின் தாக்கம்” என்ற கட்டுரையில் பல புதுக்கவிதைகளும் மேற்கோள் காட்டி உள்ளனர். அவற்றில் சில :
சிலம்பை
உடைத்து என்ன பயன்?
அரியணையிலும் அந்தக் கொல்லன்!
- சூரியப் பிறைகள் (ப.65) ஈரோடு தமிழன்பன் !
கண்ணகி உடைத்த
சிலம்பின் பரல்கள்
பாண்டியன் விரலிம் மோதிரமாய்!
- சிறகுகளின் சுவடுகள் (ப.58) கவிஞர் துறவி !
கண்ணகிக்கு கோயில்
மாதவிக்கு?
அரணமனை !
- காலடிச்சத்தம் (ப.117) கவிஞர் நாராயணன்!
யானோ அரசன் ; யானே கள்வன் அந்தக்காலம் !
இந்தக்காலம்
யானோ கள்வன் ; யானே அரசன் !
ஊர்வலத்தில் கடைசி மனிதன் (ப.25) கவிஞர் எஸ். ஷங்கர நாராயணன் !
சங்க இலக்கியம் தொடங்கி ஹைக்கூ கவிதைகள் வரை மேற்கோள் காட்டி வடித்துள்ள சிறப்பான நூல்.சிலப்பதிகாரத்தின் சிறப்பை சீர் தூக்கிப் பார்த்து சிந்தியில் பதியும் வண்ணம் சிங்கார சித்திரமாக வடித்துள்ள இலக்கிய இணையருக்கு பாராட்டுக்கள் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக