பட்டம் பறக்கும் பட்டம்! நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப. ஜெ. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.




http://www.tamilauthors.com/04/462.html

.
பட்டம் பறக்கும் பட்டம்!

நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப. ஜெ.


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  

பூவரசு வெளியீடு, 30/8, கன்னிக்கோயில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை – 18. 

******
நூலாசிரியர்  இந்நூலை அன்பு தாய்க்கும், அறிவு தந்தைக்கும் காணிக்கை ஆக்கி உள்ளார்.  எழுத்தாளர்கள் பி. வெங்கட்ராமன், காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, இளசை கிருஷ்ணமூர்த்தி, கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் நூலிற்கு அணிந்துரை நல்கி உள்ளனர்.

நூலாசிரியர் கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. அவர்கள் இன்றைய குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் குழந்தைகள் பாடலாக வடித்துள்ளார்.

60 தலைப்புகளில் பாடல் எழுதி உள்ளார். இதில் சில பாடல்களைப் பாடி இசையமைத்து யூடூபில் வெளியிட்டு உள்ளார்.

தினசரி பதக்கங்கள்!

      ஆதவன் உதிக்குமுன் எழுந்திடுவோம்
      காலைக் கடன்களை முடித்திடுவோம்
      உடற்பயிற்சிகள் செய்திடுவோம்
      குளிர்ந்த நீரில் குளித்திடுவோம்!

குழந்தைகள் அதிகாலையில் எழ வேண்டும், காலைக்கடன் முடிக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என அறிவுறுத்தும் வண்ணம் மனதில் பதியும் வண்ணம் எழுதியது நன்று.

      மாநிலச் சின்னங்கள் !

      தமிழ்நாட்டு விலங்கு என்ன? நீலகிரி வரையாடு
      தமிழ்நாட்டு பறவை என்ன? மாடபுறா
      தமிழ்நாட்டு மலர் என்ன? காந்தள்
      தமிழ்நாட்டு மரம் என்ன? பனை மரம் !

      குழந்தைகளுக்கு பொது அறிவை விதைக்கும் வண்ணம் பல பாடல்கள் வடித்துள்ளார்.

      கைபேசி !

      அப்பா கையில் கைபேசி
      அம்மா கையில் கைபேசி
      விதவிதமாய் கைபேசி
      வண்ண வண்ண கைபேசி
      
கைவீசம்மா கை வீசு.என்ற குழந்தைப் பாடல் மெட்டில் பாடும்படி நவீன கைபேசி பற்றியும் பாடல் வடித்துள்ளார்.

      பல பொருட்களை பாடலின் மூலம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

      விண்வெளி ஓடம் !

      வானில் சீறி பாய்ந்து
      சுற்றுப்பாதை அடைந்திடும்
      சுற்றுப்பாதை அடைந்ததும்
      பூமியை வலம் வந்திடும்!

அறிவியில் கருத்துக்களை எளிமைப்படுத்தி சிறுவர்களும் விளங்கும் வண்ணம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

      கடிகாரம், இருப்பூர்தி, கணினி, நிறங்கள், கப்பல் என எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்து பொதுஅறிவை வளர்க்க உதவி உள்ளார். 

இடமும் பொருளும் !

காஞ்சிக்கு பட்டு 
மதுரைக்கு மல்லி
      திருநெல்வேலிக்கு அல்வா 
ஈரோடுக்கு மஞ்சள்
      திருப்பதிக்கு லட்டு 
பத்தமடைக்கு பாய் !

எந்த ஊரில் எது சிறப்பு என விளக்கும் வண்ணம் வடித்த பாடல்கள் நன்று. குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் எளிய சொற்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளார். 

நிறங்கள் 
நீல நிற வானம் 
பச்சை நிற கிளி
      கருப்பு நிற காகம் 
வெள்ளை நிற பால்
      சிகப்பு நிற தக்காளி. !

பொருளை மட்டுமன்றி அதன் வண்ணத்தையும் எண்ணத்தில் பதியும் விதமாக வடித்துள்ளார்.

திருக்குறள்! 

இரண்டே வரிகள் குறளாம்
      திரண்ட பொருள் கொண்டதாம் 
அறம், பொருள், இன்பம்
      மூன்று பகுதிகள் உள்ளதாம்!

உலகப்பொதுமறையான திருக்குறளை சிறார்களுக்கு அறிமுகம் செய்து வைத்து சிறப்பையும் உணர்த்தி உள்ளார்.

பட்டம்!           (நூலின் தலைப்பில் உள்ள கவிதை!)

பட்டம் படிக்கும் பட்டம் 
வட்டம் அடிக்கும் பட்டம்
      தரையில் இருந்து யெம்பி 
வானில் பறக்கும் பட்டம்
      நூல் கொண்டு இயங்கும் 
வாலும் கட்டி பறக்கும்
      மனதில் மகிழ்ச்சி பொங்கும் 
வண்ண வண்ண பட்டம் !

பட்டம் விடும் போது அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.  குழந்தைகளுக்கு குதூகலம் தரும் பட்டம் பற்றி வடித்த பாடல் நன்று.

ஒற்றுமை வேண்டும்! 
ஒற்றுமை வேண்டும்!
      ஒற்றுமை வேண்டும்! 
பகிர்ந்து உண்ணப் பழக
      மகிழ்ந்து நாளும் வாழ!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பழமொழி உணர சண்டையிடாமல் சேர்ந்து வாழ வேண்டும், கூடி வாழ வேண்டும். வேலோடு காட்டக் கூடாது என குழந்தைகளுக்கு ஒற்றுமை விதை விதைத்துள்ளார்.

மரம் வள்ர்ப்போம்!

வீட்டின் முன்னே வாழை தென்னை
      மரங்கள் நாம் வளர்ப்போம்
      வீட்டின் பின்னே மா வேப்ப
      மரங்கள் நாம் வளர்ப்போம்!

மழை பெய்திட காரணமாக இருக்கும் மரங்களை வளர்த்தால் பூமி செழிக்கும் வறட்சி நீங்கும் வெப்பமயமாதல் ஒழியும்.  மரங்களின் மகத்துவம் உணர்த்தி உள்ளார்.

சுத்தம்! 

சுத்தம் சுகம் தரும் 
சுகாதாரம் நாட்டை காக்கும்
      பழமொழிகள் அறிந்திடுவோம்.
      பார்த்த இடத்தில் துப்பாமல் 
காலையில் குப்பை போடாமல்  
      
தூய்மை நாளும் காத்திடுவோம்.!

சுத்தம் சுகாதாரம் பற்றியும் பாடல் வடித்துள்ளார்.  கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களையும் பாடலில் குறிப்பிட்டு உள்ளார்.

தலைவன்! 

தலைவன் ஆக வேண்டும்
      தலைவன் ஆக வேண்டும்
      தன்னலமில்லா தலைவன் ஆக வேண்டும்
      தன்னிகரில்லா தலைவன் ஆக வேண்டும்
      தரணி போற்றும் தலைவன் ஆக வேண்டும்
      அறிவை வளர்க்கும் தலைவன் ஆக வேண்டும்
      கடமை ஆற்றும் தலைவன் ஆக வேண்டும்
      கண்ணியம் காக்கும் தலைவன் ஆக வேண்டும்
      கட்டுப்பாடு உள்ள தலைவன் ஆக வேண்டும்.

இக்கவிதையில் உலகம் போற்றிய மாமனிதர் அப்துல் கலாம் படம் உள்ளது. பொருத்தமான கவிதைக்க் பொருத்தமான படம்.  
இந்த நூலை வாங்கி சிறுவர்களுக்கு படிக்க வழங்கினால் தமிழ் அறிவும், பொது அறிவும் வெளி உலகமும் தெரிய வாய்ப்பாக இருக்கும். நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.


.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்