துப்பாக்கியால் சிதைத்திட முடியாது! தொகுப்பாசிரியர் : மஞ்சக்கல் உபேந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
துப்பாக்கியால் சிதைத்திட முடியாது!
தொகுப்பாசிரியர் : மஞ்சக்கல் உபேந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
புதிய உறவு பதிப்பகம், 5, மூன்றாவது குறுக்குத் தெரு, எழில் நகர், அரும்பாந்தபுரம் அஞ்சல், வில்லியனூர், புதுச்சேரி-605 110.
பேச : 94422 51512
******
புதிய உறவு மாத இதழின் ஆசிரியர் மஞ்சக்கல் உபேந்திரன் அவர்கள் ‘துப்பாக்கியால் சிதைத்திட முடியாது’ என்ற தலைப்பில் கவிஞர்களிடம் கவிதைகள் வாங்கி தொகுத்து நூலாக்கி உள்ளார்.
04-03-2018 அன்று கவியரங்கம் நடத்திக் கவிதைகளை வாசித்து உள்ளார். இந்த நூலில் 96 கவிஞர்களின் முத்தான கவிதைகள் முத்தாய்ப்பாக உள்ளன. பாராட்டுக்கள்.
தொகுப்பாசிரியர் என்னுரையில் இருந்து சிறு துளிகள் இதோ!
‘அந்த காவி பயங்கரவாதம் முற்போக்காளர்களை படுகொலை செய்வது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தை கருவறுத்து, சர்வாதிகாரத்தை அரியணை ஏற்றும் வேலையிலும் இறங்கியிருக்கிறது. பாசிச இந்துத்துவாவிற்கு எதிரான குரல்கள் முன்பைவிட மேலும் வலுவாக ஒலிக்கும் என்பதை இந்த கவிதைத் தொகுப்பு பறைசாற்றுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் அவர்களை கூலிப்படையை ஏவி கொலை செய்து அவரது குரலை முடக்க நினைத்தனர். ஆனால் இன்று 96 கவிஞர்களின் குரலாக ஒலித்துள்ளது. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் உரிமைக்குரல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரை படுகொலை செய்ததின் மூலம் தங்களுக்க்கு படுகுழி வெட்டி விட்டனர்.
இக்கொலையின் எதிரொலியாகத் தான் கர்னாடகாவில் தோல்வி முகம் கண்டனர். இப்படுகொலையின் எதிர்வினை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்து படுதோல்வி கிட்டும் என்பதையே இந்த நூல் பறைசாற்றி உள்ளது. 67ஆம் பக்கம் என்னுடைய கவிதையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
பாவலர் ச. சண்முகசுந்தரம் அவர்களின் வாழ்த்துரை நனி நன்று. பொறியாளர் இராதே அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பு. நூலிலிருந்து சில வைர வரிகள் மட்டும்.
தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் !
புன்மைக்கு நியாயங்கள் இந்த நாடு
புரட்சிமிகு எழுத்தின் முன் புல்லே! புல்லே!
புரட்சிமிகு எழுத்தின் முன் புல்லே! புல்லே!
ஒருவரின் குரல்வளையை நெறித்து ஓராயிரம் குரல்களை ஒலிக்க வைத்தனர். இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகின்றது. பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தால் குட்டுப்பெற்று அவமானப்பட்டனர்.
பாவலர் தேவகி ஆனந்த் !
ஏந்தி நிற்கும் இந்துத்வா தூள் தூளாய்ப் போகும் இந்தியாவில் கௌரி லங்கேஷ் கொள்கை முரசொலிக்கும்.
எல்லோருடைய கவிதைகளும் எரிமலை போல உணர்ச்சிப் பிழம்பாக இருந்தாலும் நூல் மதிப்புரையில் எல்லாக் கவிதைகளையும் மேற்கோள் காட்டிட இயலாது என்பதால் பதச்சோறாக சிலவற்றை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். மேற்கோள் காட்டப்படாத கவிஞர்கள் வருந்த வேண்டாம். கலைஞர் சொல்வது போல சொல்கிறேன், மற்ற கவிஞர்களுக்கு இதயத்தில் இடமளித்து உள்ளேன்.
கவிஞர் சி. நாகலிங்கம் !
முற்போக்குவாதிகளை முடக்கி விட்டால்
முன்னேற்றம் கண்டிடுமோ இந்த நாடு?
முன்னேற்றம் கண்டிடுமோ இந்த நாடு?
முன்னேற்றப் பாதையில் செல்வதை விடுத்து முற்போக்-காளர்களை முதல்குரல் கொடுப்பவர்கள் படுகொலை செய்திடும் கொடூரச் செயலுக்கு முடிவு கட்ட வேண்டும்.
கவிஞர் எ. விஜயலட்சுமி
தண்டனைக் கேயிவர் அஞ்சார் – உடல்
சாய்ந்திட்ட போதிலும் வாழ்வது மெய்யே!
சாய்ந்திட்ட போதிலும் வாழ்வது மெய்யே!
உண்மை தான். கௌரி லங்கேஷ் அவர்கள் உடலால் உலகை விட்டு மறைந்தாலும் முற்போக்காளர்களின் உள்ளங்களில் வாழ்கிறார்.
மாமணிக் கவிஞர் கோவி மாசிலாமணி !
அப்பாவி மக்களுக்கு அடிவயிற்றில் குண்டு
அகிம்சையினை போதித்தார் அவர்களுக்கும் குண்டு!
அகிம்சையினை போதித்தார் அவர்களுக்கும் குண்டு!
வன்முறை விரும்பாத அகிம்சையாளர்கள் அகிம்சை போதித்தால் அவர்களுக்கு துப்பாக்கி குண்டு பரிசளிக்கும் கொடூரம் ஒழிய வேண்டும்.
கவித்தென்றல் ந.வே. கணேசன்!
நீதிக்கே அடங்காதோர் நெறிய டுத்த
நீள் அமைதிப் போரினாலே பாடம் சொல்வோம்!
நீள் அமைதிப் போரினாலே பாடம் சொல்வோம்!
மக்கள் துன்பத்தில் வாடுகின்றனர். தினந்தோரும் பெட்ரோல் விலை ஏறுகின்றது. மதவெறிக் கொலைகள் அரங்கேற்றமாகிறது. வேடிக்கை பார்க்கும் மக்கள் வரும் தேர்தலில் வைப்பார்கள் வேட்டு அநீதிக்கு.
மரபும் புதுக்கவிதையும் கலந்து உள்ளன. நெஞ்சு பொறுக்க-வில்லை என்ற கூற்றாக கவிஞர்கள் பலரும் கொதித்து எழுந்து சங்கநாதம் முழங்கி உள்ளனர்.
பாவலர் கா.வ. ஆதிமுலம்!
எதனை சாதிக்க எழுதுகோல் பிடித்தோம்
இங்கே கொடுமைகளை கண்டும் என்
கண்களை புதைத்தோம்!
இங்கே கொடுமைகளை கண்டும் என்
கண்களை புதைத்தோம்!
எது நடந்தால் எனக்கென்ன என்று கேளிக்கைகளை எழுதுவதை வாடிக்கையாகக் கொண்ட தன்னலமிக்க எழுத்தாளர்களின் தலையில் கொட்டு வைத்துள்ள வைர வரிகள்.
கவிஞர் வீ. உதயக்குமாரன்
மனிதனின் வயிற்றுப்பசியை போக்கும் ஏர்முனை
மனிதனின் அறிவுப்பசியை தீர்க்கும் எழுதுகோல் முனை!
மனிதனின் அறிவுப்பசியை தீர்க்கும் எழுதுகோல் முனை!
துப்பாக்கியை விட வலிமையானது எழுதுகோல். 96 கவிஞர்களும் துணிவுடன் அநீதியை எதிர்த்து படுகொலையைக் கண்டித்து கண்டனத்தை மிகச்சிறப்பாக பதிவு செய்து உள்ளனர். அனைவருக்கும் பாராட்டு.
பணமதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் என மக்கள் மீது, இடி மீது இடியை இறக்கியோரை வரும் தேர்தலில் பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்பிட முற்போக்காளர்களின் மனிதநேய ஆர்வலர்களின் போர்முரசாக ஒலிக்கின்றது இந்த நூல், பாராட்டுக்கள்.
காலத்திற்கேற்ற கவிதைகளை வாங்கி கவிதை பாட வைத்து தொகுத்து நூலாக்கி வழங்கிய மஞ்சக்கல் உபேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். வரலாறு படைத்துள்ள அரிய நூல் இது!
கருத்துகள்
கருத்துரையிடுக