தமிழ் கிராமிய சலங்கை ஒலி! நூல் ஆசிரியர் : நாட்டியாச்சாரியா முனைவர் சைலஜா மகாதேவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழ் கிராமிய சலங்கை ஒலி!
நூல் ஆசிரியர் :
நாட்டியாச்சாரியா முனைவர் சைலஜா மகாதேவன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
பதிப்பகம் : ஜிஜி ஆப்செட், 23/6 பள்ளிக்கூட சந்து,
பாண்டிய வெள்ளாளர் தெரு, மதுரை-625 001
பக்கம் : 151
******
நூலாசிரியர் நாட்டியாச்சாரியா சைலஜா மகாதேவன் அவர்கள், நாட்டியத்தின் மீது நாட்டம் கொண்டு, சிறுவயது முதல் அன்னையிடம் பயிற்சி பெற்று, நடன நிகழ்ச்சிகள் நடத்தி கலாகேந்திரா நடனப்பள்ளியின் மூலம் பலருக்கு நடனம் கற்பித்து வருவதுடன் தனது ஒரே மகளான ஹம்சவர்த்தினிக்கும் நாட்டியம் கற்பித்து ஊக்கமளித்து வருகிறார்.
‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள்’ என்பது பழமொழி. ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் ஓர் ஆண் முன் நிற்கிறான் என்பது புதுமொழி. ஆம், திரு. மகாதேவன் காதலித்து மணமுடித்த மனைவி சைலஜாவின் வெற்றிக்கும், சாதனைக்கும் மட்டுமன்றி தன் மகள் வெற்றிக்கும் முன்நின்று ஊக்கப்படுத்தி வருகிறார்.
உலக சாதனைக்காக ஒயிலாட்டம் நிகழ்ச்சியை மதுரை சோலைமலை கல்லூரியில் பிரமாண்டமாக நடத்தி வெற்றி பெற்றுள்ளது இக்குடும்பம். நூலாசிரியர் நடனம் மட்டுமன்றி கிராமிய கலைஞர்கள் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். நாட்டுப்புற கலைகள் அழிந்து வருகின்றன. அதனை ஆவணப்படுத்தும் விதமாக இந்நூல் எழுதி உள்ளார்.
இந்நூல் படித்தால் இவ்வளவு கலைகள் நாட்டுப்புறத்தில் உள்ளதா? என வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் 50 கலைகள் பற்றி விரிவாக, விளக்கமாக எழுதி உள்ளார்.
பரதநாட்டியம் ஆடுவது, கற்பிப்பது என்று மட்டும் நின்று விடாமல் நாட்டுப்புறக்கலைகள் மீது ஆர்வம் கொண்டு ஆவணப்படுத்தியது சிறப்பு.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் மூலம் தெருவோரத் திருவிழா என்ற பெயரில், சனி, ஞாயிறு கிழமைகள் வாராவாரம் என் ஓராண்டுக்கும் மேலாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதிகளில் நடத்தினோம். அந்த நிகழ்வு நினைவிற்கு வந்தது.
புகழ்பெற்ற கரகாட்டம் தொடங்கி, பந்த சேர்வையாட்டம் வரை 36 நடனங்கள் பற்றி எழுதி உள்ளார். துணை நடனங்கள் என கிருஷ்ணாட்டம் தொடங்கி காமிக் பொம்மையாட்டம் வரை 16 நடனங்கள் பற்றி எழுதி உள்ளார். நூலின் முடிவில் அம்மன் கூத்து தொடங்கி ஜிம்பளா மேளம் வரை நூறு கலைகளின் பெயர் பட்டியல் எழுதி உள்ளார்.
இந்த நூலை எழுதுவதற்கு ஒவ்வொரு நடனங்களையும் உற்றுநோக்கி ஆராய்ந்து விளக்கம் கேட்டு மிகச்சிறப்பாக எழுதி உள்ளார் நூலாசிரியர் சைலஜா மகாதேவன் அவர்களின் மகா உழைப்பை உணர முடிந்தது. தமிழர்களின் முந்தைய கலையை, நடனக்கலையை, நாட்டுப்புறக் கலையை உலகிற்கு உணர்த்தும் விதமாக எழுதி உள்ளார்.
தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் 100 வகை நாட்டுப்புற நடனங்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டின் பெருமையை, தமிழர்களின் அருமையை உணர்த்தி உள்ளார்.
நூலிலிருந்து பதச்சோறாக சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு.
“நாட்டியமும் இசையும் தமிழனின் வாழ்க்கையோடு ஒன்றிய தொடர்புடையது. தமிழ் மண்ணில் நாட்டியம் என்பது அவன் பிறப்பில் தொடங்கி இம்மண்ணை விட்டு மறையும் வரை நடனமும் இசையும் தமிழனின் உடலோடும் உணர்வோடும் ஒன்றிய தொடர்புடையது”
உண்மை தான். பிறந்த்தும் பாட்டுடன் தாலாட்டில் தொடங்கி, இறந்ததும் பாடும் ஒப்பாரி வரை பாடல், இசை, நடனம், தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புறக் கலைகள் உயிர்ப்புடன் இயங்கிட ஆரம்பித்துள்ளனர். மக்களும் மிகப்பெரிய வரவேற்பு தந்து நாட்டுப்புறக் கலைஞர் செந்தில்கணேஷ், இராசலெட்சுமி, கோவிந்தராஜன் ஆகியோர் பரிசுகள் பெற்றிட ஊக்கமளித்தனர்.
நலிந்து வந்த நாட்டுப்புறக் கலையை உயிர்ப்பிக்கும் வண்ணம் நாட்டுப்புறக்கலைகளின் வகைகளை, ஆடும் முறைகளை அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது இந்நூல். இன்னும் சொல்லுவதென்றால் இந்நூல் படித்துப் பார்த்து படிக்கும் வாசகனும் ஆடிப்பார்த்துக் கொள்ளும் அளவிற்கு மிக அழகாகவும் நுட்பமாகவும் எழுதி உள்ளார். நேரடியாக பார்த்து ஆராயாமல் இப்படி எழுத முடியாது. கண்டு உணர்ந்து எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.
நாட்டுப்புறக் கலைகள் பற்றிய முனைவர் பட்ட ஆய்வேடு போல இந்நூலை வடித்து உள்ளார்.
தேனிசைத் தென்றல் தேவா அவர்களும் அணிந்துரை நல்கி உள்ளார். சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு நடனக் கலைகளின் புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன. உலகில் எங்குமில்லாத அளவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகளுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு கலைகளின் அருமை, பெருமை பறைசாற்றி உள்ளார்.
“கரகாட்டம்”
இந்தியாவின் தலைசிறந்த நாட்டுப்புற நடனங்கள் வரிசையில் தமிழ்நாட்டை பிரதிபலிக்கும் மிகவும் பிரபலமான நடனம் கரகாட்டம். நமது மாவாட்டங்களுக்குள்ளாகவே கரகம் ஆடும் விதம் அந்தந்த பிராந்தியத்திற்கேற்ப மாறுபட்டாலும் அனைத்து மாவட்டங்களிலுமே பெரும்பாலும் பிரபலமான ஒரு நாட்டுப்புற நடனமாகவே திகழ்ந்து வருகிறது”.
கரகாட்டம் பற்றி படிக்கும் போது மதுரையில் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்கில் ஓடிய கரகாட்டக்காரன் திரைப்படம் நினைவிற்கு வந்தது. இன்றளவும் எங்கும் கரகாட்டத்திற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு உண்டு என்பதை சுற்றுலாத் துறையின் மூலம் மாநில அளவில் மதுரையில் நடந்த உலக சுற்றுலா தின விழா 2018, உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தினோம். அங்கு நடந்த கரகாட்டம் காண அரங்கு நிறைந்தது. நலிந்து வரும் நாட்டுப்புறக்கலைகளுக்கு புத்துணர்வு தரும் வகையில் வந்துள்ளது இந்நூல். பாராட்டுக்கள்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக