அகிம்சை என்றால் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி.






அகிம்சை என்றால் காந்தியடிகள்!

கவிஞர் இரா. இரவி.

******

     அகிம்சை என்றால் காந்தியடிகள். காந்தியடிகள் என்றால் அகிம்சை.  உலகம் அறிந்த உண்மை காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்திற்கு காரணியாக அமைந்தது திருக்குறள்.

     இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
     நன்னயம் செய்து விடல்.               குறள் 314 (இன்னா செய்யாமை)

     இந்தத் திருக்குறளை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் டால்சுடாய். காந்தியடிகளின் குரு டால்சுடாய்! டால்சுடாயின் குரு திருவள்ளுவர்!

     எட்டி உதைத்த சிறை அலுவலருக்க்கு காலணி தைத்துக் கொடுத்த உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் காந்தியடிகள். இது அன்று உண்மையில் நடந்த நிகழ்வு.  ஆனால் இன்றோ, எட்டி உதைத்தால் வெளியே வந்து காலை வெட்டி விடும் அவல நிலை.

     பலிக்குப் பலி வாங்கும் வக்கிர குணம் எங்கும் பெருகி விட்டது.  அகிம்சை, சகிப்புத்தன்மை, பொறுமை இழந்து விட்டனர்.

     எந்த ஒரு தாயும் தன் குழந்தையைக் கொல்ல மாட்டாள்.  ஆனால் இன்று பெற்ற குழந்தைகளை தாயே கொல்கின்ற அவலம் நடந்து வருகின்றது. மருமகனை மாமனார் வெட்டுகின்றார்.  பெற்ற மகள் காதலித்து திருமணம் செய்திட்ட குற்றத்திற்காக மகளையும் மருமகனையும் வெட்டிக் கொலை செய்திடும் அவலம் நடந்து வருகின்றது. பெற்ற மகன் சொத்திற்காக  தாயைக் கொல்லும் அவலநிலை இன்று வேதனை.  காந்தி வாழ்ந்த நாடு இது.  இந்த நாட்டிற்கே காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்றார் தந்தை பெரியார்.  ஆனால் இன்று எங்கும் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது. 

     ஜாலியன் வாலாபாக் போன்ற கொடிய சம்பவம் நடந்த போது கூட காந்தியடிகள் சினம் கொள்ளவில்லை.  பொறுமை காத்தார்.  அன்று மட்டும் காந்தியடிகள் வன்முறைக்கு அறைகூவல் விடுத்து இருந்தால் ஒரு வெள்ளையன் இந்தியாவில் இருந்து இருக்க முடியாது.  ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.  அப்படி அவர் அன்று செய்திருந்தால் இன்றைக்கும் அவரைப் பற்றி பேசவோ எழுதவோ செய்திருக்க மாட்டோம்.

     காந்தியடிகளுக்கு விடுதலை என்ற முக்கியம் நோக்கம்.  ஆனால் அதை விட முக்கியம் அதனை அடையும் வழி.  நேர்மையான வழியில் சத்யாகிரக வழியில் அகிம்சை வழியில் அடைய வேண்டும் என்று போராடினார்.  இறுதியில் வெற்றியும் பெற்றார்.

     ‘பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே’ என்ற கூற்றுப்படி வெளளையரிடமும் அன்பு செலுத்தியவர் காந்தியடிகள்.  காந்தியடிகளைக் குறித்து, ஐன்ஸ்டீன் ‘எலும்பும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறக்கும்’ என்று சொன்னார்.

     காந்தியடிகள் சொன்னார், என்னுடைய ‘அகிம்சை’ தத்துவத்திற்கு குரு கஸ்தூரிபாய என்ற என் மனைவி. கழிவறை சுத்தம் செய்திட வலியுறுத்தி உள்ளேன்.  ஆணாதிக்க சிந்தனையுடன் பல துன்பங்கள் தந்துள்ளேன்.  அதனை ஏற்று பொறுமை காத்து எனக்கு அகிம்சையை கற்றுத் தந்தவர் கஸ்தூரிபாய் என்றார். 

ஒருமுறை காந்தியடிகளிடம் கஸ்தூரிபாய் உங்கள் அன்னை என்று தவறாக குறிப்பிட்டார். அதற்கு காந்தி சொன்னார்.  தவறாகச் சொல்லவில்லை சரி தான். கஸ்தூரிபாய் எனக்கு மனைவி மட்டுமல்ல அகிம்சை கற்றுத்தந்த தாயும்தான் என்றார்.

     எந்த ஒரு போராட்டமும் அகிம்சை வழியிலேயே நிகழ்த்தினார்.  தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் திருமணம் செல்லாது என்றும்,. குடியுரிமை இல்லை என்றும் சட்டம் கொண்டு வந்தபோது அகிம்சை வழியில் போராடினார்.  தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்டார். காந்தியடிகளை ஒருவன் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியபோது எங்கே சுடு பார்ப்போம் என்று முன்நின்றவர் வள்ளியம்மை.  கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்று ஒரே அறைக்குள் பூட்டி வைத்து இருந்ததால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் வள்ளியம்மையை விடுதலை செய்தார்கள்.

     வள்ளியம்மையைப் பார்த்து காந்தியடிகளே கண்கலங்கி என்னால் தானே உனக்கு இந்த நிலைமை என்று சொன்ன போது, இன்னொரு போராட்டம் இப்போது அறிவித்தாலும் போராடி சிறை செல்ல காத்திருக்கிறேன்.  வருந்தாதீர்கள் என்று காந்திக்கு ஆறுதல் சொன்னவள் வள்ளியம்மை. வள்ளியம்மை மரணத்தின்போது காந்தியடிகள் மிகவும் மனம் வருந்தி சிறுகுழந்தை போல அழுதார். 

     காந்தியடிகள் விடுதலைத் திருநாள் கொண்டாட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை.  இந்து, இசுலாமியர் மதக் கலவரம் நடக்கின்றது என்று அறிந்ததும் நவகாளி யாத்திரை சென்று அனைவருக்கும் அகிம்சை பற்றி போதனை செய்து மதக்கலவரத்தைத் தடுத்து அமைதியை நிலைநாட்டினார்.

     காந்தியடிகள் பலமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளார்.  இப்போது நடக்கும் அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் போல காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருப்பர்.  அகிம்சை போராட்டத்தின் ஒரு வடிவமே உண்ணா நோன்பு.

     காந்திய அருங்காட்சியகத்திற்கு வந்த மக்கள் சொன்ன கருத்து : இங்குள்ள பணியாளர்கள் சொன்னது. இங்கிலாந்து இலண்டனிலிருந்து வந்த இளைஞர்கள் காந்தி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளையராகப் பிறந்ததற்காக வெட்கப்படுகிறோம்.  எங்கள் முன்னோர்கள் இவ்வளவு கொடுமைக்காரர்களாக இருந்ததை எண்ணி வேதனைப்படுகிறோம் என்கின்றனர்.

     ஜாலியன் வாலாபாக் டயர் படத்தைப் பார்த்து விட்டு ஒரு பெண் அடிக்கப்போய் உள்ளார்.  வயதான பெண்மணி கணவனுடன் வந்துள்ளார்.  என்னுடைய முறைமாமனை சுட்டுக் கொன்றவன் இந்த டயர் என்று கோபமுற்று இருக்கிறார்.  இன்னும் கோபம் தணியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு.  காந்தியடிகள் அகிம்சையை கடைப்பிடித்த காரணத்தால் தான் இன்றும் உலகம் முழுவதும் பாராட்டுகின்றனர். உலகின் எந்த மூலைக்குச் சென்று இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால் காந்தி தேசத்திலிருந்து வருகிறீர்களா? என்று கேட்கின்றனர்.  காந்தியடிகளை உலகம் அறிந்திடம் காரணம் அகிம்சை.

பழிக்குப் பழி என்று இந்த உலகம் சென்றால் கடைசியில் மனித இனமே  இல்லாமல் போகும் .இந்த நாட்டிற்கு பொறுமையையும் அகிம்சையும் கற்பித்த ஆசான் காந்தியடிகள் .

ஒரு முறை ஒரு தாய் தன் குழந்தையை அழைத்து வந்து அதிகம் இனிப்பு உண்கிறது .அறிவுரை கூறுங்கள் என்றபோது, ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார் . ஒரு வாரம் கழித்து வந்தபோது இனிப்பு அதிகம் உன்னைக் கூடாது என்று அறிவுரை வழங்கினார் .ஏன் இதை ஆண்ட்ரே சொல்லி இருக்கலாமே என்று தாய் கேட்டபோது ,இனிப்பு உண்ணும் பழக்கம் எனக்கும் இருந்தது .அப்போது அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இல்லை .இப்போது இனிப்பு உண்பதை விட்டுவிட்டேன்  .இப்போது தகுதி உள்ளது அறிவுரை வழங்கினேன் என்றார் காந்தியடிகள் .

காந்தியடிகள் போன்ற ஒரு மாமனிதரை இனி நாம் எப்போது காண்போம் .அகிம்சையை தனது வாழ்நாள் செய்தியாக தந்து விட்டு ,உடலால் உலகை விட்டு மறைந்தாலும், அகிம்சையால் வந்த புகழால் உலகத்து மனிதர்களின் உள்ளங்களில் வாழ்கிறார் .

அதனால்தான் உலக நாடுகள் அனைத்தும் அஞ்சல் தலைகள் வெளியிட்டு உள்ளனர் .உலகில் அதிகபட்ச நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்ட ஒரே தலைவர் நம் காந்தியடிகள் .அதனால்தான் அவரது பிறந்த நாளை உலக அகிம்சை   தினமாக ஐ .நா .மன்றம் அறிவித்து உள்ளது .

அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமாவிடம் யாருடன் உணவு அருந்த விருப்பம் என்ற கேட்டபோது ,காந்தியடிகளுடன் உணவு அருந்த விருப்பம் .அந்த உணவு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும் என்றார் .

காந்தியடிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை .ஆனால் காந்தியத்தை கடைபிடித்த பலர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் காந்தியடிகள் மரிக்கவில்லை அகிசை என்ற சொல்லில் என்றுமே வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் .

காந்தியடிகள் பிறந்த நாளான இன்று முதல் இருந்தாவது விலங்கு குணம் விடுத்து ,பகுத்தறிவோடு மனிதநேயத்தோடு அகிம்சையை கடைபிடித்து வாழ்வோம் என சபதம் ஏற்போம்   


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்