சாபம் தூவும் மகரந்தம்!
நூல் ஆசிரியர் : கவிதாயினி வத்சலா ரமேஷ் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம்,
காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 72, விலை : ரூ. 70
******
நூலாசிரியர் கவிதாயினி வத்சலா இரமேஷ் அவர்களுக்கு இரண்டாவது நூல். இனிய நண்பர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரை நன்று. கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களின் அணிந்துரை நன்று. கவிதைகளை முகநூலில் படித்து இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி.
இனிய உதயம், பாக்யா, மகாகவி போன்ற இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள்.
என் பாசமிகு பாட்டியை
இனி கண்கலங்காமல்
காப்பாற்ற வேண்டுமென்ற சபதத்துடன்
மௌனமாய் அழுகிறேன்!
பாட்டியுடன் இறுதியாய்
துணையாயிருக்கும்
கைத்தடியாய் நான்!
பெற்ற பிள்ளைகள் பெற்றோரை மறந்து முதியோர் இல்லங்களில் சேர்த்தாலும் பேரன் பேத்திகள் தாத்தா பாட்டியை மிகவும் விரும்புகின்றனர். அவர்கள் தங்களுடன் இருக்கவே ஆசைப்படுகின்றனர்.
கொட்டும் மழையில்
என்னருகில் நீ இல்லை என்றால்
குடை கூட சுமை தான் எனக்கு
நனைந்தேன்
வீம்புக்காய்
காய்ச்சல் வந்தால்
நீ ஏந்திக் கொள்வாயென்று!
மழையில் நனைவதும் சுகம் தான்! நனைந்து காய்ச்சல் வந்தாலும் துணை வந்து ஏந்துவது இதம் தான். யதார்த்தமான கவிதை.
அவன் வருகையால்
வானில் தோன்றும்
முழுமதியாய் நான்!
காதலன் காதலியைக் கண்டாலும், காதலி காதலனைக் கண்டாலும் முகத்தில் மலர்ச்சி வரும். முழுமதியாய் ஒளிரும். காதல் மனநிலையை படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்.
நம்
இதழ்க் கோப்பைகளில்
முத்தத் தேன்
பரிமாறிடப்
பருகிக் கொண்டிருந்தோம்
நம் காதல்
தாகம் தீரும் வரை!
முத்தம் பற்றி பல கவிதைகள் படித்து உள்ளேன். இதுபோன்று படித்ததில்லை, முத்தம் பற்றி வித்தியாசமான கவிதை இது, பாராட்டுக்கள்.
வறுமையே முகவரியாய்!
அவர்களின் வாழ்க்கைக்கு
ஆதாரமாய இருந்த நெசவுத் தொழில்
நலிந்து போய் படுத்துக் கொண்டதில்
அவர்களை வறுமை
தினமும் பிடித்துத்
தின்று கொண்டிருந்தது.
நெசவாளர்களின் வாழ்க்கை இன்று கந்தலாகி விட்டது. வாழ்க்கையில் விடிவு இல்லை. இன்னலில் தவித்து வருகின்றனர். வறுமையை ஏழ்மையை கவிதைகளில் நன்கு உணர்த்தி உள்ளார்.
கண்ணில் விழுந்த தூசியை
அகற்ற
அவள் கொடுத்த கைக்குட்டை
கை நழுவியதும்
தூக்கிச் சென்ற காற்று
பெயர் தெரியா செடியில்
அமர்த்திச் செல்கிறது.
நூல் ஆசிரியர் கவிதாயினி ரமேஷ் அவர்கள் பெண்ணாக இருந்த போதும் ஆணின் மனநிலையில் சிந்தித்து பல கவிதைகள் எழுதி காட்சிப்படுத்தி உள்ளார்.
என் தாத்தா!
இழைத்துக் கட்டிய ஓலைவீடு
தாத்தாவின் பாசத்தை சுமந்து
என்னுடன் இன்றுவரை
என் தோளில் சாய்ந்து கொண்டிருக்கிறது
நீங்காத நினைவுகள் அன்புச் சின்னமாய்!
தாத்த கட்டிய வீடு ஓலை வீடு, சிறிய வீடு என்றாலும் தாத்தாவின் நினைவை பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பது உண்மை. மலரும் நினைவுகள் மலர்வித்து மகிழ்விக்கும்.
என் முதுகை வருடினேன்
சிறகுகள் முளைத்திருந்ததில்
நான் வண்ணத்துப்பூச்சியாய்
பறந்து கொண்டிருந்தேன்!
மனிதர்கள் எல்லோருக்கும் பறவையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும் அக்றிணைகளாக இருந்தாலும் பறக்கும் சக்தியைப் பெற்றுள்ளன பறவைகள். உயர்திணையாக இருந்தும் மனிதனுக்கு பறக்கும் ஆற்றல் இல்லை, சிறகுகளும் இல்லை. கற்பனையில் சிறகு முளைக்க வைத்தது சிறப்பு.
உன்னைப் பார்க்கையில்
என்னுள் விரிகிறது
நம்பிக்கைச் சிறகுகள் கவிதையாய்!
நம்பிக்கைச் சிறகுகள் கவிதையாய்! விளைந்ததன் விளைவே இந்நூல். நம்பிக்கை விதை விதைக்கும் வைர வரிகளுக்கு பாராட்டுக்கள்.
நீ கதை புத்தகம்
படிக்கும் பொழுதெல்லாம்
கதை சொல்வதற்காய்
என்னை தேடுவியே
நீ விட்டுப் போன
மூக்குக் கண்ணாடியுடன்
உன் கதை கேட்பதற்காக
காத்திருக்கேன்
நீ எப்போ வருவாய்?!
பாட்டிக்கு பாசத்துடன் பேத்தி கடிதம் எழுதுவது போல படித்த கவிதை நன்று. தாத்தா பாட்டியுடன் வளர்ந்த குழந்தைகள் அறிவாளிகளாக இருந்தனர். பொறுமை மிக்கவர்களாக இருந்தனர். திறமைசாலிகளாக வளர்ந்தனர். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை இருந்தது. ஆனால் இன்று தாத்தா பாட்டியின்றி வளரும் குழந்தைகள் பொறுமையின்றி சினத்துடன் எதையும் தாங்கும் மனநிலையின்றி வளர்ந்து வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும். அதற்கு இக்கவிதைகள் துணை நிற்கும்.
ஒட்டிய வயிறும்
கிழிந்த ஆடையுமாய்
கையேந்தியும் கிடைக்காத
வெற்றுத் தட்டுடன்
ஏக்கமாய அலட்டிக் கொள்ளாத
அவருடைய பார்வையில்
செழுமையாய் மலர்ந்திருந்தது
வறுமை மட்டும்!
செழுமையாய் மலர்ந்திருந்தது வறுமை மட்டும் – நல்ல சொல்லாட்சி. கொடிது கொடிது வறுமை கொடிது என்பதை படம்பிடித்துக்காட்டி நெகிழ் வைத்துள்ளார். இப்படி நூல் முழுவதும் பல காட்சிப்படுத்தும் கவிதைகள். நூல் படிக்கும் வாசகர்களுக்கு மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக உள்ளன. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
--
கருத்துகள்
கருத்துரையிடுக