களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
பெரியாரிடம் வளர்ந்து அண்ணாவிடம் சிறந்து
பண்பாளராக உயர்ந்திட்ட பெருந்தகை கலைஞர் !
திருக்குவளை எனும் மிகச்சிறிய கிராமத்தை
தரணியே அறிந்திடும் வண்ணம் புகழ் சேர்த்தவர் !
மூச்சு நின்றபின்னும் தனக்கான துகிலிடத்தை
முத்தமிழ் அறிஞர் போராடியே பெற்றார் மெரினாவில் !
நினைவாற்றல் மூலம் அடிமட்டத் தொண்டனையும்
நாளும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆற்றல்சால் கலைஞர் !
அரசிளங்குமரி மருதநாட்டு இளவரசி மந்திரி குமாரி
பராசக்தி பாலைவன ரோசாக்கள் பகுத்தறிவை விதைத்தவர் !
முடி இல்லையே என வருந்தியதுண்டா? எனக் கேட்டதும்
முடி வெட்டும் செலவு மிச்சமென மகிழ்ந்தேன் என்றவர் !
தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும்
தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகு என்றாலும் !
எதிர்கேள்வி எதுவும் கேட்காமல் அப்படியே ஏற்கும்
என் இனியவன் கலைஞர் என்றார் அறிஞர் அண்ணா !
கலைஞரின் களப்பணியை மேடையிலேயே பாராட்டி
கரத்தை நீட்டச் சொல்லி மோதிரம் அணிவித்தார் அண்ணா !
களப்பணியில் தனி முத்திரைப் பதித்தவர் கலைஞர்
காலந்தோறும் போற்றப்பட வேண்டிய போராளி கலைஞர்!
கருத்துகள்
கருத்துரையிடுக