ஈடில்லாக் கலைஞர் ! கவிஞர் இரா. இரவி.



ஈடில்லாக் கலைஞர் !

கவிஞர் இரா. இரவி.

******

பின்இரவில் தூங்கி முன்காலையில் எழுந்த சூரியன்
பத்திரிகைகள் படிப்பதை கடமையாகக் கொண்ட வீரன்!



நக்கல் நையாண்டி பதில்களின் மூலம் எதிரணியினருக்கும்
நகைச்சுவை வரவழைத்து மகிழும் திறனாளர்!



உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையில்
ஓய்வெடுக்கும் ஓய்வறியாச் சூரியன் நீ!



அண்ணாவின் இதயத்தில் இடம் பிடித்திட்ட கலைஞர்
அண்ணாவின் சமாதியின் அருகிலும் இடம் பிடித்தார்!



போராடாமல் எதுவும் கிடைக்காது என்பதை
போராடி வென்று காட்டினார் மூச்சு நின்ற பின்னும்!



மெரினாவில் மட்டும் இடம்பிடிக்கவில்லை கலைஞர்
மக்கள் மனங்களிலும் இடம்பிடித்தார் கலைஞர்!



இருபத்திஓராம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மனிதரென
இனி வரலாறு சொல்லுமளவிற்கு வரலாறு படைத்தவர்!



ஒரு நூற்றாண்டுக்கு சற்று குறைவான வாழ்நாளில்
ஒரு யுகத்திற்கான கடமைகளை சாதனைகளைப் புரிந்தவர்!



தொண்ணூற்றி அய்ந்து ஆண்டுகள் வாழ்ந்த காலம்
தரணி உள்ளவரை உன்புகழ் என்றும் நிலைக்கும்!



சாதாரண வாழ்வன்று உந்தன் வாழ்வு
சாதனை வாழ்வானது உந்தன் வாழ்வு!



சராசரி வாழ்க்கையன்று உந்தன் வாழ்க்கை
சரித்திரம் படைத்திட்ட சிகரவாழ்வு உன்வாழ்வு!



யுகப்புரட்சி நிகழ்த்திட்ட உந்தன் ஆட்சியில்
யுகம் கடந்தும் நிலைக்கும் உந்தன் புகழ்!



கரகரத்த குரலால் காந்தமென கவர்ந்தாய் தொண்டர்களை
கடிதம் எழுதி முரசொலி மூலம் மகிழ்வூட்டினாய்!



எண்ணிலடங்காத திட்டங்கள் பல தீட்டி பெரியாரின்
எண்ணத்தை நிறைவேற்றிய பெருந்தொண்டர்!



அறிஞர் அண்ணா கண்ட கனவுகளை நனவாக்கினாய்
அகிலம் போற்றிடும் வண்ணம் செயல்படுத்தினாய்!



திரைப்படத்துறையில் தனி முத்திரைப் பதித்தவர்
தமிழக முதல்வராக ஐந்துமுறை இருந்தவர்!



எழுத்து பேச்சு இரண்டிலும் சாதனை நிகழ்த்தியவர்
இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக விளங்கியவர்!



சுறுசுறுப்பின் திலகமாகத் திகழ்ந்து சாதித்தவர்
சோம்பேறித்தனத்தை எப்போதும் அண்ட விடாதவர்!



தோன்றின் புகழோடு தோன்றுக இலக்கணமானவர்
தமிழின் இமயம் வள்ளுவருக்கு வானுயர சிலை அமைத்தவர்!



கவியரங்க மேடைகளில் கைதட்டல்கள் பெற்றவர்
கவியரங்கின் தலைமையேற்று கவித்தமிழ் வளர்த்தவர்!



சமூகநீதிக்காக சங்கநாதம் முழங்கிய வீரர்

சாதிகள் ஒழிய சமத்துவபுரம் கட்டிய தீரர்!



இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் இருக்கட்டும் சாதி என்றவர்
இரட்டை குவளை முறைகளுக்கு முடிவு கட்டியவர்!



திருக்குவளையில் பிறந்தவர் திருவாளர் மு.க.
தரணி போற்றிடும் செயல்பாட்டாளர் மு.க.



மு என்ற முன்எழுத்து முன்னேற்றத்தின் முகவரியானது

க என்ற முதலெழுத்து கலை வளர்க்கும் திறனானது!



உதயசூரியன் உந்தன் சின்னம் என்பதால்
ஒப்பற்ற சூரியன் போலவே ஓய்வின்றி உழைத்தாய்!



பெரியாரின் நெஞ்சில் இருந்த முள்ளை எடுத்தாய்
பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆனார் இன்று!



மாணவனாக இருந்த போதே ‘இளமைப் பலி’ கட்டுரையில்
மங்கையர் விதவையானால் மறுமணம் வேண்டும் என்றாய்!



புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாராட்டைப் பெற்றவர்
புடம் போட்ட தங்கமாக கொள்கையில் மிளிர்ந்தவர்!



மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
மந்திரமாக ஒலித்து செயல்படுத்திய செயல் வீரர்!



பராசக்தியில் தொடங்கி வைத்த நீதிமன்றக் காட்சி
பிணமான பின்னும் தொடர்ந்தது நீதிமன்றக் காட்சி



தனியாக அல்ல அண்ணா அருகில் நீ என்ற பின்னே
தவித்திட்ட தொண்டனுக்கு வந்தது நிம்மதி பெருமூச்சு!



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்