கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்





கவிச்சுவை!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, 

நூல் விமர்சனம் : திருச்சி சந்தர், நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை, பதிவு எண் : 969, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம், 
மதுரை-625 002.  தொலைபேசி : 0452 2533 524, 
செல்லிட பேசி : 94437 43524 


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, 
தியாகராய நகர், 
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

*******
     அறுசுவையை அனுபவித்து (ரசித்து-ருசித்து) மகிழ்ந்திருக்கிறேன்.  அதற்கும் மேலாக நல்ல கருத்துள்ள  கவிதைகளுக்கும் ஒரு தனிச்சுவை உண்டென்று நிரூபித்துள்ளார் என் இனிய நண்பர் ஹைக்கூ திலகம் இரா.இரவி. ஆழமான சிந்தனை என்றாலும், எளிமையான வார்த்தைக் கோர்வைகளால் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதே இவரது கவிதைகளின் தனிச்சிறப்பு.  பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கவிதைகள், பட்டு நூல் இழைகளால் நெய்யப்பட்ட ஆடை. அவற்றை ஒன்றாக இணைத்து, தலைப்பாகை கட்டி இரவிக்கு முதல் மரியாதை செய்யத் தோன்ற வைக்கிறது “கவிச்சுவை”.
     மறைந்தும் மக்கள் நலனுக்காக, மறவாமல் மறையோதிக் கொண்டிருக்கும் நல்லோரை நினைவில் கொள்ளவே எழுதப்பட்டது “கவிச்சுவை”.
     ‘கண்ணுக்கு மை அழகு
     கவிதைக்கு பொய் அழகு’    என்றொரு திரைப்படப் பாடல் 
கேட்டிருக்கிறேன்.  அதே பாடலை இரவி எழுதியிருந்தால் ...
     ‘கருத்துக்குத் தமிழ் அழகு
     கவிதைக்கு மெய் அழகு’ என்றே எழுதியிருப்பார்.
     நான் விமர்சனம் எழுதவில்லை. நான் சுவைத்ததை நீங்களும் சுவைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கவிச்சுவையை உங்களுக்குப் படைக்கிறேன் - படையலாக.
     “மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை
     மறுபடியும் நீ வருவாய் என நம்பிக்கை இல்லை”
இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத்தர பொருள்பட வாழ்ந்த மகாத்மாவே! உன்னைப் பொருளாதார ரீதியாகப் பார்த்து, கரன்சி காகிதத்தில் உன் உருவப்படத்தைப் போட்டு உயர்த்தி, பின்னதை  அழித்துத் தாழ்த்தி, அரசியல் ஆதாயம் தேடும் சுயநலம் பிடித்த பலர் வாழும் நாட்டில் உனக்கெதற்கு மறுபிறவி? மனம் நோகவா!
“வாய்மை, நேர்மை, எளிமை மூன்றும் இருந்தால்
     வையத்தில் நீங்களும் ஆகலாம் கலாம்”
உங்களைப் போல் நீங்கள் மட்டும்தான் வாழ்ந்தீர்கள்.  எல்லோரும் வாழ்ந்திருந்தால் நீங்கள் கூறியபடி இந்தியா இந்நேரம் வல்லரசாகியிருக்கும்.  நல்லரசாகக் கூட மாறவில்லையே! வாழ நினைப்பவர்கள் உங்களுக்கு ஒரு சலாம் போட்டு விட்டார்களே? விதி வலியது. வலியின் வழியில் பழகி விட்டோமே?
படிக்காத மேதையாக வாழ்வில் சிறந்தவர்
     படிக்காதவர் பெயரில் பல்கலைக்கழகம் உருவானது!
படித்தவர், படிக்காதவர்கள் காலில் விழுந்து பதவி பெறுவதால் பல்கலைக்கழகங்கள் பல்லிளித்தான் கழகங்களாக மாறிவிட்டனவே!
மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்
     மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர்.
நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர் எனப் பெயர் பெற்றவர். நடித்த படங்களின் பாடல்கள், வசனங்களில் மக்கள் நல்வாழ்வுக்கென நல்ல கருத்துக்களை கூறியதால் அவர் என்றும் மக்கள் திலகம்.
பாவேந்தரின்,
எதிர்பாராத முத்தம் கவிதை நூல் வடித்து
     எல்லாக் காதலர்கள் கரங்களில் தவழ வைத்தவர்!
இவரது படைப்புகளை படிக்கும்போது காதலியின் செவ்விதழ்களில் முத்தமிடுவது போன்ற உணர்வின்பம் உணர முடிகிறது.  எதிர்பாராமல் கொடுக்கப்படும் முத்தம் அமிர்தம் போன்றது.
குடும்ப விளக்கு இயற்றி வைத்து
     குடும்பங்களை ஒளிர விட்டவர்.
இவரது நூல்களை படித்தவர் குடும்பங்கள் நிச்சயமாக ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடப்பார்கள்.  பாரதியின் சாரதியே! நீவிர் பாவேந்தரே!
தமிழண்ணல் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல
     தமிழண்ணல் காரணப் பெயரானது.
அறியப்படாத தமிழ் இலக்கியங்களை, அண்ணாந்து பார்த்தும் புரியாமல் தவித்த, அறியாதவர்களுக்கு, தூய – எளிய தமிழில் சொற்பொழிவாற்றி அறிய வைத்ததால் நீவீர் தமிழண்ணல்’
செந்தமிழை செத்தமொழி ஆக்கிவிடாதீர் எனச்
     செந்தமிழுக்காக எழுத்திலும் பேச்சிலும் முத்திரை பதித்தவர்!
சாகாவரம் பெற்ற தமிழை ஆகா என அனைவரையும் புகழவைத்த ‘நன்னன்’ அவர்களுக்கு நன்றி.
திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை என்பதில்
     தன்னம்பிக்கையுடன் உறுதியாக நின்று வென்றவர்
மெட்டுக்குப் பாட்டெழுதி பணம் பண்ணுவோர் நடுவே இப்படியும் ஒரு கவிஞரா! உண்மையில் நீவிர் ஒரு கவி(க்)கோ!
“அன்னை தெரசா அளவிற்கு தொண்டு செய்யாவிடினும் 
     அடுத்த வீட்டுக்காரருக்காவது தொண்டு செய்”.
செய்யும் தொண்டுக்கு துண்டு கேட்பவர்களுக்கு நல்ல அறிவுரை.
     தமிழ் எனக்குச் சரியாக வராது என்போர்
     தடுக்கு விழுந்ததும் ‘அம்மா’ என்பார்கள்.
     ‘அம்மே!’ என்று கத்தும் பகுத்தறிவில்லா உயிரினங்களிடமிருந்து பகுத்தறிவாளர்கள் கற்றுக் கொள்ளட்டும்.
     உலகமொழி ஆங்கிலத்திற்கும் மூலம் தமிழ்
     உலக முழுதும் ஒலிக்கும் மொழி தமிழ்!
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழென்று உங்கள் மேடை முழக்க அர்த்தம் புரிகிறது”.
     “மெய்எழுத்துக்களில் புள்ளி இல்லாமல் இருந்தன அன்று.
     மெய்யெழுத்துக்கள் புள்ளியோடு அழகாயின இன்று”.
     ‘தமிழ்’, பள்ளியில் துள்ளியில் விளையாடுகிறது.  சிலர் தமிழன் என்று சொல்லியே தன்னைப் பெரும்புள்ளியாக்கிக் கொண்டவர்களும் உண்டு.
     உலகின் முதல்மொழிக்கு உரிய மதிப்பு வேண்டும்
     உலகெல்லாம் தமிழ் பரவிடத் தமிழர்கள் முனைந்திட வேண்டும்!
     தமிழ்த்தாய் வாழ்த்துக்கே தலைவணங்கா அஞ்ஞான ஞானிகளுக்கு நல்ல படிப்பினை. சூடு சுரணையற்ற உயர்திணையான அஃறிணைகளுக்கு நல்ல சூடு.
     “தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்”
     இனம் புரியாரார்க்கு சினம்கொண்டு எழுதிய சீர்திருத்த வரிகள்  “மணியான தமிழில் எழுதிட வேண்டும்”.
     அன்று மணி விரல்களால் மணல்பரப்பில் “ஆ” எழுதக் கற்றுக் கொண்டவர்கள், இன்று பனி மனையில் யந்திரத்தில் ஆங்கிலத்தைத் ‘தட்டி’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  வருமானத் தேவை, தமிழன் தலையெழுத்தையே மாற்றிவிடுகிறதே!
     “என்ன தவம் செய்தேன், தமிழனாய் பிறப்பதற்கு!”
     “என்ன தவம் செய்தனை ... யசோதா!”
மேடையில் பாடுவோர்  மாற்றிப் பாடினால் ... காலம் மாற்றிப் பாட வைக்கும்.!
     தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்
     தரணியெங்கும் தமிழர் புகழ் ஓங்கட்டும்!
     விவசாயிகளின் வயிற்றிலடித்து, விளைநிலங்களை நான்குவழிச் சாலையாக்கி, நன்கு சம்பாதிக்கக் கற்றுக் கொண்டவர்கள் வீட்டில் மட்டும் தானே இன்று பொங்கல் பொங்குகிறது என்று விழிப்புணர்வோடு தமிழினமே பொங்கி எழுகிறதோ அன்று தான் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
     “தமிழுக்கு அமுதென்று பேர்
     தமிழ் எங்கள் உயிருக்கு மேல்”
பாரதியின் சாரதியே!” தமிழை அமிழ்தென்று பாட்டெழுதியதால் நிச்சயம் நீங்கள் புரட்சிக் கவிஞர்!
     “பாரதியார் பாட்டில் பாடிய திருக்குறள்
     பாரதிதாசன் பாட்டில் புகழ்ந்த திருக்குறள்”
     “அகர முதல் எழுத்தெல்லாம் – ஆதி
     பகவன் முதற்றே உலகு.
தமிழே இறைவனென குரல் கொடுத்த வள்ளுவரை முதலில் வணங்குவோம்.
“நல்லதோர் வீணையாம் நம் குழந்தை
     நலம்கெடப் புழுதியில் எறிவது முறையோ”
குழந்தைப் பேறு என்பது ஒரு வரம். மானத்தோடு போராடிப் பெறுகின்ற, வீணை இசையிலும் மேலான மழலைச் செல்வத்தைப் புழுதியில் எறிவோர், பேறுகாலத்திலேயே மரணத்தைத் தழுவி இருக்கலாம்.
பெண்கல்வி கட்டாயம் வேண்டுமென்று அன்றே
     பெரியார் அனைவரிடமும் வலியுறுத்தினார், நன்றே!
     பெண், கல்வி கற்க வேண்டுமென்பதை விட, பெண்ணிடம் நாம் கற்க வேண்டிய கல்வியே பெரிது.
     அன்னையாய், மனைவியாய், தங்கையாய், அக்காளாய்
     அன்புமகளாய் பெண் எனும் பிரபஞ்சம்.
     பெண்மை, உண்மை! உண்மையில் உருவானதே பிரபஞ்சம்.  அம்மா எனும் சொல் இல்லையேல் நீயும் இல்லை. நானும் இல்லை. ஏன் இந்தப் பிரபஞ்சமே இல்லை.  வீரத்திற்கு வீரியம் வேண்டுமாயின் பெண்மை வேண்டும்.
     மனு சீராய்வு மனு போட்டிருப்பாய்
     மனுவிற்கு நீதி கிடைத்திருக்கும்!
     மனு போட்டிருந்தால் நஷ்டஈடு கிடைத்திருக்கும், நீதி கிடைத்திருக்குமா? மனுநீதிச் சோழர் காலமல்லவே இது!
     தந்தை சொல் ஆரம்பத்தில் கசப்பாய் இருக்கும்
     பின் தானாகப் புரியும் சொல்லில் இருக்கும் மகத்துவம்!
     நல்லது என்றுமே கசக்கும் அதனால் தானே கசப்பு மருந்தை இனிப்பு பூச்சோடு கொடுக்கிறார்கள். கசப்பு, புரிந்தவர்க்கு வாழ்வு இனிக்கும்.
     புல்லாங்குழலை விட இனிமையானது
     யாழை விட இனிமையானது என்றார் வள்ளுவர்!
     குடித்த போதையில் மழலை (உளறல் மொழி) பேசும் தந்தைமார்-களுக்கு இது புரிவதில்லையே! இவர்கள் ‘புல் (FULL) ஆம் குரல் படைத்தவர்கள்.
     மணலில் கோட்டை கட்டி மகிழ்வுறும்
     மனதில் கோட்டையும் கட்டி மகிழும்!
     குழந்தைக்குத் தெரிந்த உண்மை கோட்டான்களுக்கு தெரிவதில்லை. எனவே தான் மனக்கோட்டை கட்டியே காலம் கழிக்கின்றனர்.
     பாட்டுப்பாடி தூங்க வைத்த காலம் போச்சு
     பாட்டுப்பாடத் தெரியாத அம்மாக்கள் காலம் இது!
     பாட்டுப் பாடக் கூட நேரமில்லாமல் வருமானத்தை இரட்டிப்பாக்க, பெண்ணை பணிக்கு விரட்டி படாத பாடுபடுத்தும் ஆண்மையைக் கண்டித்து ஒரு தாலாட்டு இயற்றலாமே!
     உயர்பதவியில் உள்ளவர்களுக்கும் கவலையுண்டு
     உலகத்தார் அனைவருக்கும் கவலையுண்டு!
     உலக உருண்டையே நிற்காமல் சுற்ற வேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டே தான் சுற்றுகிறது. இன்று கையூட்டு வாங்காமல், கைவிலங்கு மாட்டாமல், காலம் முடியும் வரை வாழவேண்டுமே என்ற கவலை எல்லோருக்கும் உண்டு.  என்ன செய்ய சிலருக்கு விதி விளையாடி விடுகிறதே!
     நாளை என்பது உறுதி இல்லை ஆனால்
     நாளும் இன்று என்பதே உண்மை!

     “நேற்று என்பது உடைந்த பானை
     நாளை என்பது மதில்மேல் பூனை
     இன்று என்பது உன் கை வீணை!”
யாரோ எழுதிய கவிதை இப்போது நினைவிற்கு வருகிறது.
     தன்னம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும்
     தரணியில் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும்
ஊட்டி வளர்க்காமல், ஊர்ந்து வருவதே தன்னம்பிக்கை.
     பலருக்கு உதவி வருவதும் சாதனைதான்
     பண்பாய் பலரிடம் நடப்பதும் சாதனைதான்!
சோதனை செய்து பிறர் வாழ்வைக் கெடுக்காமல் வாழ்வதும் ஒரு சாதனை தானே!
     தணிக்கையர் ஆகும் கனவு தகர்ந்திட்ட போதும்
     தன்னிகரில்லாப் பெருமைகள் வந்து சேர்ந்தன!
தணிக்கையர் ஆகாவிட்டால் என்ன, காணிக்கையாக கவிதைகள் கைகொடுக்கும் போது!
முடியுமா என்று தயங்கிவது விடுத்து
     முடியும் என்றே பறந்திட வேண்டும்!
முயல், ஆமை கதை படித்தால் போதுமே!
வாழ்வதற்கு பொருள் வேண்டும் புரிகிறது
     வாழ்வதிலும் பொருள் வேண்டும் புரிந்திடு!
பொருளே ஆதாரம் என வாழ்வோருக்கு பொருள்பட வாழத்தெரியாது தான்.  பொருளாதாரம் என்ற சொல்லே இதன் அடிப்படையில் தான் உருவானதோ?!
மலரினும் மெல்லியது காதல் ஆனால்
     மலையினும் வலியது காதல்!
மலைக்காது செய்யும் காதல் நிலைக்காது போகாது. உள்ள உறவே காதல்.
என் விழிகள் உரைப்பதை நீ உணர்வாய்
     உன் விழிக்கண் உரைப்பதை நான் உணர்வேன்!
உரைத்துப் பார்ப்பதற்கு காதலொன்றும் உரைகல் அல்லவே!
உணர்வதால் வருவது காதல், உணர்ச்சியாய் வந்தால் காமம்.
இரும்பு கூடத் தீயிலிட்டால் வளையும்
     என்னவளே நீ எப்போது வளைவாய்!
காதலில் வளையாபதியாய் இருந்தால் மட்டுமே, காதலி தன் வளைக்கரத்தால் உன்னை வளைப்பாள்.  தெரியாமல் தான் கேட்கிறேன்!  தன்னவளைப் பற்றி “என்னவள்” கவிதைகள் எழுதிய தங்களுக்குத் தெரியாதா? ‘காதல் கலை’.
கண்கள் பேசும் இனிய நேரங்களில்
     காதலர்களுக்கு இதழ்கள் மவுனமாகின்றன!
கண்ணிமைகளை மூடி, இதழ்களை விரித்து கிளுகிளுப்பாய கிசுகிசுத்தால் தானே காதலே புரிகிறது என்கிறார்கள் இன்றையக் காதலர்கள்.  இதழோரப் புன்னகையும், உன்னகைப்பும் தானே காதலை உணர்த்தும் காலம் மாறிப் போச்சு.
விட்டுக் கொடுத்து வாழுங்கள்
     வீண் சண்டைக்கு இடமளிக்காதீர்கள்!
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், ஊரார் முன்னே விட்டுக் கொடுக்காமல் வாழ்வதே இல்லறத்தின் நல்லறம்.
வருடம்தோறும் சீராகப் பெய்ய வேண்டும் மழை
     வளங்கள் பெரும் வளர்ச்சி பெருக்கும் மழை!
வருடாவருடம் பருவமழை பொய்க்காமல் பெய்தால் கர்நாடகத்தை நாம் வருட வேண்டியதில்லை!
காதலியைக் கண்ட காதலன் போல
     கழனியில் உள்ள உழவர்கள் மகிழ்வார்கள்!
கன்னியவள் கடைக்கண் பார்வை பட்டு விட்டால் மாமலையும் கடுகாகி விடும். கழனியென்ன பழனிமலையையே வயலாக்கி உழுது விடுவார்கள்.
யாகம் வளர்ப்பதால் வருவதில்லை மழை
     யாவரும் மரம் வளர்த்தால் வரும் மழை
யாகம் வளர்ப்பதால் பெய்யாது மழை.  உண்மை தான். ஆனால், யாகத்தில் வேகம் காட்டும் வேத வித்துக்களுக்கு பணமழை பெய்யாது போய்விடுமே!
பரிதியின் பார்வையால் தாமரை மலரும்
     பரிதியின் வருகையால் சேவல் கூவும்!
பாழாய்ப் போன பரிதியின் பார்வையால் தாமரையும் மலர்கிறதே? சேவலின் கூவலால் வேண்டாதவர்களும் விழித்துக் கொள்கிறார்களே!
புதுமண இணைகள் செல்லும் சுற்றுலாவை
     புதுமையாக தேன்நிலவு என்று பெயர் வைத்தனர்!
தம்பதிகளுக்கு மட்டும் தேன் சொட்டும். தம்பதிகளாக நடிப்பவர்களுக்கு தேனீ கொட்டும்.
பகிர்ந்து உண்டு வாழவேண்டுமென்று அன்றே
     பகர்ந்தார் உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர்!
மனிதர்கள் காக்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
புறம்போக்கு என்று சொல்லும் பல இடங்களில்
     பழைய குளங்கள் இருந்த சுவடு தெரியும்!
நடிகர் வடிவேலுவிடம் சொன்னால் குளங்களைக் காணோம் என்று புகார் கொடுப்பார். நலம்நோக்கா மனிதர்களை புறம்போக்கு என்று தானே அழைக்கிறோம்.
வெளிச்சம் தேடும் வேளாண்மைக்குக் எல்லோரும்
     வெளிச்சம் பாய்ச்சிட உதவிக்கரம் நீட்டுவோம்!
வேளாண்மை புரியாத அரசியலுக்கு, மேலாண்மை செய்து வெளிச்சம் போட மட்டும் தெரிகிறது.  உதவி செய்வார்கள், நீட்டும் கரத்தை நிரப்பினால்.
வெடிப்புகள் வெடித்து தருசாகப் போனது நிலம்
     வெறுப்புடன் உயிர் மாய்த்தனர் உழவர்கள்!
நில வெடிப்பு உண்மையா என சோதித்த போது, அங்கே விவசாயி ஒருவரின் எலும்புக்கூடு தெரிந்ததாம்.  அது எந்தக்காலத்து எலும்புக்கூடு என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம், உயிரைப் பயிராக நினைக்கும் ஆய்வாளர்கள்.
பறவைகளை அஃறிணை என்கிறோம் நாம்
     பறக்க முடியுமா மனிதனால் ஒரு நிமிடம்
ஏன் முடியாது? பறக்கிறார்க்ளே பலர் பணத்துக்காக – பதவிக்காக.
பரியின் பார்வை மனிதர்கள் பெற்றால்
     பயணத்தில் விபத்து என்பது இருக்கவே இருக்காது!
பரியின் வேகம் தெரிந்தவர்களுக்கு பார்வை தெரிவதில்லை.  விவேகமற்ற வேகத்திற்கு பார்வை எதற்கு?
வண்ணங்கள் தெரிய வண்ணம் இழக்கின்றனர்
     வண்ணம் வழங்குவோர் வாழ்வில் எண்ணம் இல்லை.
எண்ணத் தூய்மையுடையோர் வாழ்வில் வண்ணம் இருக்காது.  பச்சோந்தி போல் தன் கட்சி வண்ணத்தை மாற்றிக் கொண்டே இருப்பவர்களின் எண்ணங்களில் தூய்மை இருக்காது.  வாய்மையற்றவர்கள் தான் வண்ணங்களால் வாழ முடியும்.
வட்டிக்கு விடுவதே தீங்கு என்கிறது நீதி நூல்
     வட்டிக்கு வட்டி வாங்கும் கொடுமை தொடர்கின்றது.
தொழில்முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்பது நீதி உரைப்பவர்கள், வட்டி, கந்து வட்டியும் ஒருதொழில் தான் என்கிறார்களே!  வட்டிக்கு வாங்கித்தானே நீதியை வாங்க முடிகிறது.
தாமதமான நீதியும் அநீதி தான் என்பது
     தாமதமாகப் புரிந்தது நீதிபதிகளுக்கு!
புரிந்தது, புரியாதது – அறிந்தது, அறியாதது – நீதி, அநீதி அனைத்தும் உணர்ந்தவர்கள் நீதிபதிகள்.  ஆனால் நக்கீரர்கள் அல்ல. குற்றம் குற்றமே எனக் கூற, வாய்தா வாங்கியே வாழ்வோருக்கு அநீதி இழைக்கக் கூடாது என எண்ணுகிறார்களோ!
அநீதி எந்த வடிவில் வந்தாலும்
     அதனை தட்டிக் கேட்கத் தயங்காதே!
தட்டிக் கேட்டதால் அவர்  பெரியார். ஆனால் அதட்டிக் கேட்பவர்கள் தானே இன்று பெரிய ஆள்.!
இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
     எல்லா நாட்டுக்காரர்களும் ஆளுகிறான் இன்று!
ஆளவந்தார் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்கும் வரை அனைவரும் ஆளத்தான் செய்வார்கள்.  சுதந்திர இந்தியாவை உருவாக்கினார் காந்தி!  அடிமைப்பட்டாலும் சுகம் பெற வாழவேண்டும் என்பதில் ஒரு சிலருக்கு மனச்சாந்தி.
ஆயுதத்திற்கு பயந்தவனல்ல இலட்சியவாதி
     அன்பிற்கு அடிமையானவன் அதிகாரத்தை எதிர்ப்பான்!
அன்பே சிவம் என்பது மாறி வம்பே தவம் என ஆளுவோர் இருக்கும் வரை, லட்சியவாதிகளும் வளர்ந்துகொண்டே இருப்பார்கள். லட்சியத்தை அலட்சியம் செய்யும் அதிகாரத்திற்கு லட்சியவாதிகளின் ‘அதி-காரம்’ ஒருநாள் புரியும்.
வழக்கறிஞர்களின் கருப்பு அங்கிக்கு காரணம்
     வழக்கில் உள்ள இருட்டை வெளிச்சமாக்கிட வேண்டும்
உங்கள் கவிதையின் காரணம் எல்லோருக்கும் புரிந்ததே!  வக்கீல்களுக்கு புரியுமா? என்று தெரியவில்லை.  ஒருவேளை கருப்புத்தான் எனக்குப் பிடித்த கலருன்னு போட்டிருக்கிறார்களோ!?
காவிரி மேலாண்மை வாரியம் நியமித்தால்
     காவிரிக்காக சண்டை போட அவசியமில்லை!
காவிரிமேல் ஆணையிட்டு நீதியையே காவிரி நீரில் கரைத்துக் கொண்டிருப்போருக்கு புரிய வேண்டுமே! கள்ள் உள்ளம் படைத்தோருக்கு வெள்ளம் வந்தால் புரியும்.
வெண்ணை திரண்டு வருகையில் சட்டி உடைந்த கதையாய்
     வேண்டாத வேலை செய்து காவல்துறை களங்கப்பட்டது!
பாவம் விட்டு விடுங்கள். இப்போது அது காவல்துறையல்ல.  ஏவல் துறை! அம்பை நோவது தவறு!
ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை வேண்டும்
     எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும்
சமரசம் உலாவும் இடம் நம் நாடு தான். எல்லோரும் சிறை செல்கிறார்கள். எல்லோரும் வறுமையில் வாடுகிறார்கள்! சமதர்மத்தை அதர்மம் என்று கூறலாமா?
போரில்லாப் பகுதி என்று அறிவித்து விட்டு
     போர் புரிந்து கொன்றான் வந்தவர்களை!
வந்தாரை வாழ வைக்கும் இந்தியத் திருநாட்டில் இன்று போரில்லாப் பகுதியென்று ஒன்று இருக்கிறதா!
எதிர்நீச்சல் போன்றது வாழ்க்கை!
உங்கள் கவிதைத் தொகுப்பே எதிர்நீச்சல் தானே!
இராமாயணம் உண்மையானால் ... இராவணன் என்ற கொடியவனின் கொடியிலே வீணை இருந்ததே. சிவபெருமானிடம் வரம் பெற்றதே வீணை வாசிப்பால் தானே.
எது கவிதை? என்ற கேள்வி எல்லோரும்
     என்றும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்!
உங்களின் இந்த இரண்டு வரிகளிலேயே பதில் இருக்கிறது.  புரியும்படி எழுதினால் கவிதை. புரியாமல் பொதி சுமப்பாக வார்த்தைகளில் விளையாடினால் “க.....தை”!
உங்கள் ‘கவிச்சுவை’ எனக்குப் புரிந்ததால் விமர்சனம் எழுதியுள்ளேன்.


-- 

கருத்துகள்