வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.





வானவில்லின் எட்டாவது நிறம்!
காதல் கவிதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் !


kavimugil1970@gmail.com



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 



கவியரசன் பதிப்பகம், 285/3, சக்தி கார்ஸ் வளாகம்,
வேளச்சேரி உள்வட்டச்சாலை, ஆதம்பாக்கம், சென்னை-600 088.

பக்கங்கள் : 144, விலை : ரூ. 120


******

      அட்டை முதல் அட்டை வரை அழகான படங்கள், வடிவமைப்பு, அச்சு யாவும் மிக நேர்த்தி.  வளவளப்பான காகிதங்கள்.  நூல் மட்டுமல்ல, காதல் கவிதைகளும் கனமாக உள்ளன.  கவிஞர் கவிமுகில் அவர்கள் சக்தி கார் நிறுவனத்தை 25 ஆண்டுகளாக நடத்தி வருபவர்.  சென்னை தவிர வெளிநாடுகளிலும் கிளை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருபவர்.  பரபரப்பன வணிக சூழ்நிலைகளுக்கு நடுவே இலக்கியத்திலும் இளைப்பாற வருபவர்.  கவிஞாயிறு தாராபாரதி அவர்களுக்கு வருடாவருடம் விழா நடத்தி விருதுகள் வழங்கி அவரின் புகழ்பரப்பி வருபவர்.  முழுக்க முழுக்க காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதை நூல் வடித்துள்ளார்.

      வானவில்லிற்கு ஏழு நிறம் தான் எல்லோரும் சொல்வது. நூல் ஆசிரியர் கவிமுகில் எட்டு நிறம் என்கிறார்.  ஆம், அது வண்ணம் அல்ல, காதல் எண்ணம்.  காதல் கவிதைகளை எந்த வயதிலும், எந்தக் காலத்திலும் ரசித்து மகிழலாம்.  வாசகர்களுக்கு காதல் கவி விருந்து   வைத்துள்ளார்.  கவிமுகில் அவர்களின் காதல் மழை தான் இந்நூல்.  பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன், கவிஞர் அ. வெண்ணிலா ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்து வரவேற்கின்றன.  ஆசிரியரின் என்னுரையும் கவிதையாகவே வடித்துள்ளார்.

      அந்தக் கூட்டத்திற்குள்

      நீ எங்கிருக்கிறாய்
      எனத் தேடித் தேடியே

      காதலுக்குள் மாட்டிக் கொண்டே!


      காதலுக்கு முன்னுரை எழுதுவது கண்கள் தான்.

      கண்களில் தொடங்கி காதலில் வீழ்வதே காதல்.  தேடலில் தொடங்கி காதலில் விழுந்த அனுபவம் மிக நன்று.

            இறங்கிக் கொண்டிருக்கிறாய்

       ஏறிக் கொண்டிருக்கிறது
    உன் பார்வை

    என் மீது!

      முரண்சுவையுடன் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்ற புகழ் பெற்ற வரிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாக வடித்திட்ட வரிகள் நன்று.

      கடற்கரை இருட்டில்

      உன் மடியில் தலை வைத்து
      கடல் அலை சங்கீதத்தையும்

      நட்சத்திர நிலாவையும்
      இலத்தியுடன் கடந்து போன

      காக்கிச் சட்டைக்கு எப்படித்                                                          தெரியும்?
      நமக்கு திருமணமாகி

      இருபது ஆண்டுகளென்று !



      திருமணமாகி இருபது ஆண்டுகள் கடந்த பின்னரும், இளம் காதல் இணையர் போலவே காதலித்து வரும் அனுபவத்தை எள்ளல் சுவையுடன் வடித்த விதம் நன்று.  இறுதி மூச்சு உள்ளவரை காதலித்து இளமையுடன் வாழ்வதற்கு வழி சொல்லி உள்ளார்.  பாராட்டுக்கள்.

      உன் விரல் மடக்கும் போது

      நகக்கண்கள் குவித்து
      தரை பார்க்கிறது

      உன் அகக்கண்கள் மட்டும்
      அப்படியே என்னைப் படம் பிடிக்கிறது!



      காதலுக்கு மூலதனம் கண்கள்.  விழியின் வழி படம் பிடிக்கும் வித்தையை நகக்கண், அகக்கண் என்ற சொல் விளையாட்டின் மூலம் உணர்த்தியது சிறப்பு.

      நாளெல்லாம்

      உன் கைபேசியை

      நீ தொட்டுக்
      கொண்டிருந்தாலும்

      கடைசியாக உன் விரல்
      அனுப்புவது

      எனக்கான

     இரவுச் செய்தியைத்தான் !

      இன்றைய இளசுகள் பெரும்பாலும் அலைபேசியில் அன்றைய நாளின் இறுதியில் காதலனுக்கு இனிய இரவு வணக்கம் அனுப்பி மகிழும் நிகழ்வை நினைவூட்டியது நன்று.

      தேவதையாய்

      இராட்சசியாய்

      பாற்கடலாய்
      பாலைவனமாய்ச் சில நேரம்!
      அழகிய சுனாமியே

      கொழுந்து விட்டுச் சிரிக்கும்
      எரிமலையே

      என் அடிமனத்தில் இறங்கி
      பரதத்தை அரங்கேற்றும்

      புன்னகைப் பிசாசே!

      நூல் ஆசிரியர் கவிஞர் கவிமுகில் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதி வருகிறார். அதன் பாதிப்பு கவிதைகளில் உணர முடிகின்றது. இராட்சசி, பிசாசே என்ற சொற்கள் எல்லாம் இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்களின் பிடித்தமான சொற்கள்.

      எத்தனை கல்லறைகள்

      புதைந்து

      கொண்டிருந்த போதும்

      பிறந்து கொண்டேயிருக்கிறது

      காதல்!

      அன்றும் இன்றும் என்றும் அழியாத ஒன்று காதல்.  காதலர்கள் அழியலாம்.  காதல் அழிவதில்லை.  ஆதாம், ஏவாள் தொடங்கி லைலா மஜ்னு மட்டுமல்ல கணினி யுகத்திலும் காதல் மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  காதல் கொலைகள், ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.  ஆனாலும் யாராலும் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதை உணர்த்திடும் கவிதை நன்று.

      கோபக் கொப்புளங்கள் உடைந்து

      வெளியேறுகிற
      நீர் வந்ததும்

      கரிக்கவில்லை 

      காதல்

      நீண்ட இடை
      வெளிக்குப்பின்

      ஒரு பேருந்துப் பயணத்தில்
      நீ வீசிய

      மயிலிறகுப் பார்வையில்

      ஆறிப் போனது காயங்கள்!

      கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் என்பார் கவிப்பேரரசு வைரமுத்து.  காதலில் ஊடல் வந்து பிரிந்து பின் பிறிதொரு நாளில் சந்திக்கும் பார்வையை ‘மயிலிறகுப் பார்வை’ என்ற உவமை மிக நன்று.  பாராட்டுக்கள்.

      எண்ணக் குவியல்களை

      இறுக்கி பூட்டி விட்டுச்
      சாவியை ஒளியவைத்துச்

      சடுகுடு ஆடுகிறாய் !
      நானோ இருக்கும்

      தாழ்பாள்களை
      உடைத்துவிட்டுத்

      திறந்து கிடக்கிறேன்!

      மனதில் உள்ளதை காதலன் உடன் கொட்டி விடுவான்..  ஆனால் பெண்மை, மென்மை அச்சம் நாணம் காரணமாக அவள் காதலி சொல்லுவதில்லை.  அதனை பூட்டு சாவி என்ற உவமைகள் மூலம் உணர்த்திய விதம் அருமை.

      உணவு விடுதிப் பரிமாறலில்

      உன் கை பிசைந்த
      உருண்டையில் எத்தனை ருசி

      கீற்று வெளி
      இடையில்

      பிசைந்து தந்த என் அன்னையின்
      அன்பு மீண்டு வந்தது!

      காதலன் காதலி உணவு விடுதியில் உணவு அருந்தும் வேளையில் காதலியின் கைகளால் உணவருந்துவது தனிச்சுவை தான்.  அச்சுவையை ரசித்ததோடு நிற்காமல் பெற்ற அன்னை ஊட்டிய நிகழ்வை நினைத்துப் பார்க்கும் நல்ல உள்ளம்.  காதலியையும், அன்னையின் அன்பையும் ஒப்பீடு செய்தது சிறப்பு.

      வானவில்லே

      என்னவளின் கண்ணில் படாதே
      அவள் விழியில் அம்பு!

      வானவில்லிற்கு வேண்டுகோள் வைக்கிறார்.  யார் கண்ணில் பட்டாலும், வானவில்லே என் காதலியின் கண்ணில் பட்டு விடாதே. அவள் அம்பு விழிகளால் வானவில்லையும் வில்லாக்கி அம்புகள் விட்டு காயப்படுத்தி விடுவாள் என்று எச்சரிக்கை செய்வது எள்ளல் சுவை!

      காதல் கனி ரசம் நல்கி உள்ளார்.  பாராட்டுக்கள்.  பணத்தை, வருமானத்தை அப்படியே சேர்க்காமல் ஒரு பகுதியை இலக்கியத்திற்கு செலவழிக்கும் இனியவரின் இனிய படைப்பு, இந்நூல்.        

கருத்துகள்