வெளிச்சத்தில் ஒரு கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.



வெளிச்சத்தில் ஒரு கனவு!

நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் !
அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி.  

வெளியீடு : வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர். வளாகம்,
செரி சாலை, சேலம் – 636 007.  பக்கம் : 64, விலை : ரூ. 50
பேச : 98429 74697


******

பதிப்புலகில் தனி முத்திரை பதித்து வரும் வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக்க வெளியீடாக வருகின்றது. ‘வெளிச்சத்தில் ஒரு கனவு’ நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது.  இருட்டில், தூக்கத்தில் பலரும் கனவு காண்பார்கள்.  நூல் ஆசிரியர் கவிஞர் சித்தார்த் பாண்டியன் வித்தியாசமாக வெளிச்சத்தில் ஒரு கனவு கண்டு கவிதையாக்கி நூலாக வழங்கி உள்ளார், பாராட்டுக்கள்.

கவிதைக்கு கற்பனை அழகு என்பார்கள். சூரிய ஒளியை பற்றிப் பிடித்து உயரே பறந்து பறந்து பறவைகளைச் சந்தித்து நேர்முகம் கண்டு பறத்தல் அனுபவத்திய அல்ல கற்பனைக் கனவு அனுபவத்தை கவிதையாக வடித்துள்ளார். 

வெளிறியது வானம் விடியலின் கோலம்
      கீழ்த்திசை விண்ணில் கிளர்ந்தான கதிரோன்!

      எங்கும் ஒளிப்பொன் உருகி வழிந்தது
      வெள்ளப் பெருக்காய் வெளிச்சப் பெருக்கு!

      இத்தனை நேரமும் இரவுப் போர்வையில்
      உறங்கிக் கிடந்தாயோ உயரும் கதிரே!

இக்கவிதை நூலின் முதல் கவிதை முத்தாய்ப்பான கவிதை.  கவிஞர்கள் பலரும் நிலவையும், நிலவொளியையும் இதுவரை பாடி வந்தார்கள்.  வித்தியாசமாக சூரியனையும், அது உமிழும் ஒளியையும் வைத்து தொடர்கவிதைகளாக எழுதி உள்ளார்.  ஒளிப்பொன் உருகி நல்ல உவமை.  வானத்தில் பொன் போலவே காட்சியளிக்கும் சூரிய ஒளி.  சித்தார்த்தன் தான் பின்பு புத்தான் ஆனான்.  எனவே புத்தன் மனநிலையிலும் பாண்டியமன்னன் மனநிலையிலும் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு சூரிய ஒளியை ரசித்து ருசித்து கவிதைகள் வடித்துள்ளார்.  சித்தார்த் பாண்டியன் என்ற பெயர் நல்ல பொருத்தம். 

வெளிச்சத்தை வளர்த்தேன்
      வழுக்கியது விடவில்லை
      இறுக்கிப் பிடித்தேன் 
      இறுகியது
      மெல்ல ஏற ஆரம்பித்தேன் ஏறினேன்
      மேலே மேலே இன்னும் மேலே!

வானிலிருந்து வரும் சூரிய ஒளியை கற்பனையால் பற்றி ஏறியதை கரங்களாள் பற்றி ஏறியதாக கவிதை வடித்துள்ளார்.  கவிதைக்கு கற்பனையும் பொய்யும் அழகு தான் என்பதை மெய்ப்பித்துள்ளார்.  பற்பல கட்டிடங்கள், சிற்சில வெற்றிடங்கள் கண்கொள்ளாக் காட்சி.

     தென்னை மரங்களின் 
     இராணுவ அணுவகுப்பு
      புல்வெளிகளின் பச்சைக் கம்பளப் / பட்டுவிரிப்பு
      எங்கும் மலைகள் அன்னை பூமியின்
      அழகிய தனங்கள்.  தனங்களில் வழியும்
      தண்ணீர் ஊற்றுகள்
      நீலப்பாம்பாய் நெளியும் ஆறுகள்!

விமானத்தில் பயணம் செய்யும் பயணி சன்னல் வழியாக ரசிக்கும் காட்சியை உற்றுநோக்கிய கவிஞர் வெளிச்சத்தைப் பற்றி ஏறி உயரே பறந்து சென்று வானிலிருந்து பூமியை ரசித்தால் எப்படி இருக்கும் என்பதை காட்சிப்படுத்தி வாசகர்களுக்கு இயற்கை விருந்து வைத்துள்ளார், பாராட்டுக்கள்.

      கைகளில் பற்றியிருந்த
      ஒளிக்கயிற்றின் கற்றைகளை
      ஒருமுறை முத்தமிட்டேன்
      மீண்டும் பற்றி ஏறினேன்
      என் பயணம் தொடர்ந்தது!

சந்திரமண்டலத்திற்கு பயணித்த பயணி, பயணக்கவிதை எழுதுவது போலவே வானில் கற்பனை வானில் பயணித்து சொல்வளங்களுடன் கற்பனைத் திறனுடன் இயற்கை வளங்களை படம்பிடித்துக் காட்டி உள்ளார், பாராட்டுக்கள்.

      எத்தனை கோடி இன்பம்
      வைத்தனை என் இறைவா!
      நான் இருக்கும் இவ்விடத்தைச் சுற்றிலும்
      எத்தனை கோடி சூரியத் தொகுதிகள்!

மகாகவி பாரதியார் அடுத்த வீட்டில் செல்லம்மாள் இரவல் வாங்கி வைத்து இருந்த அரிசிகளை குருவிகளுக்கு இட்டு மகிழ்ந்து வறுமையிலும் செம்மையாக பாடிய வைர வரிகளின் மூலம் தொடங்கி சூரியனை ரசித்து உள்ளார்.

விஞ்ஞானிகள் சந்திரன் சென்று வந்து உள்ளனர்.  செவ்வாய் செல்ல திட்டமிடுகின்றனர்.  ஆனால் யாரும் சூரியன் செல்ல இதுவரை திட்டமிடவில்லை.  காரணம் இயலாத ஒன்று சுட்டெரித்து விடுவான் சூரியன்.  ஆனால் கவிஞரால் மட்டுமே சூரியனை நெருங்க முடியும், ரசிக்க முடியும் என்பதை நூல் ஆசிரியர் சித்தார்த் பாண்டியன் மெய்ப்பித்து உள்ளார்.  எல்லாக் கவிஞர்கள் போல மானே தேனே என்று கூறியது கூறாமல் வித்தியாசமாக சிந்தித்தமைக்கு பாராட்டுக்கள்.

     நான் கதிரின் ஒளியைப் பற்றினேன்
      சர்ரென விர்ரென விரைவாக இறங்கினேன்
      நான் முன்னர் விண்ணை
      நோக்கி எரிய நிலைகளைக் கடந்து
      இறங்கி வந்து கொண்டிருந்தேன்
      அன்னை பூமியின் ஆபத்தைப் போக்க
      பூமி தெரிந்தது ஒரு சிறு
      புள்ளியைப் போல் இன்னும் இறங்கினேன்!

பாரசூட்டின் மூலம் கீழ் இறங்கிய ஒரு வீரனைப் போலவே உற்றுநோக்கி பூமி தெரிந்ததாம் ஒரு சிறு புள்ளியைப் போல. நல்ல கற்பனை.  நல்ல காட்சிப்படுத்தல், இயற்கை ரசித்தல் நன்று. 

      காக்கப்பட வேண்டும்
      வருந்தலைமுறைக்கு வைக்கப்பட வேண்டும்
      கசங்காத நிலையில் என்றேன்
      ஆழ்மனத்துக்குள்!

சூரிய ஒளியைப் பற்றி மேலே சென்று விண்ணை ரசித்து விண்ணிலிருந்து பூமியை ரசித்து விண்ணில் கண்ட பறவைகளை ரசித்து, பறவைகளின் வாழ்வியல் முறை கேட்டு அறிந்து, சுற்றுச்சூழல் மாசு காரணமாக விரைவில் பூமி அழிந்து விடும் என்பதை உணர்த்தி பூமியை வருங்கால சமுதாயத்திற்கு கசங்காத நிலையில் ஒப்படைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்து உள்ளார்.

எல்லாவற்றையும் நானே எழுதக்கூடாது,' மற்றவை வெள்ளித் திரையில் காண்க' என்பதைப் போல மற்றவற்றை இந்த நூலை வாசித்துக் காண்க! இயற்கையை ரசிக்க கற்றுத் தந்துள்ள நல்ல கவிதை நூல். நூலாசிரியருக்கும், பதிப்பாளருக்கும் பாராட்டுக்கள்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்