விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள்! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




விருப்புக் குறியீடுகளில் 
விளைந்து நிற்கும் சொற்கள்!
தொகுப்பாசிரியர் : 
கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

68/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011.  
பேச : 98409 12010,
பக்கம் : 64, விலை : ரூ. 80
******
நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி சென்னையில் வாழ்ந்தபோதும் பிறந்த ஊரான மயிலாடுதுறையை பெயருடன் இணைத்துக் கொண்டவர்.  கவிஓவியா மாத இதழின் ஆசிரியர், தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் இளைஞர்.  மாதாமாதம் இலக்கிய விழா சென்னையில் நடத்தி மகிழ்பவர்.  முகநூலை உற்றுநோக்கி பிடித்த கவிதைகளைத் தொகுத்து கவிஞர்களின் சம்மதம் பெற்று நூலாக்கி உள்ளார். இதற்கான உழைப்பு மிகப்பெரியது, பாராட்டுக்கள்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொதுநல நோக்கில் தான் ரசித்த கவிதைகளையும் தன் கவிதையையும், தன் மனைவி கவிதையையும் சேர்த்து நூலாக்கி விட்டார். அட்டைப்படம் உள்அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தி பாராட்டுக்கள்.  கவிஞர்களின் முகநூல் முகவரி அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் நூல் உள்ளது.  அடுத்த பதிப்பில் கவிஞர்களின் பெயர், கவிதை, இடம்பெற்றுள்ள பக்க எண் இடம்பெறச் செய்யுங்கள்.
இந்நூலை "உரத்த சிந்தனை நாயகர் உள்ளன்பால் உயர்ந்தவர் திரு. உதயம் ராம் அவர்களுக்கு" காணிக்கையாக்கி உள்ளார். ஒரு இதழின் ஆசிரியர் மற்றொரு இதழின் ஆசிரியருக்கு காணிக்கையாக்கி இருப்பது சிறந்த பண்பிற்கு எடுத்துக்காட்டு.
திரைப்பட இயக்குனர் இராசி. அழகப்பன், கவிஞர் பால சாண்டில்யன் ஆகியோரின் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன.  தொகுப்பாசிரியரின் தொகுப்புரையும் நன்று.  “என்னுடன் முகநூலில் நட்பு கொண்டிருக்கும் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து ‘விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் என்ற இந்நூலை 14வது தொகுப்பாக கவிஓவியா வெளியீடாக உங்கள் கரங்களில் சேர்த்திருக்கிறேன்.
நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் தேர்ந்தெடுத்த முத்துக்கள்.  அதிலிருந்து சில முத்துக்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு :
ஆரூர் தமிழ்நாடன் ! 
 
இரவின் துயரை 
இதமாய் அழுது 
என்னைத் தேந்து
      நீயென் விழுது 
இரண்டொரு நாளாய் 
இதயம் பழுது
எழுத்தாய் வந்து 
என்னை எழுது!


இக்கவிதையை முகநூலில் படித்து இருந்தபோதிலும் நூலில் திரும்ப வாசிக்கும் போது மகிழ்ச்சி தந்தது.  ‘இயைபுஇனிமையாக வந்து விழுந்து உள்ளது கவிதையில்.

கவிஞர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை  
பகலிரவின்றி வேறு பொழுதுண்டோ வாழ !

வித்தியாசமான கேள்வி. இதுவரை யாரும் கேட்காத கேள்வி. பகல், இரவு தவிர வேறு பொழுதுண்டா? வாழ, என்று கேட்டு சிந்திக்க வைத்துள்ளார்.
பதினான்கு ஆண்டுகள் 
மிக கவனமாய 
சீதையைக் காத்தது
      ஒரு காடு 
பாண்டவர்க்க்கு 
அடைக்கலம் கொடுத்தது
      வாழச் சொன்னது 
ஒரு காடு 
இன்று மட்டும் எப்படி
      உயிர்களைக் குடிக்கும் /
கொடூரனாய உருமாறியது
      நம் கண்ணெதிரே சுடுகாடு?
இ.எஸ். லலிதாமணி, சென்னை.

காடுகளின் அருமை பெருமைகளை பட்டியலிட்டு விட்டு குரங்கணி தீ விபத்தை மனதில் வைத்து கடைசியாகக் கேட்ட கேள்வி சிந்திக்க வைத்தது.

காளை எழும் திமிலைப்பிடி 
காலை எழும் காற்றைப்பிடி
      வேளை எழும் பரிதியிழை 
வேலை செய்யும் தெம்பு வரும்!
மாம்பலம் ஆ. சந்திரசேகர, சென்னை.
     சென்னையின் பெருமைகளில் ஒன்றானவர், புரவலர், வெற்றியின் ரகசியத்தை கவிதையில் வடித்துள்ளார்.
     மனிதம் நேசி!
அன்பை வழங்கு அன்பில் மயங்கு
அன்பின் மடியில் அன்பே உறங்கு
அன்பை விதைத்து அன்பை வளர்த்து
அன்பின் வடிவாய் அன்பே விளங்கு!
தீயாரு, சென்னை.

விளம்பர வசனங்கள் எழுதி புகழ்பெற்றவர், அன்பை மேன்மையாக விளம்பரப்படுத்தியது சிறப்பு. பாராட்டுக்கள்.

மூங்கில் காடு 
இசைமழை பொழியும் 
புல்லாங்குழல்
புதுவைத் தமிழ் நெஞ்சன்.

புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர் துளிப்பா நூற்றாண்டை புதுவையில் சிறப்பாக நடத்தியவர்.  தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி.  துளிப்பா நன்று.  புதுவைத் தமிழ் நெஞ்சன் அவர்கள் செல்வ மகள் கு.அ. தமிழ்மொழி. அவர்து கவிதை வரிகள் இதோ!

 தூண்டில் மீனுக்கு மண் புழுவை
       இரையாகத் தந்தது போல 
 வாழ்க்கை!

இன்றைய நாட்டு நடப்பை சொற்சிக்கனத்துடன் உணர்த்தியது சிறப்பு.  இவரது துளிப்பா நூல் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளன. 

நடவுப்பாடகி 
வாழ்வின் மிச்சம் 
பாடல்கள்!
ஆடலரசன், கும்பகோணம்.

நாற்று நடும் பெண்களுக்கு அவர்கள் பாடிய பாடலைத் தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை என்பதை அழகாக உணர்த்தியது சிறப்பு.
பதிலிகள்! நேசம் என்பதன் பொருள் 
புரிவதாக
இல்லை 
கரியும் போது 
தாங்காத நேசங்கள்
      மார் தட்டிக் கொள்கின்றன 
நம் நிமிர்தலின் போது.
கவிஞர் ஆதிரா முல்லை.

சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் பேராசிரியர் கவிஞர் ஆதிரா முல்லை வாழ்வியல் எதார்த்தத்தை பதிவு செய்துள்ளார்.

நீ தட்டுகின்ற தருணத்திற்காக
தாழ் நீக்கிக் காத்திருக்கின்றன 
கதவுகள்!
கவிஞர் மா.உ. ஞானவடிவேல், சென்னை.

தொகுப்பாசிரியரின் முகநூல் நண்பர்கள் பலரும் என் முக நூலிலும் நண்பர்களாக இருப்பவர்கள். ஏற்கெனவே முக நூலில் படித்து ரசித்த கவிதைகளை திரும்பவும் ரசிக்க வாய்ப்பாக அமைந்தது.  “தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ்பெற்ற பொன்மொழிக்கு விளக்கம் தருவதாக கவிதை உள்ளது. பாராட்டுக்கள்.

உதிரவில்லை 
பழுத்த இலை 
மெல்லப் பெய்யும் பனி
தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளையபாரதி, சென்னை.

சப்பானியக் கவிஞர்கள் போல இயற்கையைப் பாடியுள்ளார்.  காட்சிப்படுத்தி உள்ளார்.  உதிர வேண்டிய இலையை உதிராமல் காக்கிறது பனித்துளியின் ஈரம் என்கிறார்.  இதனை உறவுகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

நூலின் 43வது பக்கத்தில் என்னுடைய ஹைக்கூ கவிதைகள் 6 இடம் பெற்றுள்ளன. நூல் வாங்கிப் படித்து அறிந்து கொள்ளுங்கள். 

அன்று கொளுத்திய 
குன்றா காதல் தீ 
ஆயிரம்
      சரவெடிகளாய 
வெடித்துக் கொண்டே 
துடித்துக் கொண்டே
      ஒலித்துக் கொண்டே 
என்னிதயத் துடிப்பாய்
       உன்னினிய நினைவுகள்!
வ. பரிமளாதேவி, பட்டிவீரன்பட்டி.

காதல் கவிதையை கல்வெட்டாகப் பதித்து உள்ளார்.  இவருடைய கவிதை நூலிற்கு மதிப்புரையை இணையத்திலும் பதிவு செய்துள்ளேன்.  பட்டிவீரன்பட்டியில் பிறந்து, பட்டி தொட்டி எல்லாம் பரவும் வகையில் கவிதைகள் வடித்து வருகிறார், பாராட்டுக்கள்.

உன் தரிசனப் பார்வைக்காக 
காத்திருக்கிறேன் 
பார்த்துக்
      கொண்டே நகர்கிறது
தொடர்வண்டிக் கூட்டம்
கன்னிக்கோவில் இராசா, சென்னை.

கன்னிக்கோவில் இராசா அவர்கள்  குழந்தை இலக்கியம் படைத்தவர் காதல் இலக்கியமும் படைத்து வருகிறார், பாராட்டுக்கள்.

முகநூலில் ரசித்த கவிதைகளை தேர்ந்தெடுத்து ,தொகுத்து ,பகுத்து நூலாக்கி வாசகர்களுக்கு கவி விருந்து வைத்துள்ள நூலின் தொகுப்பாசிரியர் ,பதிப்பாசிரியர் இனிய நண்பர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள் .

கருத்துகள்