விடுதலை வானில்!
கவிஞர் இரா. இரவி
விடுதலை வானில் பறக்கும் பறவையே
விரும்பிய விடுதலை வாய்த்தது உனக்கு !
நட்டநடு இரவில் தங்கை ஒருத்தி தனியாக
நகையோடு வரும் நாளே திருநாள் என்றார் காந்தியடிகள் !
பட்டப்பகலில் பச்சிளம்குழந்தை கூட நடமாட முடியாத
பாதகமான நிலை நிலவுகின்றது இன்று !
பாலியல் குற்றங்கள் நாடெங்கும் நடக்கின்றது
பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடாக அறிவித்து விட்டனர்!
இந்தியாவின் முதுகெலும்பு உழவு என்றார் காந்தியடிகள்
இன்று தற்கொலை செய்கின்றனர் உழவர்கள்!
இன்று விளையும் நிலங்ககளை வீட்டடி மனையாக்கி விட்டனர்!
நாளை உணவிற்கு பிறரிடம் கையேந்தும் நிலை வரும் !
வெள்ளையனே வெளியேறு என்று போராடினார் காந்தியடிகள்
வெள்ளையனே கொள்ளையடிக்க என்று வரவேற்பு தருகின்றனர்!
பன்னாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளை நடக்கின்றது
பண்பாட்டு சீரழிவும் நாடெங்கும் நடக்கின்றது!
காவலரே சாக்லேட் திருடும் அவலநிலை இன்று
காவலருக்கு தலைகுனிவு தரும் நிகழ்வுகள் இன்று!
தொடர்வண்டியில் படியில் பயணித்து மரணங்கள்
தொடர்கதையாக நடந்து வருகின்றது துயரங்கள்!
பேரிடர் ஒத்திகையில் பேரிடர் நடந்தது இன்று
பத்திரிக்கையில் தினந்தோறும் துயர நிகழ்வுகள்!
உலகின் முதல் மொழியான ஒப்பற்ற தமிழுக்கு
உரிய மதிப்பினை இன்னும் வழங்கிடவில்லை!
பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில்
பணத்தட்டுப்பாட்டை உருவாக்கி தவிக்க விட்டனர்!
ஒரே வரி என்று சொல்லி ஒன்பது வரி வாங்குகின்றனர்
ஒரேயடியாக சிறுதொழில்களை மூடிட வைத்தனர்!
பெட்ரோல் டீசல் தினந்தோறும் ஏறி வருகின்றது
பெட்ரோலுக்கு மட்டும் ஒரே வரி வாங்கிட மறுக்கின்றனர்!
நீட் தேர்வு என்ற பெயரால் படுகொலைகள் நடந்தது
நம் மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கிடைக்காமல் போனது!
கேள்வித்தாளில் ஏகப்பட்ட பிழைகள் இருந்தன
கேள்விகளால் சிரிப்பாய் சிரித்தது தேர்வு முறைகள்!
என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை
எங்கிருந்தோ நீ யாரடா முடிவு செய்வதற்கு?
மாட்டிற்காக மனிதனைக் கொன்ற கொடுமை எல்லாம்
மற்ற நாட்டில் நடக்கவில்லை இந்தியாவைத் தவிர!
கோடிகளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு பறக்கின்றனர்
குறைந்தபட்சம் கைது கூட செய்வதில்லை அவர்களை!
உழவன் கடன் கட்ட விடுபட்டால் அதிகாரிகள்
உடன் சென்று உயிரை வாங்கி விடுகின்றனர்!
சிறையிலிருந்து பிணையில் வருகிறான் கோடித்திருடன்
சின்னத் திருடன் மட்டுமே சிறையில் இருக்கிறான்!
விலைவாசியைக் குறைப்போம் என்கின்றனர் தேர்தலுக்கு முன்
விலைவாசியோ விண்ணை முட்டுகின்றது தேர்தலுக்கு பின் !
ஏழையின் வாழ்வில் விடியல் விளையவில்லை
இன்னும் இருட்டிலேயே தவித்து வருகின்றனர்!
காவேரியில் தண்ணீர் வேண்டிப் போராடினோம்
காவேரியை கடலில் கலக்க விட்டு வேடிக்கை பார்க்கிறோம்!
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு வரவில்லை இன்னும்
மழைநீரை வீணடித்து வேடிக்கை பார்க்கின்றோம்!
மற்ற ஊரில் எல்லாம் வெள்ளம் போகின்றது
மதுரையின் வைகையிலே சொட்டு நீர் இல்லை இங்கு!
தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற நிலை
தள்ளாடித் தவிக்கின்றது குடிகாரர்களின் குடும்பங்கள்!
பல்வேறு குற்றங்களுக்கும் காரணம் கொடிய மது
பாயும் வெள்ளமெனப் பாயும் மதுவை ஒழித்திட வேண்டும்!
இளைய தலைமுறையினருக்கு பொறுப்பு வரவில்லை
இன்னும் தான்தோன்றித்தனமாகவே பலர் திரிகின்றனர்!
கோடிகள் ஈட்டும் நடிகர்களுக்கு இளைஞர்கள் பலர்
கொடிகள் நட்டு கூச்சல் இட்டு வருகின்றனர்!
உருவங்களுக்கு பால் கொட்டி வருகின்றனர்
உணரவில்லை விடுதலையின் பயனை இவர்கள்!
வாஞ்சிநாதன் பகத்சிங் என பலரின் உயிர் ஈந்து பெற்ற
விடுதலையின் மேன்மையை உணரவில்லை மக்கள் !
காந்தியடிகள் நேதாஜி என இருவழிகளில் போராடி
கடைசியாகப் பெற்றோம் விவேகமான விடுதலை!
விடுதலையின் பெருமையை கட்டிக் காப்போம்
வானில் பறக்கும் பறவையின் உணர்வைப் பெற்றிடுவோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக