படித்ததில் பிடித்தது.
திரை மூடிய ஆளுமை - இங்கர்சால்.
ஆகஸ்ட் 11.. இன்று!
சுதந்திர சிந்தனைக் காலக்கட்டத்தின் தலைசிறந்த பேச்சாளரும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவருமான ராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833-1899) பிறந்த நாள் இன்று.
அமெரிக்கா- நியூ யார்க் நகரத்தில், செனிகா ஏரியின் மேற்குக் கரையில் உள்ள ட்ரெஸ்டன் நகரத்தில், ஜான் இங்கர்சால் என்ற பாதிரியாரின் கடைசி மகனாக, 1833 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11 ஆம் நாள் பிறந்தார். இரண்டு வயதிலேயே தனது தாயை இழந்தார். இவரது தாய் மத நம்பிக்கை அற்றவர். தந்தை மத போதகர் என்றாலும், அடிமை ஒழிப்பு, பெண்களுக்கான சுதந்திரம் என முற்போக்கு எண்ணம் கொண்டவர்.
நேர்மையாக இருந்தால், பணியிட மாற்றம் செய்வதுதானே மனித குல அரசியல் வரலாறு. அதன்படி, இவரது தந்தையும் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தார். இவரும் பல்வேறு சபைகளுக்கு மாறிக் கொண்டிருந்தார். இது இவரது ஐந்து பிள்ளைகளின் படிப்பையும் வெகுவாகப் பாதித்தது. இங்கர்சால் ஒரு வருடம் மட்டுமே முறையான பள்ளிக்கூடம் சென்றார். 18 வயதில், சட்டம் படிக்க முயன்றார். அதுவும் பாதியிலேயே நின்றுபோனது. ஆனாலும், சலுகை நியமனப் பதிவு முறையில் வழக்கறிஞர் ஆனார்.
தந்தையின் வழியே பைபிளை முழுமையாகக் கற்றார். அதில் முரண்பாடுகள் உள்ளதாகத் தந்தையோடு வாதிட்டார். வாதத்திறமையும், பேச்சாற்றலும் மிக்க இங்கர்சால் , தனது வாழ்நாள் முழுக்க , மேடைகளில் பேசி, புரட்சிகர சிந்தனைகளை விதைத்துக் கொண்டே இருந்தார். இவரது பேச்சைக் கேட்க , பார்வையாளரிடம் ஒரு டாலர் பணம் வசூலிக்கப்பட்டது என்றாலும் அரங்குகள் நிறைந்தன. ஷேக்ஸ்பியர் முதல் அக்கால அரசியல் வரை எல்லா தலைப்புகளிலும் பேசினார்.
வசீகரிக்கும் பேச்சு நடை இவருடையது. இவரது நடையைப் பலரும் பின்பற்றத் தொடங்கினர். The Clergy know that I know that they know that they dont know என்றெல்லாம் பேசுவார். உலகம் முழுக்க, ஏன் தமிழ்நாட்டிலும் கூட, இவரது பேச்சுநடையை அரசியல் தலைவர்கள் பின்பற்றி, புகழ் அடைந்ததுண்டு.
அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் கலந்துகொண்டார். அதிபர் தேர்தலில் ஜேம்ஸ் பிளேய்ன் என்பவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இல்லினாய்ஸ் மாகாண ஆளுநர் பதவி கிடைக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், பைபிளுக்கு எதிரான கருத்துக்களைத் திரும்பப் பெற மறுத்ததால் , அப்பதவி கைநழுவியது. தொடர்ந்து, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் வாதாடினார். குற்றவாளிக்கு ஆதரவாக இவர் வாதிடும்போது, நாம் குற்றம் செய்திருக்க மாட்டோமோ என குற்றவாளியே நம்பும்படிக்கு இவரது வாதம் அமைந்திருக்கும். பல வழக்குகளில் வெற்றி பெற்ற இங்கர்சாலின் அப்போதைய சம்பளம் , நாளொன்றுக்கு 250 டாலராம்.!
இங்கர்சால், தனது காலத்தின் சிந்தனைவாதிகளோடு தொடர்ந்து நட்பில் இருந்தார். வால்ட் விட்மன் இவரது நெருங்கிய நண்பர். 1892ல் விட்மன் இறந்த போது, இவர் ஆற்றிய இரங்கல் உரை இன்றளவும் சிறந்த பேச்சுக்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இவரது உரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக ட்ரெஸ்டன் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.
அறியாமையின் படைப்பு தான் கடவுள் என்றும், விஞ்ஞானத்தின் முதல் எதிரியும் அவரே என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார். கலீலியோவிற்கு எதிராக திருச்சபை செய்த செயல்களை வரலாறு மன்னிக்காது என்றும் பேசினார். ஆனால், மனிதாபிமானத்தை இவர் ஒருபோதும் கைவிடவில்லை. கத்தோலிக்கத்திற்கு எதிராகப் பேசினாலும், கத்தோலிக்கர்களுக்கு எதிராகப் பேச மாட்டேன் என்று சொன்னபடியே இறுதிவரை இருந்தார். ”பைபிளில் தேவையற்ற பத்திகள் சில இருப்பதால் மட்டுமே, நான் அதனைப் புறக்கணிக்க மாட்டேன். ஞானத்தின் ஊடாக சில பேதைமை இருப்பதால் , ஞானத்தைக் கைவிடமுடியாதல்லவா!”என்று தனது நிலைப்பாட்டை அவர் தெளிவாகவே சொன்னார்.
ஆனாலும், இன்று அவர் மத வெறுப்பாளராக மட்டுமே முன் நிறுத்தப்படுகிறார். அவரது முற்போக்கு சிந்தனைகள், பேச்சாற்றல், சலியாத உழைப்பு, வாதத்திறன் போன்ற பன்முக ஆளுமைத் தன்மை, மத வெறுப்பாளர் என்ற ஒற்றைத் திரையால் மூடப்பட்டிருக்கிறது. திரையைத் திறந்து உள்ள இருப்பதைப் பார்க்கும் முயற்சி நம்மிடம்தான் இருக்க வேண்டும்.
கனமான கருத்து, திடமான கொள்கை; கம்பீரக் குரல், பருத்த உடல்; இவைதான் இங்கர்சால். இவர், தொடர் அலைச்சல்களால் மாரடைப்பு காரணமாக 1899 ஆம் ஆண்டு தனது 66 ஆம் வயதில் இறந்து போனார். அர்லிங்டன் தேசியக் கல்லறையில் இவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இவர் வாழ்ந்த வீடு, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இவரது பேச்சின் மூன்று அசல் ஒலிப்பதிவுகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று அவர் பிறந்த நாள். சில முரண்பாடுகள் இருப்பதால் மட்டுமே, இங்கர்சால் என்ற ஆளுமையைப் புறந்தள்ளிவிட்டால், அது நமக்கே இழப்பாகும்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல், என்றும் தீர்வதில்லை. ஆம், பூட்டிய உள்ளத்தின் புறக்கண்கள் காட்டும் தோற்றம் போலியானது. திறந்த மனதோடு, அகத்தால் ஒருவரை அணுகும் போது மட்டும்தான், அந்த மனிதனின் அகம் அறிய முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக