மித்ரா நூல் ஆசிரியர் : கவிப்போராளி சுந்தர பழனியப்பன், பேச : 98423 45419. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !







மித்ரா !நூல் ஆசிரியர் : கவிப்போராளி சுந்தர பழனியப்பன்,
பேச : 98423 45419.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு :
 கவி ஓவியா, 68/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர் செம்பியம், சென்னை-600 011. 
பேச : 98409 12010
.
******
நூல் ஆசிரியர் கவிப்போராளி சுந்தர பழனியப்பன் அவர்களின் 11வது நூல் மித்ரா .  ஹைக்கூ என்றால் நினைவிற்கு வரும் முன்னோடி ஹைக்கூ படைப்பாளி ஆய்வாளர் பேராசிரியர் மித்ரா அவர்களின் பெயரையே நூலிற்குத் தலைப்பாகச் சூட்டியது சிறப்பு. அவரது அணிந்துரையும் சிறப்பு. கவிஓவியா மயிலாடுதுறை இளையபாரதி அவர்கள் மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். பாராட்டுக்கள்.

நூலாசிரியர் கவிப்போராளி சுந்தர பழனியப்பன் அவர்களுக்கு இது இரண்டாவது ஹைக்கூ நூல்.  ஹைக்கூ எழுதுவதின் சூட்சுமம் அறிந்து சொற்சிக்கனத்துடன் நன்கு வடித்துள்ளார். பாராட்டுக்கள்.

திரியும் குஞ்சு 
      காக்கும் பாதுகாப்பு வளையத்துக்குள்
      கோழி!

அஃறிணைகளிலும் அம்மா என்பது உயர்ந்த உறவாகவே உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டிடும் ஹைக்கூ நன்று. பருந்துகளிட-மிருந்து குஞ்சுகளைக் காக்க கோழி போராடுவதையும் பார்த்து இருக்கிறோம்.  அக்காட்சி மனக்கண்ணில் வந்து போனது.

களவாடியது காலம்
      கதைக் கருவூலத்தை
      கதைசொல்லி பாட்டி!

கதை சொல்லிய பாட்டி இல்லத்தில் இல்லை.  முதியோர் இல்லத்தில் இருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம்.  இப்படி பல பொருள் கொள்ளலாம்.  ஹைக்கூவின் சிறப்பு.

இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய தமிழினப் படுகொலை ஈழத்தில் நடந்தது.  தடுக்க முடியாததற்கு உலகமே வெட்கித் தலைகுனிய வேண்டும். ஈழக்கொடுமையை நினைவூட்டும் ஹைக்கூ நன்று.

கலைந்து வீசும்
      ஈழத்தமிழனின்
      குருதி வாசம்!

புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் அந்த மாதம் முழுவதும் அசைவம் உண்பதில்லை. கறிக்கடைக்க்கும் கோழிக்கடைக்கும் வியாபாரம் குறைவாகவே இருக்கும்.  இதனை உற்றுநோக்கிய கவிஞர் எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.

ஆனந்தத்தில்
      அறுப்பு ஆடுகள்
      புரட்டாசி மாதம்!

புரட்டாசி மாதம் என்ன, எல்லா மாதமும் அசைவம் உண்ணும் அசைவப்பிரியர்களும் உண்டு.

நெருப்போ! நிலமோ!
      தின்னும் மனிதனை
      மரித்தப் பின்!

வாழ்வின் நிலையாமையை உணர்த்தி, இப்படிப்பட்ட வாழ்வில் வீண் வம்பு, கர்வம் போட்டி, பொறாமை எதற்கு? என்று வலியுறுத்தும் விதமாக சித்தாந்தம் விளக்கும் ஹைக்கூ நன்று.

பாவத்தை சுமக்கும்
      தமிழக அரசு
      மது விற்பனை!

இன்றைக்கு மாணவர்களில் பலர் குடிநோய்க்கு அடிமையாகி விட்டனர். பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்து சீரழிந்து வருகின்றனர்.  இளைஞர்கள் பலர் தவறான பாதையில் செல்கின்றனர். 

 நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுப்பழக்கமே காரணியாக உள்ளது.  மதுக்கடைகளை மூடினால் தமிழகம் ஒளி பெறும், நல்வழி கிடைக்கும். இப்படி பல சிந்தனைகளி விதைத்தது.

ஆண்டுதோறும் திருமணம்
      வைகுந்த பெருமாளுக்கு
      வயதுமுதிர்ந்த என் அக்காவிற்கு?

வரதட்சணை கொடுமை நம் நாட்டில் இன்னும் ஒழியவில்லை.  நாள்தோறும் செய்தித்தாள்களில் படித்து வருகிறோம். தொலைக்காட்சியில் பார்த்து வருகிறோம்.  வரதட்சணையின் காரணமாக முதிர்கன்னிகள் மட்டுமல்ல, முதிர்காளைகளும் பெருகி வருகின்றனர்.இப்படி பல சிந்தனைகளை விதைத்தது சிறப்பு.

வசதியாகத் தான் வாழ்கிறது
      சுவர் இடுக்கில்
      ஆளும் அரசும்!

ஆலமரமும் அரசுமரமும் சில கட்டிடங்களுக்கே இடையே வளர்வதுண்டு.  காரணம் பறவையின் எச்சம்.  ஆளுகின்ற அரசும் வசதியாகவே வாழ்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.  ஆள்வோர் வசதியாக இருந்தால் மட்டும் போதாது.  ஆளப்படும் மக்களும் வசதியாக வாழ வழிவகை செய்திட வேண்டும்.

ஐந்தாண்டு ஆட்சியில்
      ஆறு தலைமுறை வருமானம்
      அரசியல்!

அரசியலில், ஊழலில் யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதையை மெய்ப்பித்து வருகின்றனர்.  அரசியலில் பொதுநலம் மறந்து தன்னலமே தலைவிரித்து ஆடுகின்றது.  ஒவ்வொருவரையும் நம்பி நம்பியே மக்கள் ஏமாந்து வருகின்றனர். 

இறந்தது பட்டாம்பூச்சி
      எடுத்துக் செல்லும் எறும்புகள்
      அடக்கம் செய்ய!

இக்காட்சியினை பலரும் நேரடியாகப் பார்த்து இருப்போம்.  அக்காட்சியினை நிவைவுபடுத்தும் விதமான ஹைக்கூ நன்று. எறும்புகள் அடக்கம் செய்வதில்லை. தன் புற்றில் வைத்து பசியாறி விடுகின்றன. 

இனிக்கிறது நா
      செம்மொழி எம்மொழி
      தமிழ்மொழி உரைக்க!

தமிழ்மொழி பேசுவதும், கேட்பதும் பேரின்பம். தமிழ் பயின்றவர்களுக்கு முதுமை வராது. உலகம் பாராட்டும். உலகின் முதன்மொழி தமிழ்மொழிப்பற்ரு பாராட்டுக்குரியது.

பார்க்காது
      பாரபட்சம்
      நியாயத் தராசு!

எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீதிமன்றத்தில் உள்ள நீதிதேவதையின் கரங்களில் தராசு வழங்கினார்கள்.  ஏற்ற இறக்கம் இன்றி பாரபட்சமின்றி நீதி வழங்க வேண்டும். இதனை இன்றைய நீதியரசர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அக்கால மன்னர்கள் நீதி தவறாமல் காத்து வந்தார்கள் என்பதை நமது இலக்கியங்கள் பறைசாற்றிடும். 

 நூல் ஆசிரியர் கவிப்போராளி சுந்தர பழனியப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள்.

கருத்துகள்