சமூகப் புரட்சியாளர்கள் காந்தி, அமபேத்கர், பெரியார், கோரா, குமரப்பா ! நூல் ஆசிரியர் : முனைவர் இ.கி. இராமசாமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



சமூகப் புரட்சியாளர்கள்
காந்தி, அமபேத்கர், பெரியார், கோரா, குமரப்பா !
நூல் ஆசிரியர் : முனைவர் இ.கி. இராமசாமி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு : மலரகம், 3/191, நாராயணபுரம், மதுரை-14.
பக்கம் : 128, விலை : ரூ. 80
******
ஒரே கல்லில் ஐந்து மாங்காய் என்பது போல ஒரே நூலில் ஐந்து அறிஞர்கள் பற்றி அறியத் தந்துள்ளார்.  பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டபின் பகுத்தறிவுப் பணியை தொய்வின்றி செய்து வருபவர். இந்த நூலும் பகுத்தறிவு கருத்துக்கு உரம் சேர்ப்பதாகவே உள்ளது.

கோரா என்ற கோப ராஜூ இராமச்சந்திர ராவ் பற்றி மிக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார்.  இந்த நூல் படிக்கும் வரை நான் பகுத்தறிவாளர் கோரா பற்றி அறிந்த்தே இல்லை.  பகுத்தறிவாளராக இருந்து கொண்டு புகழ்பெற்ற பகுத்தறிவாளர் கோரா அவர்களை அறியாததற்காக வெட்கப்பட்டேன். இந்த நூல் படித்து அவரைப்பற்றி அறிந்து வியந்து போனேன்.

கோரா அவர்கள் உயர்சாதி பார்ப்பனர் குலத்தில் பிறந்து பூணூல் துறந்து, கடவுள் இல்லை என்ற பகுத்தறிவுக் கொள்கை ஏற்று தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து உணவு உண்டு, முற்போக்கு சாதி மறுப்பு திருமணங்கள் நடத்தி வைத்து பல புரட்சிகளை அந்தக்காலத்திலேயே புரிந்து உள்ளார்.கோரா அவர்கள் அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதராக வாழ்ந்துள்ளார் .வாரிசுகளையும் பகுத்தறிவாளர்களாக வார்த்துள்ளார் .

“நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த சரசுவதி சூரிய கிரகணத்தைப் பார்த்துக் கொண்டே வெளியில் போய் வந்தார். அவளுக்கு நல்லபடியாக அழகான பெண்குழந்தை பிறந்த்து””". கோராவின் மனைவி சரசுவதி கணவரின் வழியில் மூட நம்பிக்கைகளை முறியடிக்க உதவி உள்ளார்.  தீக்குண்டம் இறங்கி காண்பித்து கடவுள் செயல் எதுவுமில்லை என்று நிரூபித்து உள்ளார்.

கோரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரவுப்பள்ளி தொடங்கி  நடத்தி உள்ளார். தீண்டாமைக்கு எதிராக போராடி தலித் மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இப்படி பல தகவல்கள் நூல் முழுவதும் உள்ளது.

நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்கள் பல நூல்கள் படித்து ஆராய்ந்து ஐந்து அறிஞர்களையும் ஒப்பீடு செய்துள்ளார்.  குறிப்பாக தந்தை பெரியார்-கோரா ஒப்பீடு சிறப்பு.  நூலில் ஆறு தலைப்புகளில் எழுதி உள்ளார். ஆறாவது கட்டுரை மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது.  

சுயமரியாதை வாழ்வு, சமவாழ்வு உலகில் பிறந்த மனிதர் யாவரும் சமம், பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்ற மனிதாபிமான கருத்துக்களை பகுத்தறிவுக் கொள்கையின் சிறப்பை 6 ஆவது ஆங்கிலக் கட்டுரையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்.

பெரியார் கோரா ஒப்பீடு கிட்ட்த்தட்ட 90 சதவிகிதம் இருவருக்கும் ஒற்றுமை உள்ளது.  இருவருமே கடவுள் இல்லை என்றார்கள்.  கர்மா, விதி போன்ற நம்பிக்கையிலிருந்து இந்துக்கள் விடுபட வேண்டும் என்று இருவருமே சொல்லி உள்ளனர்.

தந்தை பெரியார் கன்னட்த்தை தாய்மொழியாகக் கொண்ட சூத்திரர்.  கோரா தெலுங்கை தாய்மொழியாக்க் கொண்ட  பார்ப்பனர்.  பார்ப்பனராகப்  பிறந்து பார்ப்பனர்களின் மூட நம்பிக்கைகளை, கடவுளை எதிர்த்து தீண்டாமை எதிர்த்து மனிதநேயம் பேணிய மகத்தான மனிதராக கோரா வாழ்ந்து உள்ளார்.  ஆந்திராவில் அவர் தொடங்கிய பகுத்தறிவுப் பரப்புரையை அவரது வாரிசுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றனர் என்பதை அறிந்து மனம் மகிழ்ந்தேன்.


கோரா தன் மகள் மனோரமாவை அர்ச்சுன்ன் என்ற தலித்துக்கு திருமணம் செய்து வைத்து அக்காலத்தில் புரட்சி ஏற்படுத்தி உள்ளார்.  தான் மட்டுமல்ல், பலரும் இப்படி சாதிமறுப்பு திருமணங்கள் நடத்த வேண்டும் என்று பரப்புரை செய்து பலருக்கு சாதிமறுப்பு திருமணம் நடத்தியும் வைத்துள்ளார்.

கோரா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.  அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.  மதம் மாறினால் அயல்நாடு செல்லும் வாய்ப்புண்டு என்று ஆசை காட்டிய போதும் கொண்ட கொள்கையில், கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்து பேராசிரியர் பணியை விட்டு விலகி விடுகிறார்.

கோரா அவர்கள் பகுத்தறிவுவாதி மட்டுமல்ல, மனிதநேயர்.  தன் காலில் விழ யாரையும் அனுமதிக்காதவர்.  அவரது மனைவி, மகள்கள் எந்தவொரு ஆபரணம் அணிவதில்லை என்று பெருமையாக்ச் சொல்கிறார். இப்படி கோரா அவர்களின் வாழ்வில் நடந்த பல் நிகழ்வுகள் நூலில் உள்ளன.

கோரவின் கொள்கை மற்றும் காந்தியடிகளின் சத்திய சோதனை ஒப்பீடு நூலில் உள்ளது.  கோராவையும் காந்தியடிகளையும் அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும் நன்கு படித்து ஆய்வு செய்து நூலை எழுதி உள்ளார் நூலாசிரியர் பேராசிரியர் இ.கி. இராமசாமி அவர்கள்.

காந்தியடிகளிடம் கோரா பிரார்த்தனைப் பாடலில் கடவுள் பெயர் வருகின்றது என்று குறிப்பிட்டதும் காந்தியடிகள் பாடலை மாற்றிக் கொண்ட வரலாறு நூலில் உள்ளது.

அம்பேத்கர் பெரியார் ஒப்பீடு மிக நன்று.  இருவரும் தீண்டாமைக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்து சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைந்திட பாடுபட்டு வந்த்தை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார்.

நூலாசிரியர் ஆங்கிலத்திலும் ஒரு கட்டுரை உள்ளது.  நூலாசிரியர் பேராசிரியர் இ.கி.இராமசாமி பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வின்றி பகுத்தறிவுப் பாதையில் நடையிட்டு வருகின்றார்.  அவருக்கு உற்ற துணையாக கசுதூரி இராமசாமியும் இருந்து வருகிறார். 

 இவர்களது பவள விழாவில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பசி நேரம் என்பதால் சுருக்கமாக வாழ்த்திட வேண்டினார்கள்.  திருவள்ளுவருக்கு ஒரு வாசுகி, காந்தியடிகளுக்கு ஒரு கசுதூரிபாய், பாரதியாருக்கு ஒரு செல்லம்மா, தந்தை பெரியாருக்கு ஒரு மணியம்மை, பேராசிரியர் இ.கி. இராமசாமிக்கு ஒரு கசுதூரி இராமசாமி.பேராசிரியர் இ.கி. இராமசாமி அவர்களிடம் பல நல்ல குணம் உண்டு .அவற்றில் ஒன்று தமிங்கிலம் கலப்பின்றி  நல்ல தமிழில் பேசுவது.அதனை இன்றைக்கு   தமிழர்கள் அனைவரும் கடைபிடிக்க   முன்வர வேண்டும் . என்று கூறி முடித்தேன்.




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்