பிள்ளைத்தமிழே மெட்டெடுத்துப் பாடு! நூல் ஆசிரியர் : கவிஞர் தே. சந்தோசுகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


பிள்ளைத்தமிழே மெட்டெடுத்துப் பாடு!

நூல் ஆசிரியர் : கவிஞர் தே. சந்தோசுகுமார் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 

வெளியீடு : வாசகன் பதிப்பகம், 
167, ஏ.வி.ஆர். வளாகம்,
அரசு கலைக் கல்லூரி எதிரில், சேலம் – 636 007.
பேச : 98429 74697 
******
நூலாசிரியர் கவிஞர் தே. சந்தோசுகுமார் அவர்கள் பள்ளியில் பணிபுரியும் ஓர் அறிவியல் ஆசிரியர்.  தமிழாசிரியர்கள் பலர் படைப்பாளியாவதில்லை.  சிலர் மட்டுமே படைப்பாளியாகின்றனர்.  அறிவியல் ஆசிரியரின் தமிழ்ப்பற்று பாராட்டுக்குரியது.  மதுரையில் சந்தித்த போது இந்நூலை வழங்கினார் நூலாசிரியர்.  இந்த நூல் அன்புத் தங்கைக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.

பதிப்பாளர் இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் அவர்களின் பதிப்புரை நன்று.  சாகித்ய அகதெமி விருதாளர், எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் அணிந்துரை நன்று.  திரைஉலக மார்க்கண்டேயர் சிவக்குமார் அவர்கள் பேசும் போது என்னை பேச்சாளன் ஆக்கியது ஈரோடு புத்தகத் திருவிழா என்று பெருமையோடு குறிப்பிட்டார்.  அந்த புத்தகத் திருவிழா மாநாடு போல கோலாகலமாக நடத்தி வரும் இசுடாலின் குணசேகரன் அவர்களின் அணிந்துரையும் சிறப்பு. 

பிள்ளைத்தமிழே !  பிள்ளைத்தமிழே !

      உலகினை உனதென நினைத்தால்
      உயர்ந்திடும் வழிகளும் உனதே
      வலியினை தினம் தினம் அடைந்தால்
      வலிமையாகும் உடலே!

மாணவர்களுக்கு      தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக பாடல்கள் பாடும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள்.  பள்ளியில் நடந்த கலைவிழாக்களில் மாணவர்கள் பாடுவதற்கு எழுதி வழங்கிய பாடல்களைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.  பாடாத பொருள் எனும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பொருளோடு கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள்.

கர்மவீரனே காமராசனே!

முதல்வர் பதவி உன்னை 
முழுதாய்த் தேடி வர
முழுமைக்கும் நீ உழைத்தாய் 
முதுமைக்கும் நலம் கொடுத்தாய்
குலக்கல்வியை முடித்து வைத்தாய் 
பள்ளி நலனுக்கு வழிவகுத்தாய்
மதியத்தில் உணவு தந்தாய் 
மதியினை வளர வைத்தாய்!

      தமிழகத்தில் கல்விப்புரட்சி நிகழும் வண்ணம் பல்லாயிரம் பள்ளிகள் திறந்த கல்வி வள்ளல் காமராசர் பற்றிய கவிதை நன்று.  தன்னலம் மறந்து பொதுநலத்தோடு தொண்டுகள் புரிந்ததால் தான் காமராசர் உலகை விட்டு மறைந்திட்டாலும், மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து வருகிறார்.

      உனக்கெப்படி?

      வாழ்க்கை என்பது 
      அட்சயப் பாத்திரம்
      ருசித்தவனுக்கு 
      சுவையாகவே 
      இருக்கும் !

      சுமப்பவனுக்கு 
      சுமையாகவே 
      இருக்கும்
      உனக்கெப்படி?

      பல கவிதைகளில் கேள்விகள் கேட்டு மாணவர்களைச் சிந்திக்க வைத்துள்ளார்.  வாழ்க்கையை சுமையாகக் கருதாமல் சுகமாக ரசித்து வாழ வழி சொல்லி உள்ளார். 

      தாயே தமிழ்மொழி!

      குமரியில் தோன்றிட்டு தொன்மையானாய்!
      மெல்லோசை தந்திட மென்மையானாய்!
      கொஞ்சுமொழியில் தாய்மையானாய்!
      ஒழுக்கத்தை போதிக்க தூய்மையானாய்!

      உண்மை தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பாட்டை, ஒழுக்கத்தை ஓதிடும் மொழி ஒப்பற்ற தமிழ்மொழி.  தமிழ்மொழியின் சிறப்பை பல கவிதைகளில் வடித்து உள்ளார்.

      மேகம் தீண்டினால்!

      மேகங்கள் தீண்டினால் மழையின் வாசனை
      துளிகள் வீழ்ந்ததும் மண்ணின் வாசனை !
      இரவுகள் உறங்கிடும் என்றே இதயம் உறங்கிடுமோ!
      இமைகள் மூடுவதாலே இலக்குகள் மறந்திடுமோ!
      சொல்லு கண்மணி இதில் ஐயம் ஏதடி!

      இயற்கையை இனிதே ரசிக்கும் பழக்கம் உள்ள காரணத்தால் கவிதைகளில் இயற்கை பற்றியும் பாடி உள்ளார்.  தன்னம்பிக்கை உணர்வையும் கவிதையில் விதைத்து உள்ளார்.

      அரும்பிய முல்லை விரும்பிய மொழியில்
      அழகாய் பேசுமே 
      அர்த்தங்களின்றி உதிர்க்கும்
      பேச்சினில் 
      வாசம் வீசுமே!
      தாயின் கருவில் 
      தரித்திடும் பொழுதில்
      கனவுகள் பிறக்குமோ 
      தாயின் மொழியில் 
      தருகிற உணவில் 
      கனவுகள் வளருமோ...
      அரும்பே அரும்பே 
      அழகாய் உழைத்தால்
      அரியணை அழைக்குமோ!

      குழந்தைக்கு தாலாட்டு பாடுவது போலவும் குழந்தைகள் படிக்கும் விதமாகவும் குழந்தைப்பாடல் பல வடித்துள்ளார்.

      ஆத்தாள வைய்யிரியே அப்பனே!

      ஆத்தாள வைய்யிரியே அப்பனே என் அப்பனே! இது
      தப்புன்னு தோணலியா? அப்பனே என் அப்பனே!

      காசு ஒன்னு தரலன்னு பாட்டியத்தான் உதைச்ச
      செத்தாலும் கத்துக்கல தப்பத்தான் ஒத்துக்கல

      அப்பவுந்தான் இப்பவுந்தான் எப்பவுந்தான்
      குடிக்கிற !

      குடித்து விட்டு வந்து அப்பன் அம்மாவை அடிக்கும் கதை வீதி தோறும், தமிழ்நாடு தோறும் நடந்து வருகின்றது. குடியை ஒழித்தால் தான் தமிழ்நாடு உருப்படும்.  குடிகார அப்பாவைப் பார்த்து மகன் பாடும் விதமாக வடித்த கவிதை நன்று.


      ஏவுகணை நாயகனே எங்கே சென்றாயோ!
      ஏவுகணை நாயகனே எங்கே சென்றாயோ!
      ஏக்கமின்னும் தீரவில்லை எழுந்து வாராயோ!
      விழுந்தாய் மண்ணில் வளர்ந்தாய் அன்பில்
      கடற்கரையோரமோ  உழைத்தாய் 
      தினம் பறந்தாய் கனம்
      உலகாளவே!

      செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர்.  படகோட்டி மகனாகப் பிறந்து  முதற்குடிமகனாக உயர்ந்தவர்.  மாணவர்களை நேசித்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய கவிதை நன்று.

      சிரிக்கும் சிலை!

      நண்பனே நீ தோல்வியால் 
      களங்கப்படவில்லை
      வெற்றிக்காக உருகுகிறாய் 
      என்பதல்லவோ உண்மை
      தோல்விதனில் துரத்தப்படும் 
      போதெல்லாம் 
      முயற்சிக்குளத்தில் 
      முத்துக்குளி!

      தோல்வி கண்டு துவண்டு விடும் மாணவர்கள் மனதில் நம்பிக்கை நாற்றை விதைக்கும் விதமாக பல கவிதைகள் உள்ளன.

      தருமபுரியின் பெருமைகளில் ஒன்றாகி விட்ட கவிஞர் சந்தோசுகுமார் அவர்கள் பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் பெற்று உள்ளார்.  ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்த்து வருகிறார்.  தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள். நூலின் அட்டைப்படத்தில் தன் மனைவி, தன் குழந்தைகள் மூவரையும் அச்சிட்ட பாசத்திற்கு பாராட்டுக்கள்.  சிறப்பாக பதிப்பித்த வாசகன் பதிப்பகத்திற்கும் பாராட்டுக்கள்.

      குறிப்பு : 56ஆம் பக்கம் உள்ளம் என்பது ஊள்ளம் என்று உள்ளது. அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்