மிச்சத்தை மீட்போம்! கவிஞர் இரா. இரவி !

மிச்சத்தை மீட்போம்!
கவிஞர் இரா. இரவி !

போனதெல்லாம் போகட்டும் மிச்சத்தை மீட்போம்
பசுமையெல்லாம் அழித்து வீடாக்கி விட்டோம்!

காடுகளையெல்லாம் அழித்து நாடாக்கி விட்டோம்
காடுகளின் அளவை வெகுவாக சுருக்கி விட்டோம்!

பருவமழை பொய்ப்பதற்குக் காரணம் காடு அழிப்பே
பருவத்தே பயிர் செய்ய முடியாமல் தவிக்கிறோம்!

சாலைக்காகவும் ஆலைக்காகவும் ஆயிரக்கணக்கில்
சாய்த்து விட்டோம் சிறப்பான மரங்களை!

மலைகளை வெட்டி ரொட்டியாக்கி விட்டனர்
மலைமுழுங்கி மகாதேவன்கள் திருந்தவில்லை!

இயற்கைக் செல்வங்களை சூறையாடி வருகிறோம்
இயற்கை சினமுற்று சுனாமியாக வருகின்றது!

மலைகளை எல்லாம் நாடு கடத்தி விட்டனர்
மடையர்கள் திருந்தவே இல்லை தண்டிப்போம்!

ஆற்றுமணலை அளவின்றி அடிக்கின்றனர் கொள்ளை
ஆற்றுமணலை உருவாக்க முடியுமா? கூறுங்கள் !

ஆறுகளை எல்லாம் பள்ளங்களாக்கி விட்டனர்
ஆறுகளில் தண்ணீர் ஓடாதிருக்க வகை செய்தனர்!

ஏரிகளில் எல்லாம் ஏறி நிற்குது கட்டிடங்கள்
எங்கும் எதிலும் ஆக்கிரமிப்பு நடக்குது!

குளங்களில் எல்லாம் கட்டிடங்கள் நிற்குது
கண்மாய்களில் எல்லாம் கட்டிடங்கள் நிற்குது!

தண்ணீர் வரும் வழிகளை அடைத்து விட்டோம்
தண்ணீருக்குத் தவிக்கும் நிலை அடைந்து விட்டோம்!

குடிக்கும் நீரை விலைக்கு வாங்குகின்றோம்
கடைசியில் மூச்சுக்காற்றை வாங்கும் நிலை வரும்!

இயற்கையை அழித்தோம் அழித்தது போதும்
இயற்கையின் மிச்சத்தையாவது இனி காப்போம்!

வருங்கால சந்ததிகளுக்கு வளம் தராவிட்டாலும்
வாடி நிற்கும் நோய் தராமல் இருப்போம்!

கருத்துகள்