நன்றியன்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.




நன்றியன்! 

நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்!

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

தமிழ்மணி புத்தகப்பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. 
பக்கம் : 224, விலை : ரூ. 250



******

புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மூத்த புதல்வர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் முதுகலை வணிகவியல் பட்டம் பெற்ற போதும் சராசரி மனிதர்கள் போல வங்கிப்பணியில் சேர்த்து ஊதியம் பெற வேண்டும் என்ற நோக்கமின்றி தந்தையின் வழியில் தடம் புரளாமல் தமிழ்ப்பணி இதழை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், பன்னாட்டு தமிழுறவு மாநாடுகளையும் பலவேறு நாடுகளில் நடத்தி, தந்தையை போலவே மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணப்பட்டு பயண அனுபவத்தை கட்டுரையாக வடித்து நூலாகத் தொகுத்து வழங்கி உள்ளார்.நன்றியன் பெயரே புதுச்சொல்லாக உள்ளது.பாராட்டுக்கள்.

சோமலே அவர்களைப் போல பயண இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்து வருகிறார். பாராட்டுக்கள். முகநூல் தோழி பேராசிரியர் கவிஞர் ஆதிர முல்லை (ப. பானுமதி) அவர்களின் அணிந்துரை வரவேற்பு தோரணமாக அமைந்துள்ளது. அணிந்துரையிலிருந்து சிறு துளிகள் :

“வாழ்நாள் முற்றும் சேவை திருவள்ளுவர் ஆம். அன்புச் சகோதரர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களை இப்படி சொன்னால் தான் பொருந்தும். தமிழ்ப்பணி இதழாளர், நல்ல தமிழ்ப் பேச்சாளர், நன்றியனாம் எழுத்தாளர், பைந்தமிழ் நூல் பதிப்பாளர், கனித்தமிழின் கவியாளர், அன்னையைப் போல அன்பாளர், வாழ்நாள் சாதனையாளர் என்றும் பலவகையில் ஆட்சியாளர் சகோதரர் வா.மு.சே. திருவள்ளுவர். ஆனால் அரசியலார். நூல் ஆசிரியர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் சகலகலா வல்லவர், பன்முக ஆற்றலாளர் என்பதை அணிந்துரையில் மிக அழகாக அடுக்கி உள்ளார், பாராட்டுக்கள். கவிஞர் கா. முருகையன் அவர்களின் அணிந்துரையும் சிறப்பு பெரும்புலவர் செந்தமிழ்ச்செழியன் நன்றியன் – நன்று கவிதையும் சிறப்பு.

கனடா பயணம் அமெரிக்கா பயணம், பயணக்கட்டுரையாக நூலில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே அமெரிக்கா, கனடா சென்றவர்களுக்கு மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாகவும் இனிமேல் செல்ல இருப்பவர்களுக்கு வழிகாட்டும் விதமாக பயனுள்ள சிறு சிறு கட்டுரைகளாக வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

உலகத்தமிழ் உணர்வாளர்கள் மாநாட்டில் நூலாசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் ஆற்றிய உரையும், டொரண்டோ நகரில், “உள்ளுவதெல்லாம்” என்ற நூலாசிரியரின் முந்தைய நூல் வெளியீட்டு விழா தகவலும் நூலில் இடம்பெற்றுள்ளது. பயணத்தின் போது வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படச் சான்றுகளுடன் கட்டுரை வடித்தது சிறப்பு.

நூல் படித்தால் அமெரிக்கா, கனடா சென்று வந்த மனநிறைவும் அங்கே தமிழர்களின் வளமான வாழ்வும், தமிழ் உணர்வும் தமிழ்ப்பற்றும் அறியும் விதமாக கட்டுரைகளில் விளக்கி உள்ளார். “யான் பெற்ற பேறு இவ்வையகம் பெறுக” என்ற நோக்கில் நூல் வடித்துள்ளார்.

அமெரிக்காவில் நூலாசிரியர் தம்பி தமிழ்மணிகண்டன் இல்லத்தில் தங்கி இருந்த போது அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் நன்றி மிக்க நாய் கிருட்டிணாவுடன் இருந்த நிகழ்வையும் நூலில் பதிவு செய்துள்ளார். அதிக நினைவாற்றல் இருந்தால் தான் இதுபோன்ற சின்னச்சின்ன நிகழ்வுகளை எல்லாம் மறக்காமல் கட்டுரையாக வடிக்க முடியும்.

இன்று உலகம் முழுவதும் தமிழ் வாசிக்கப்படுகிறது. இணையத்தில் வாழ்கிறது, ஆங்கிலத்திற்கு அடுத்த இணைய மொழி தமிழ் மொழி என்றானதற்கு முழுமுதற் காரணம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தான் யாழ்ப்பாணம் சென்று வந்த நிகழ்வையும் நூலில் பதிவு செய்துள்ளார், பாராட்டுக்கள்.

நூல் முழுவதும் நல்ல தமிழில் எழுதி உள்ளார். பிறமொழி எழுத்துக்களும், சொற்களும் இன்றி தமிழ்மொழியிலேயே கட்டுரைகள் அமைந்து இருப்பது தனிச்சிறப்பு. பலருக்கு நல்ல தமிழ் எழுத வரும், ஆனால் நல்ல தமிழ் பேச வராது. தமிங்கிலமே பழகி விட்டது. ஆனால் நூல் ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் எப்போதும் நல்ல தமிழில் பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர். சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டு நல்லதமிழில் நண்பர்களுடன் உரையாடுவதை நேரில் கண்டு ரசித்து உள்ளேன். அந்த அனுபவமே எழுத்திற்கும் துணை நிற்கின்றது.

பேராசிரியர் பாலா பற்றிய ஒரு பதிவு பதச்சோறாக நூலிலிருந்து “ஒரு முறை நானும் பாலாவும் கோலகங்கா பகுதியில் உணவருந்திக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் பாலா அருகில் வந்து (Sir, I am your student. I am the Vice Chancellor of University) ஐயா, வணக்கம். நான் தங்கள் மாணவன். நான் தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளேன் எனக் கூறினார். துணை பிரதமராக இருந்த, தற்போது மலேசிய அரசியலில் முக்கிய நபர்களாக உள்ளவர்களும் பாலாவின் மாணவர்கள் தாம்”.

இதனைப் படித்த போது, தமிழகத்தை நினைத்துப் பார்த்தேன். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தனது ஆசிரியரைக் கண்டு இப்படி நினைவுகூர்ந்து நன்றி கூறும் பழக்கம் வருமா? துனைவேந்தர் என்றால் சிலர் வேந்தர் போல ஆகி விடுவது தமிழகத்தில் வழக்கம். ஒரு சிலர் தான் மு.வ. போன்ற மூத்த துணைவேந்தர்கள் விதிவிலக்கானவர்கள். நூலாசிரியர் முதுகலை வணிகவியல் பயின்றவர். வங்கிப்பணியில் அமர்ந்து பணம் சேர்க்காமல் தமிழ்ப்பணி என்ற மாத இதழில் தந்தையைப் போலவே ஆசிரியராகி தமிழ்ப்பணி செய்து வருவது பாராட்டுக்கள்.

“தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப தந்தை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் பாதையிலேயே பல நாடுகளுக்கும் பயணப்பட்டு வருகிறார். பயணத்தைக் கட்டுரையாக்கி நூலாக்கி வருகிறார். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்



கருத்துகள்