பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்!

நூல் ஆசிரியர் : பேராசிரியர் 
தமிழ்த்தேனீ இரா. மோகன் !
!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி,
இரண்டாம் முதன்மைச் சாலை, தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113. 
பக்கம் : 156, விலை : ரூ. 100.

******
வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே சூட்டப்பட்ட மணிமகுடம் இந்நூல். நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பன்முக ஆற்றலை, ஆளுமையை நவரத்தினம் போல ஒன்பது தலைப்புகளில் படம்பிடித்துக் காட்டி உள்ளார் பாராட்டுக்கள்.

 இந்நூலை இந்த நூலின் நாயகர் ஔவை நடராசன் படித்து முடித்ததும் அவரது வாழ்நாளில் இன்றும் பல ஆண்டுகள் கூடி விடும் என்பது உண்மை.  படிக்கும் வாசகர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சம்பந்தப்பட்ட படைப்பாளிக்கு கூடுதல் மகிழ்ச்சி கிட்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் அணிந்துரையும், மருத்துவர் கவிஞர் நரம்பியல் வல்லுநர் ஔவை மெய்கண்டான் இருவரின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகுசேர்ப்பதாக உள்ளன, பாரட்டுக்கள்.

நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் பயின்றபோது பேராசிரியராக இருந்தவர் ஔவை துரைசாமிப்பிள்ளை.  ஔவை நடராசன் அவர்களுடன் பல இலக்கிய மேடைகளில் இருந்தவர் அவரது மகன் முனைவர் ந. அருள் அவர்களுடனும் நட்பு உண்டு.  ஆக மூன்று தலைமுறையை அறிந்தவர் என்பதால் இந்நூல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. 

 நூலில் உண்மை உள்ளது.  இந்திரன், சந்திரன் என்று துதி பாடாமல் உள்ளது உள்ளபடி சான்றுகளுடன் நிறுவி பதமஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் தமிழ்ப்புலமையை ஆற்றலை உயர்ந்த பண்பை புலப்படுத்தி உள்ளார்.

வரலாறு தொடங்கி தமிழ்த்தொண்டு வரை நூலில் உள்ளது.  நூலிலிருந்து சிறு துளிகள்.  “திருவண்ணாமலை மாவட்ட்த்தைச் சேர்ந்த செய்யாற்றில் ஔவை துரைசாமி – உலகாம்பாள் இணையரின் மூன்றாவது மகனாக 24-04-1936இல் ஔவை நடராசன் பிறந்தார்.  அவருடன் பிறந்த ஆண்மக்கள் அறுவர் ; பெண்மக்கள் நால்வர், ஆண்மக்களுள் இருவர் பிறந்த சில நாட்களிலேயே இறந்து போயினர் ; பாலகுசம், திருஞானசம்பந்தன், நெடுமாறன் ஆகியோரும் மறைந்தனர்.  இப்போது ஆண்மக்களுள் திருநாவுக்கரசு, மெய்கண்டான் ஆகியோரும் பெண்மக்களுள் மணிமேகலை திலகவதி , தமிழரசி ஆகியோரும் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்”.

நூலின் நாயகர் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் பற்றி எழுதும் போது அவர் எங்கு பிறந்தார்? பெற்றோர் யார்? உடன்பிறந்த சகோதர சகோதரி என எல்லா விபரங்களும் சேகரித்து பாங்குற பதிவு செய்துள்ளார்.  அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தி பின் அதனையே நூலாக்கி வடித்துள்ளார். பேசிய உரையை கட்டுரையாக வடிக்கும் உத்தி நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு கைவந்த கலை.  அக்கலையால் மலர்ந்த சிலையே இந்நூலாகும்.

முனைவர் ஔவை நடராசன் அவர்கள் தம் பணிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார் ஆகிய மூன்று முதல்வர்களை கண்டவர், மூவரிடமும் இசைந்து நின்று பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்-தக்கது.

மூன்று முதல்வர்களுடன் இசைந்து நின்று பணியாற்றியதே அளப்பரிய சாதனை தான்.  அதிசயம் தான்.  இதுபோன்ற பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.

ஔவை நடராசன் அவர்கள், மனைவியை மதிக்கும் பாங்கு நூலில் உள்ளது.  "தாராவுக்கு ஈடாக இன்னொரு பெண்மகளை நான் காண முடியவில்லை.  தாராவைப் போல நூறு பேர் இருந்தால் தமிழகம் முழுவதும் மாற்றங்கள் பெற்று விடும்."இப்படி மனைவியை மனதாரப் பாராட்டி உள்ளார்.

பொருத்தமான திருக்குறளை தேர்வு செய்தமைக்கு எம்.ஜி.ஆர். பாராட்டிய நிகழ்வு. இப்படி நிகழ்வுகள் நூலில் உள்ளன.

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களுக்கு, கர்ணனுக்கு கவச குண்டலம் போல நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று கூறி அவர்து நகைச்சுவைகளையும் விளக்கி உள்ளார்.

சங்க இலக்கியங்களில் வரும் 41 பெண்பாற் புலவர்கள் பற்றி ஔவை நடராசன் அவர்கள் தொகுத்து எழுதிய விளக்கங்கள் நூலில் உள்ளன.

சங்க இலக்கியப் பாடல்களின் விளக்கம் ஒப்பீடு என ஔவை நடராசன் அவர்களின் ஆய்வு நூல்களை ஆய்வு செய்து கனிச்சாறாக வழங்கி உள்ளார்.  ஔவை நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் என்ற போதும் தமிழின் சுவைக்காக கம்ப இராமாயணத்தையும் ஆய்வு செய்து நூலில் வடித்துள்ள விதத்தை மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார்.  கம்பர் காட்டும் மந்தரை, கம்பர் காட்டும் குகன் என்று கம்பரின் பாத்திரப் படைப்புகளின் சிறப்பை, சிறப்பியல்பை எடுத்து இயம்பிய விதத்தை எழுதி உள்ளார்.

வள்ளலார் பாடிய பாடல்களை மேற்கோள் காட்டி ஔவை நடராசன் வடித்திட்ட இலக்கிய விருந்தின் சிறப்பை விளக்கி உள்ளார்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமையின்றி வாழ்ந்த மகாகவி பாரதியார் பற்றி ஔவை நடராசன் அவர்கள் காட்டிய இலக்கியச் சோலையை நமக்குக் காட்சிப்படுத்தியது சிறப்பு. பாரதியாரின் ஆங்கிலப் புலமையையும் பாராட்டி உள்ளார்.  பாரதியார் பன்மொழி அறிஞர். அதனால் தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்குமில்லை" என்று பாட முடிந்தது.

அடுக்குமொழி உரையால் அடித்தட்டு மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அறிஞர் அண்ணாவைப் பற்றி ஔவை நடராசன் அவர்கள் வசனங்களின் சிறப்பை எடுத்து இயம்பியதை எடுத்துக் காட்டி வடித்துள்ளார்.

வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்க்கு அவர் வாழும் காலத்திலேயே அவரது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகமே அறிந்து கொள்ள வடிக்கப்பட்ட அற்புத நூல் இது.

கருத்துகள்