கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! கனிச்சுவைக்கு நிகரானது இரவியின் கவிச்சுவை! அணிந்துரை ! ‘தமிழாகரர்’ தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் முன்னைத் தகைசால் பேராசிரியர் தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021.





கவிச்சுவை !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !


கனிச்சுவைக்கு நிகரானது இரவியின் கவிச்சுவை!

அணிந்துரை ! ‘தமிழாகரர் தமிழ்த் தேனீ   முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால்  பேராசிரியர்
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை – 625 021.

10.05.2018        

     ‘தமிழ் எங்கள் உயிருக்க் மேல்! என உணர்ச்சி பொங்க முழங்கிடும் 
இரா. இரவி, பன்முகத் திறன்கள் கைவரப் பெற்ற ஓர் ஆற்றல்சால் படைப்பாளி.  ‘ஒன்றே செய்க – ஒன்றும் நன்றே செய்க – நன்றும் இன்றே செய்க – இன்றும் இன்னே (இப்பொழுதே) செய்க! என்னும் ஔவைப் பெருமாட்டியின் வாக்கு, இரவியைப் பொறுத்த-வரையில், இரவியைப் பொறுத்த வரையில் நூற்றுக்கு நூறு பொருந்தி வரும் மெய்யுரை ஆகும்.

  மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ, வசன கவிதையோ, ஹைகூ கவிதையோ வடிவம் எதுவாக இருந்தாலும், ‘எக்கவிதை வாசகர் உள்ளத்தத் தொடுகிறதோ அதுவே கவிதை! என்பது இரவி கவிதைக்கு வகுக்கும் வரைவிலக்கணம். இன்னும் ஒரு படி மேலாக, வாசகர்களின் மனங்களில் நம்பிக்கை நாற்றுகளை நடுவதையே அவர் கவிதைக் கலையின் தலையாய பண்பாகக் கருதுகின்றர்.

 கவலைக்கு விடுமுறையை வழங்கி விட்டு களிப்புடன் வாழ்ந்திட முயற்சி செய்யுமாறும், கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவதை விட்டுவிட்டு கிடைத்த ஒன்றை மதித்து வாழுமாறும் மனித குலத்திற்கு அறிவுறுத்துகின்றார்.  எதிர்காலம் பற்றிய கவலையில் நிகழ்காலத்தை வீணடிப்பதில் இரவிக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

     “இந்த நொடியை, இந்த நிமிடத்தை இனிமையாக்கு,
     இனிமை நாளையும் தொடரும்!“

என வழிகாட்டும் கவிஞர்,

     “இன்றே வாழ்நாளில் கடைசி என்று எண்ணி
     இனி ஒவ்வொரு நாளும் வாழ்ந்து பழக்!

என வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

     இறந்த பின்னும் வாழ விரும்பும் மனிதனுக்குக் கவிஞர் வழங்கிடும் செய்தி இது தான் :

     “இன்றே நன்று செய்து வாழ்வாங்கு வாழ்!
     இரவியின் கருத்தியலில் 

‘வாழ்வாங்கு வாழ்ந்து வருவதும் சாதனை தான் ; 
வாழ்த்தும்படி நாளும் வாழ்வதும் சாதனை தான்!

     வாழ்வியல் மேம்பாட்டிற்கு அடுத்து, இரா. இரவி தம் கவிதைகளில் உயர்த்திப் பிடிக்கும் சிந்தனைகள் மூன்று. அவையாவன :

1.    தன்னம்பிக்கைச் சிந்தனை
2.    பகுத்தறிவுச் சிந்தனை
3.    விழிப்புணர்வுச் சிந்தனை

வணிகவியல் பட்டம் பயின்று பின் வளமான தணிக்கையர் ஆக வேண்டும் என்ற கனவு இளமைப்பருவத்தில் இரவிக்கு இருந்தது. குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அவருக்குக் கல்லூரி வாழ்க்கை என்பதே இல்லாமல் போனது! என்றாலும் – தம் கனவு தகர்ந்திட்ட போதும் – இரவி தளர்ந்திடவில்லை ; மூலையில் முடங்கி விடவும் இல்லை. அஞ்சல் வழியில் வணிகவியல் பயின்றார் ; திட்டமிட்டு உழைத்து, படிப்படியாக வாழ்வில் முன்னேறினார். நூல்கள் படைத்தார் ; ‘கவிமலர் டாட் காம்’ www.kavimalar.com இணையத்தினைத் தொடங்கினார் ; கல்லூரிகளிலும், பல்கலைக்-கழகங்களிலும் தமது ஹைகூ கவிதைகளை பாடமாகப் பரிந்துரைக்கப்படும் அளவிற்கு உயர்ந்தார்.

“ இல்லாததற்காக வருந்துவதை விட்டு விட்டு
     இருப்பதைச் செம்மையாக்குவது சிறப்பு!

எனத் தாம் எழுதிய வரிகளுக்கு அவரே இலக்கணமும் இலக்கியமும் ஆனார்! ‘முயற்சி, பயிற்சி செய்தால் போதும், முன்னோக்கிப் பறக்கலாம், சிறக்கலாம்!என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.

     எதற்கும் ‘ஆமாம் சாமி! என்பதிலோ, ‘கூழைக் கும்பிடு போடுவதிலோ, ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற விரக்தி மனப்பான்மையிலோ, ‘இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்னும் வறட்டுத் தத்துவத்திலோ கடுகளவும் நம்பிக்கை இல்லாதவர் இரவி.  ‘ஏன் என்று கேள்?என்ற ஒரு கவிதை போதும், ஆழ்ந்திருக்கும் அவரது பகுத்தறிவுச் சிந்தனையைப் பறைசாற்றிட.

     “அநீதி எந்த வடிவில் வந்தாலும்
     அதனைத் தட்டிக் கேட்க தயங்காதே!

எனத் தொடங்கும் அக்கவிதை - நியாய விலைக் கடை, அரசு அலுவலகம், திரையரங்கு, குழாயடி, பேருந்துப் பயணம், பொதுப்பணித் துறை, கல்விக் கூடம், மாநகராட்சி, மின் அலுவலகம், கோயில் என எங்கே அநீதி நடந்தாலும், அங்கே சென்று தயங்காது தட்டிக் கேட்குமாறும், ஏன் என்று வெடிப்புறப் பொங்கி எழுமாறும் வலியுறுத்துகின்றது.

     அனைவருக்கும் வாழ்வும் வாய்ப்பும் கிடைத்திட வேண்டும் என விரும்பும் கவிஞர்,

     “மூட நம்பிக்கை நாட்டில் முற்றாக ஒழிய வேண்டும்
     மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்த வேண்டும்!

எனவும் அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்னும் தம் வேட்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

     இன்றைய இளையதலைமுறையினர், ஆசிரியர்களோ, பெற்றோர்களோ திட்டினார்கள் என்றால் – எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் – காதலில் தோல்வி கண்டால் விருட்டென்று தற்கொலை செய்து கொண்டு விடுகின்றனர்.  அவர்களுக்க் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இரவி, ‘எதிர்நீச்சல் போன்றது வாழ்க்கை என்ற கவிதையைப் படைத்துள்ளார்.

     “எதிர்நீச்சல் போன்றது தான் இந்த வாழ்க்கை
     எதிலும் போராடி வென்றிட வேண்டும்!

என அறிவுறுத்தும் கவிஞர், ‘தற்கொலை என்பது என்றும் தீர்வாகாது என்றும், ‘தற்கொலை எண்ணம் என்பது கோழைத்தனம் என்றும், நெஞ்சில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார். ‘அவசரப்பட்டு விட்டாய் அனிதா! என்ற தலைப்பில் படைத்த கவிதையிலும், ‘அனிதாவோடு முற்றுப் பெறட்டும் தற்கொலைஎன்கிறார்.

     இரவியின் உள்ளத்தில் எப்போதும் கொள்கைச் சான்றோர்களுக்கு, மேன்மக்களுக்கு தனி இடம் உண்டு.  வான்புகழ் வள்ளுவர் பெருமான் வகுத்துத் தந்த அன்பு, நாண், ஒப்புறவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து சான்றாண்மைப் பண்புகளுடன் வாழ்ந்து காட்டி, தடம் பதித்த ஆளுமையாளர்களின் சிந்தனைகளை, செல்லும் வகையில் எல்லாம் நினைவூட்டிச் செல்வது இரவியின் தனிப்பண்பு.

     “வாய்மை, நேர்மை, எளிமை மூன்றும் இருந்தால்
     வையகத்தில் நீங்களும் ஆகலாம் கலாம்!
     திருக்குறள் படிப்பதோடு நின்று விடாமல்
     திருக்குறள் வழி வாழ்ந்தால் ஆகலாம் கலாம்!

என மொழிந்திடும் இரவி, ‘பெரியார் போற்றிய பெருந்தமிழர் எனக் காமராசருக்குப் புகழாரம் சூட்டுகின்றார் ;

     “தமிழுக்கு யார் தீங்கு செய்தாலும் உடன்
     தயங்காமல் தட்டிக்கேட்ட நெஞ்சுரம் மிக்கார்!
,
     தூங்கிய தமிழரைத் தட்டி எழுப்பியவர்
     தூங்கும் போதும் தமிழை மட்டுமே நினைத்தவர்!

என மூதறிஞர் தமிழண்ணலைப் போற்றிப் பாடுகின்றார்.

     இரவியின் கண்ணோட்டத்தில் ‘நல்ல தமிழில் வாழ்கிறார் நன்னன்! ; ‘ஆக்ஸ்போர்டில் பிறந்த ஆச்சரியம் ஸ்டீபன் ஹாக்கிங்! ; ‘மனித நேயத்தின் மணிமகுடம் அன்னை தெரசா ; மாமனிதர் எம்.ஜி.ஆர்.,

     ‘என்ன தவம் செய்தேன் தமிழனாய்ப் பிறப்பதற்கு!

எனப் பெருமிதம் பொங்க மொழிந்திடும் இரவி, இத்துடன் அமைதி அடைந்து விடாமல்,

     “தேமதுரத் தமிழோசை உலகெலாம ஒலிக்கின்றது
     தமிழகத்தில் ஒலிக்கின்றதா? சிந்தியுங்கள் தமிழர்களே!

எனத் தமிழர்களைச் சிந்திக்கத் தூண்டுவது குறிப்பிடத்தக்கது.

     “ஈழத் தமிழர்கள் நூலில் வருகிறது நல்ல தமிழ்
     இங்குள்ள தமிழர் நாவில் வர மறுப்பதேன்?

எனப் பொட்டில் அடித்தாற் போல் கேள்விக் கணையினைத் தொடுக்கவும் தவறவில்லை இரவி!

     “செந்தமிழ் நாட்டில் நாளும் ஊடகத்தில்
     செந்தமிழ்க் கொலை நடப்பது முறையோ?

என வினவிடும் கவிஞர்,

     “தமிங்கில உரைக்குத் திரை இடுவோம்!
     தமிழைத் தமிழாகப் பேசி மகிழ்ந்திடுவோம்!

என்று செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதற்கான வழிவகையினையும் எடுத்துரைக்கின்றன. ‘எங்கும் தமிழுக்குத் தடை இல்லை! என்ற நிலை உருவாகிட வேண்டும்! என்றும் வலியுறுத்துகின்றார்.

     “தமிழின் ஆளுமையை உலகம் அறிந்தது ;
     தமிழின் ஆளுமையை தமிழன் அறியவில்லை

என்பதே கவிஞரின் கவலை, வருத்தம்.

     புதுநெறி காட்டிய புலவரான பாரதியாரின் தாக்கம் இரவியின் படைப்பாளுமையில் அழுத்தமாகவும் ஆழமாகவும் படிந்திருக்கக் காண்கிறோம்.  ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவது உண்டோ? என சிவசக்தியிடம் வேதனை மீதூர வினவினார் பாரதியார். அவரது அடிச்சுவட்டில் இரவியும்,

     “நல்லதோர் வீணை நம் பெண்குழந்தை
     நலங்கெடப் புழுதியில் எறிவது முறையோ?

எனக் கேள்விக் கணையினைத் தொடுத்துள்ளார்.  ஆண் குழந்தையை வரவு என்றும், பெண் குழந்தையைச் செலவு என்றும் அறிவிலித்தனமாகப் பேசுவதை முதலி நிறுத்தி, கள்ளிப்பால் ஊற்றும் கொடுமையை ஒழித்துக் கட்டி,

     “கனிவோடு பெண் குழந்தையை வளருங்கள்!

என அறிவுறுத்துகின்றார் கவிஞர். அவரது கருத்தில், ‘வயிற்றில் இருந்து வந்த தேவதை மகள் ; வையத்தின் மகிழ்வை உணர்த்துபவள் மகள்!

     “ஆண் படித்தால் அவனுக்க் மட்டுமே நன்மை
     பெண் படித்தால் இரு குடும்பத்திற்கு நன்மை

எனப் பெண் கல்விக்காகக் குரல் கொடுக்கும் கவிஞர்,

     “பெண்கள் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்யவும்
     பயமாக உள்ளது பேதலித்து விடுவோம்!

எனப் பெண்ணின் பெருமையை வியந்து பேசுகின்றார்.

     “சமையல் அறையில் முடங்கிக் கிடந்தது போதும் பெண்ணே,
     சாதிக்கப் பிறந்தவள் நீ, புயலெனப் புறப்படு பெண்ணே?

எனப் பெண்ணினத்தின் எழுச்சி குறித்துப் பாடுகிறார்.

     தமிழ்ப் பதிப்புலகில் தடம் பதித்த வானதி பதிப்பகத்தின் சார்பில் வெளிவரும் கவிஞர் இரா.இரவியின் 18-ஆவது நூல் இது! இம்மியளவும் கைம்மாறு கருதாது, இயன்றவரை ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், இமைப்பொழுதும் சோராமல் இயங்கி வரும் கெழுதகை நண்பர் இரவிக்கு இன்னும் பல உயர்வுகளும் பரிசுகளும் விருதுகளும் வந்து சேர வேண்டும் என உளமார வாழ்த்துகின்றேன்! அசைவிலா ஊக்கம் உடைய அவருக்கு ஊக்கம் வழி கேட்டுக் கொண்டு சென்றடையும் எனவும் உறுதியாக நம்புகின்றேன்!

கருத்துகள்