விற்பனைப் பூக்கள்! பாகம் 2. நூல் ஆசிரியர் : கவிஞர் எழில்வேந்தன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




விற்பனைப் பூக்கள்!  பாகம் 2.

நூல் ஆசிரியர் : கவிஞர் எழில்வேந்தன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை, 
வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 96, விலை : ரூ. 100
******
      ஓவியா பதிப்பகம் உரிமையாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்கள் பதிப்புரை நன்று.  திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ், இசைஅமைப்பாளர் சிறீகாந்த் தேவா, திரைப்படத் தயாரிப்பாளர் ராசராசா, இசைஅமைப்பாளர் குரு கல்யாண், முனைவர் பால இரமணி, இயக்குனர் ராம. தயாநந்தன், வழக்கறிஞர் சிட்பஞ்சரம், தமிழ்செல்வி அமுல்ராஜ், துணை இயக்குநர் (ஓய்வு), திருவாரூர் எம்.என். செல்வராஜ், குறும்பட இயக்குநர்கள் பாபு தூயவன், ஆரணன் ரெத்னம், பாடலாசிரியர் சீர்காழி சிற்பி, தீராணி உ. மணி, கவிஞர் தமிழமுதன் ஆகியோரின் அணிந்துரை, வாழ்த்துரை நன்று.  

(அடுத்த பதிப்பில் தவிர்த்திடுங்கள் அணிந்துரை 13 பேரை குறைத்திடுங்கள்).

      நூலாசிரியர் கவிஞர் எழில்வேந்தன் அவர்கள் திரைப்படப் பாடலாசிரியராக இருந்து பாடல்கள் எழுதி உள்ளார், எழுதி வருகிறார், பாராட்டுகள்.  விற்பனைப் பூக்கள் பாகம் 2, இந்த நூல் முழுக்க முழுக்க விலைமகள் பார்வையில் தான் ஒரு பெண்ணாக மாறி அந்தப் பெண்ணின் மனநிலையிலேயே கவிதைகள் வடித்துள்ளார். வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்.

      விலைமகளின் மனவலியை கவிதைகளில் வடித்துள்ளார்.  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.  யாரும் பாட அஞ்சிடும் கருப்பொருளில் பாடி இருக்கும் நூலாசிரியர் கவிஞர் எழில்வேந்தன் அவர்களின்  துணிவிற்கு பாராட்டுக்கள்.

      அகநானூறு, புறநானூறு என்பதன் பொருள் அகம் பாடியது, புறம் பாடியது என்று அறிவோம். நூலாசிரியர் கவிஞர் எழில்வேந்தன் கூறும் புறநானூறு வேறு.

      புறம் + நான் + ஊறு = புறநானூறு !

      புறத்தை 
      நான் 
      துறந்து 
      ‘ஊறு செய்வதால்
      நானும் 
      புறநானூற்றுப் பெண் தான்!

      வரதட்சணை வாங்கிடும் கொடிய பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக வடித்த கவிதை நன்று. ஒப்பீடு சிறப்பு.

நீ ?

அவளிடம் பணம் கொடுத்து 
அவளை அடைந்தால்
அவள் விபச்சாரியாம் 
அவள் உன்னிடம்
பணம் கொடுத்து 
அவளை நீ அடைந்தால்
அவள் மனைவியாம் 
அப்படியென்றால்
நீ ?

சங்கம் இல்லாத சாதியே இல்லை என்றானது.  எல்லா சாதிக்கும் சங்கம் உண்டு, சண்டையும் உண்டு, ஒவ்வொரு சாதிக்கும் பல  சங்கங்கள் என்றானது இன்று.

சங்கம் !

சாதிகளுக்கெல்லாம் 
சங்கம்!
எங்களுக்கு 
நீதி வழங்க 
ஒரு சங்கமும்
இல்லையா ?

விலைமகளுக்கு நீதி வழங்கிட ஒரு சங்கம் வேண்டுமென்று குரல் கொடுத்துள்ளார். பிழையாய்ச் செய்வதில் கவனம்!

மிருகங்கள் கூட 
கலவியை 
சரியாய்ச் செய்கிறது
      ஆனால் 
ஆறறிவு மனிதனோ 
கலவியைப்
      பிழையாய்ச் செய்வதிலேயே 
கவனமாக
      இருக்கிறான் !

உண்மை தான், பசு, மாடு, சினை என்று முகர்ந்து அறிந்து விட்டால் காளை மாடு பசுவைத் தொடுவதே இல்லை. இத்தகைய ஒழுக்க அறிவு மனிதர்களுக்கு இருப்பதில்லை என்பது உண்மை தான்.

எவராவது வருவீரா ?

      மண் தின்கின்ற உடலை 
      மனிதன் 
      தின்னச் செய்து விட்டேன்!
      மனதை மட்டும் 
      மாசற்ற மாளிகையில் குறைத்து
      வைத்துள்ளேன் 
      மனம் திறந்து கேட்கிறேன் !
      என்னை எவராவது 
      மனை முடிக்க வருவீரா?

முற்போக்கு பேசும் முற்போக்குவாதிகளும், விலைமகளை மணக்க முன்வருவதில்லை. சமுதாயத்தின் நாட்டு நடப்பை கவிதையால், வடித்த விதம் அருமை.

சிறந்த பரிசு !

காமுற்ற ஆண்களால் 
எங்களுக்கு வழங்கப்படும்
      சிறந்த பரிசு 
'எய்ட்சு' மட்டுமே!

ஒருவனுக்கு ஒருத்தி என்று தமிழ்ப்பண்பாட்டுடன் ஒழுக்கமாக வாழ்ந்து வந்தால் உயிர்க்கொல்லி நோய் எய்ட்சு வரவே வராது. விலைமகளுக்குப் பரிசாக எய்ட்சு நோயை ஆண்களே தருகின்றனர் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார். 

நேசம்! 

உடம்பை மட்டும் நேசிப்பவனுக்கு !
      மனதை நேசிக்கத் தெரியுமா?

நூல் முழுவதும் சில கேள்விகள் கேட்டு படிக்கும் வாசகர்களைச் சிந்திக்க வைத்துள்ளார், பாராட்டுக்கள்.

ஒன்று தான் 
தந்தை மகன் 
தாத்தா பேரன்
      எவராயிருந்தால் என்ன? 
எனக்கு
      எல்லாமே ஒன்று தான்!

வயது பேதமின்றி பணம் தரும் அனைவருக்கும் சிற்றின்பம் வழங்கிடும் விலைமகள் மனநிலையிலேயே சிந்தித்து கவிதைகள் வடித்துள்ளார். எந்தவித பேதம் பார்க்காத சமத்துவவாதி விலைமகள் என்கிறார்.

அசைவம் – சைவம்!

அசைவமாய் 
என்னைக் 
கடித்துக் குதறுபவன்
      சைவமாய்!

ஆண்களில் சைவம் என்றாலும் அசைவம் என்றாலும் கலவியில் அனைவருமே அசைவம்தான் என்று கவிதையில் வடித்தது முற்றிலும் உண்மை.

சாயம் – காயம் !

உதட்டுச் சாயம்
      பார்ப்பவனுக்கு 
உள்ளத்தின் காயம்
      புரியவாப் போகிறது!

புற அழகை ரசிப்பவர்கள் பெண்ணின் அக வலியை உணர்வதில்லை. ஒவ்வொரு விலைமகளுக்குப் பின்னும் மிகப்பெரிய சோகம் உள் இருக்கும். யாரும் மனம் விரும்பி இத்தொழிலுக்கு வருவதில்லை. மனம் கனத்தே வருகின்றனர். விலைமகளின் மன உணர்வை நூல் முழுவதும் கவிதைகளால் உணர்த்தி உள்ளார். 

போராடுவோம்! 

வாழும் வரை 
போராடுவோம்
      தினம் தினம் வாழ!

வாழ்க்கையில் போராட்டம் எல்லோருக்கும் உண்டு.  ஆனால் விலைமகளுக்கு வாழ்க்கை முழுவதுமே போராட்டம் என்று கவிதைகள் மூலம் உணர்த்தி உள்ளார்.

படைப்பாளியாக வெற்றி பெறுகின்றார். விரும்பி யாரும் விலைமகள் ஆவதில்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை, வறுமை என பல்வேறு காரணங்கள். மொத்தத்தில் விலைமகளானது விலைமகள் குற்றமன்று.  அவளுக்கு மனிதாபிமானத்துடன் உதவி செய்யாத ஒட்டுமொத்த சமுதாயத்தின் குற்றம் என்பதை உணர்த்தி உள்ளார் நூலாசிரியர் கவிஞர் எழில்வேந்தன். பாராட்டுக்கள்.   
*
.

கருத்துகள்