எல்லோரும் நலம் வாழ ! ஏர்வாடியாரின் சிந்தனைகள் ! தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.





எல்லோரும் நலம் வாழ !

ஏர்வாடியாரின் சிந்தனைகள் !

தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் 
இரா. மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.



வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கம் : 270, விலை : ரூ. 170.

******
      " எல்லோரும் நலம் வாழ்" நூலின் தலைப்பு புகழ்பெற்ற பாடலை நினைவூட்டியது.  வாழும் காலத்திலேயே படைப்பாளிக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளைச் செய்துவிட வேண்டும்.  மகாகவி பாரதிக்கு இதுபோன்ற சிறப்புகளைச் செய்து இருந்தால் 39 வயதில் அவன் இறந்திருக்க மாட்டான்.

      ஏர்வாடியார் அவர்கள் பண்பாளர், இனியவர், பாரத மாநில வங்கியில் தணிக்கை அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி உழைத்து வருபவர்.  ‘கவிதை உறவு’ என்ற மாத இதழை பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றார்.  ஆண்டுதோறும் ஆண்டு விழா வைத்து சிறந்த நூல்களுக்குப் பரிசும், சான்றோர்களுக்கு விருதும் வழங்கி வருகிறார். 

 மாத இதழ் நடத்துவது என்பது நெருப்பாற்றலில் எதிர்நீச்சல்  போடுவது போலாகும். படைப்பாளியாகவும் இருந்து, ஏழாம்பக்காம் கவிதையும், மனத்தில் பதிந்தவர்கள் பகுதி, நூல் மதிப்புரை என்று எழுதி வருபவர். சகலகலா வல்லவர்.

      இவரது நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து பழச்சாறாக தேன்விருந்தாக வழங்கி உள்ளார் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள்.  மற்றவர்களைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் இல்லாத கடைவள்ளல் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள். 

 இந்த நூலிற்கு வைத்த மகுடமாக முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் அணிந்துரை உள்ளது.  அணிந்துரை-யிலிருந்து சில துளிகள்.

      “பேராசிரியர் மோகன் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் ; பெரும்பாலும் எழுதுபவர்கள் அடுத்தவர் எழுத்தைக் கொண்டாடுவது அரிது. ஆனால் மோகன் அவர்கள் இந்தப் பணியை இடைவிடாமல் செய்து வருகிறார். அரிய செய்திகளைத் திரட்டி வந்து தேன்கூடாக்கித் தரும் இலக்கியத் தேனீ அவர். எண்ணற்ற நூல்களைத் தொகுத்துக் கொண்டே வரும் இடைவிடாத உழைப்புக்குச் சொந்தக்காரர்.

      தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் மு.வ. கருவூலம், ஜெயகாந்தன் சிந்தனைகள், நாள் ஒரு சிந்தனை, குலோத்துங்கன் பண்ணையில் கொய்த கதிர்கள், இறையன்பு களஞ்சியம் ஆகிய வரிசையில் ஆறாவது தொகை நூல் இது. பாராட்டுக்கள்.

      படைப்பாளி படைக்கும் போது தோன்றாதவைகள், திறனாய்வாளர்கள் மேற்கோள் காட்டும் போது பெருமிதமாக இருக்கும்.  மேலும் மேலும் நன்றாக எழுதுவதற்கு ஊக்கம் தரும் விதமாக இருக்கும்.  இந்த நூல் ஏர்வாடியாரை நூற்றாண்டுகள் வாழ வைக்கும். வாசகனாகப் படிக்கும் நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி. படைப்பாளியான ஏர்வாடியாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.  இன்னும் பல படைப்புகள் ஏர்வாடியாரிடமிருந்து வருவதறு கதவுகளைத் திறந்து விட்டுள்ளது இந்நூல்.

      சூரியன் போல் வாழ்க! என கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் வாழ்த்துக்கவிதை வழங்கி உள்ளார்.

      அனுபவக் கீற்றுகள் என்று தொடங்கி உதிரிப்பூக்கள் வரை குறிஞ்சி மலர் போல 12 தலைப்புகளில் பகுத்து, வகுத்து தொகுத்து வழங்கி உள்ளார்.

      அம்மாவின் அறிவுரை !

      “உனக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதன்படி நடந்து கொள்” என்று ஏர்வாடியாரின் அம்மா அவர்கள் சொன்ன இந்த மந்திரச்சொல் ஏர்வாடியாரின் வெற்றிக்கு வித்தாக இருந்துள்ளது என்பதை உணர முடிந்தது. 

 கலைஞானி கமலகாசனுக்கு அவரது அம்மா “கழிவறை சுத்தம் செய்தாலும் உன் அளவிற்கு வேறு யாரும் சுத்தம் செய்ய முடியாது என்கிற அளவிற்கு பெயர் எடு” என்று சொன்ன சொல் தான் அவரது திரையுலக வெற்றிக்கு மந்திரச்சொல்லாக அமைந்தது. 

அது என் நினைவிற்கு வந்தது.  ஒன்றைப்படிக்கும் போது அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வருவது தான் நூலின் வெற்றி.

      ஏர்வாடியாரின் வாழ்க்கையில் நடந்த சுவையான பல நிகழ்வுகள் நூலில் உள்ளன.

      மனைவியின் மீது குறைப்பட்டுக் கொள்ளும் கணவன் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் இது.
  “எல்லோருக்குமே இறைவன் நல்ல மனைவியைத் தான் தருகிறான்.  நம்மில் எத்தனை பேர் நல்ல கணவனாய் அவர்களுக்கு அமைகிறோம்? உண்மை தான். நல்ல கணவனாக இருந்து கொண்டு தான் நல்ல மனைவியை நேசிக்க வேண்டும்.

      “நான் எழுதுகிறவற்றுள் எனக்கு இதம் சேர்ப்பது கவிதை தான்”. உண்மை தான், அதனால் தான், தான் நடத்தும் இதழுக்கு கவிதை உறவு என்று பெயர் சூட்டி கவிதை இதழாகவே நடத்தி வருவது தனிச்சிறப்பு.  பல கவிதை இதழ்கள் காணாமல் போய் விட்டன.

      கையே இல்லை என்பதை விடவா
      கையில் இல்லை என்கிற கவலை?

உண்மை தான்.அப்பன் சொத்துத் தரவில்லை, வசதி இல்லை என்று வருத்தப்படும் கோடி மக்களுக்கு ஆறுதல் தரும் வைர வரிகள் நன்று .நல்ல சிந்தனை .ஏர்வாடியார் நேர்மையான மனிதர் .நேர்மையாகவே எப்போதும் சிந்திப்பவர் .சிந்தனைக்கு களஞ்சியமாக விளங்குபவர் .அவரது சிந்தைனையின் மேன்மைகளைத் தொகுத்து நூலாக வழங்கி உள்ள தமிழ்த் தேனீயாருக்கு   பாராட்டுக்கள் .

“நல்ல மனிதனாக இல்லாமல் 
நல்ல கவிஞனாக இருந்து என்ன பயன்? 

இதைத்தான் மகாகவி பாரதியார் "கவிதை எழுதுபவன் கவிஞன் அல்லன், கவிதையாகவே வாழ்பவனே கவிஞன். " என்றார்.

      வெற்றி வெறும் நிகழ்ச்சி தான்
      தோல்வி தான் நல்ல அனுபவம்.

      தோல்வியில் துவண்டுள்ள உள்ளங்களின் காயத்திற்கு மருந்து போடும் வைர வரிகள்.

      கவிதைக்கு பொய் அழகு
      கவிஞனுக்கு பொய் அழிவு!

      உண்மை தான். ஒரு கவிஞன் ஊருக்கு உபதேசம் என்று வாழாமல் எழுதியபடி நேர்மையாளனாக, உண்மை பேசுபவனாக இருக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்திடும் வைர வரிகள். 

 நம்மை செம்மைபடுத்திக்கொள்ள உதவிடும் உன்னத நூல்.  ஏர்வாடியாருக்கும் தமிழ்த்தேனீக்கும் பாராட்டுக்கள்.  நூலினை தரமாக பதித்துள்ள வானதி அதிபர் மதிப்புறு முனைவர் இராமநாதன் அவர்களுக்கும்  பாராட்டுக்கள். 

ஏர்வாடியாரின் சிந்தனைகள்  எனும் களஞ்சியத்திலிருந்து வைரம்,   முத்து,  பவளம்   என்று தேர்ந்தெடுத்து வாழ்வியல் சிந்தனை கற்பிக்கும்  நவரத்தின மாலை செய்துள்ளார் தமிழ்த்  தேனீயார் .

 வானதி பதிப்பகம் , தமிழ்த்தேனீ இரா.மோகன், ஏர்வாடியார் என வெற்றிக்கூட்டணி அமைத்து தரமான நூல்களாக வருகின்றன.வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன.மூவருக்கும் பாராட்டுக்கள் 

கருத்துகள்