கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




கவிதை வெளியினிலே !
 
நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் 
தமிழ்த்தேனீ இரா. மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  
பக்கம் : 130, விலை : ரூ. 130
!

******
      சொற்கள் நடந்தால் வசனம். சொற்கள் நடனமாடினால் கவிதை. இலக்கியத்தில் கதை, கட்டுரை இவைகளை விட  கவிதைக்கு முதலிடம் என்றுமுண்டு.  கவிதையைப் படைப்பதே ஒரு சுகம்.  பரவசம் தரும். பண்படுத்தும். ஆற்றுப்படுத்தும். ஆவேசமும் படுத்தும். அத்தகைய ஆற்றல் கவிதை வடிவிற்கு உண்டு.  கவிதை வெளியினிலே என்ற இந்த நூலில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என முக்கவிதையும் உள்ளன.

                நூலில் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் என்னுரையிலிருந்து சிறு துளிகள் இதோ :

      “இலக்கிய இமயம் ஞானபீட விருதாளர் ஜெயகாந்தன் தொடங்கி இன்றைய ஹைக்கூ கவிஞர் இரவி வரையிலான பதினாறு பேரின் கவிதை உலகு பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்”.

      இலக்கிய இமயம் ஜெயகாந்தன் தொடங்கி இலக்கிய மடு இரா. இரவி வரை 16 படைப்பாளிகளின் கவிஞர்களின் கவித்திறன் எடுத்து இயம்பி உள்ள நூல். பதினாறு பேருக்கும் இலக்கியத்தேனீ சூட்டியுள்ள இலக்கிய மகுடமே இந்நூல்.

      ஒரு படைப்பாளி படைப்புக் குறித்துப் பாராட்டு கிடைக்கும் போது தான் பரவசம் அடைகிறான்.  இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற ஊக்கம் அடைகிறான். படைப்பாளிகளுக்கு தந்துள்ள ஊக்க மருந்தாக உள்ளது நூல். ஜெயகாந்தன், குலோத்துங்கன் போன்றோர் காலம் சென்று விட்டாலும் அவர்களது படைப்பாற்றலை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்து இயம்பும் விதமாக நூல் உள்ளது.

      நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் 140 நூல்களைத் தாண்டி விரைவில் 150 எட்ட உள்ளார்.  ஒரு நூல் எழுதுவது ,வெளியிடுவது   என்பது ஒரு பிரசவத்திற்குச் சமம்.  140 நூல்கள் எழுதுவது என்பது சாதாரணமன்று.  சாதனை தான்! பேச்சு, எழுத்து என்ற இருவேறு உலகிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். எந்த ஒரு படைப்பாளியையும் காயப்படுத்தியதே இல்லை. 

 நீரைப் பிரித்து பாலை மட்டும் அருந்தும் அன்னப்பறவை போலவே நூலில் உள்ள நல்லவையை மட்டும் எடுத்து இயம்புவார், அல்லவரி இருந்தால் அறவே தவிர்த்து விடுவார்.  சிறந்த பண்பாளர்.  இன்முகத்திற்கு சொந்தக்காரர்.  யாரிடமும் கோபம் கொள்ளாதிருப்பது இவரின் தனிச்சிறப்பு.  வெற்றியின் ரகசியமும் ஆகும். 

 முந்தைய தலைமுறை எழுத்தாளர் ஜெயகாந்தன் படைப்பை இன்றைய இளைய தலைமுறைக்கும் அறிமுகம் செய்துள்ள அரிய பணிக்கு பாராட்டுக்கள். 

      கையேயி கெட்டவள் அல்லள் 
      கூனி கூட கெட்டவள் அல்லள்
      காடு வரை போனவனைப் 
      பாதி வழி போய் மறித்துப்
      பாதுகையைப் பறித்து வந்தான் 
      பரதனே பாவி!

வித்தியாசமான சிந்தனை! இந்தக் கோணத்தில் யாருமே சிந்தித்து இருக்க மாட்டார்கள். இலக்கிய இமயம் ஜெயகாந்தன் எல்லோரும் போல் சிந்திக்காமல் வித்தியாசமாகவே சிந்தித்து எழுதியதால் தான் அவர் வெற்றி அடைந்தார்.  மகாகவி பாரதியாரின் குறும்பா பற்றிய கட்டுரையும் நூலில் உள்ளது.  எள்ளல் சுவையுடன் பல குறும்பாக்கள் எடுத்து இயம்பி விளக்கி உள்ளார்.

      கவிஞர் குலோத்துங்கன் அவர்களின் கவித்திறன் பற்றிய கட்டுரையும் சிறப்பு.

      உழைப்பறியா வாழ்வுதனில் உயிர்ப்பொன்று இல்லை ;
      உள்ளத்தினல் ஏணியுளர் உயர்வர்.

இந்த இரண்டு வரிகளை இன்றைய இளையதலைமுறையினர் தாரக மந்திரமாகக் கொண்டால் வாழ்வின் சிறப்படையலாம்!

      நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள் இந்த நூலில் 16 கட்டுரைகள் வடித்துள்ளார்.  ‘பதினாறும் பெற்றும் பெருவாழ்வு வாழ்க’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப இந்நூல் படித்தால் கவிதை எப்படி எழுத வேண்டும் என்ற புரிதல் ஏற்படும்.  படைப்பாளிகளுக்கான பயிற்சி நூல் இது.  வாசகர்களுக்கு வாழ்வியல் கற்பிக்கும் நூல் இது.

      கவிதை உறவு என்ற மாத இதழை பல்லாண்டுகளாக நடத்தி வரும் கலைமாமணி ஏர்வாடியார் பற்றிய கட்டுரை மிக நன்று.

      “கவிஞர்கள் 
      யாப்பில் பிழை செய்யக்கூடும்
      யாரையும் 
      ஏய்த்துப் பிழைப்பதில்லை!
      கவிஞர்கள் பயன்படுகிறவர்கள் 
      யாருக்கும்
      பயப்படுகிறவர்கள் அல்லர்.”

ஒரு கவிஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக எழுதியுள்ள ஏர்வாடியாரின் கவிதை மிக நன்று.  நேர்மையாளனாக இருக்க வேண்டும் என்பதே கவிஞன் இலக்கணம்.

      ஒவ்வொரு கட்டுரையும் ஆரம்பிக்கும் போது அதற்கு தொடர்புடைய சான்றோர்கள் சொன்ன பொன்மொழியோடு தொடங்கி, தொடுப்பு, எடுப்பு, முடிப்பு அனைத்தும் சிறப்பு.

      வளரும் கவிஞர் பிருந்தா சாரதி பற்றிய கட்டுரையும் மிக நன்று.
      நீ வரும் வரை தான் 
      அது பேருந்து 
      பிறகு விமானம் !

      காதலர்களின் மனநிலையை இன்பத்தை பரவசத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று.

      வல்லம் தாஜ்பால் கவிதை ஒன்று.

      பதவிப்பசி  
      புல் தின்றது 
      புலி !

      இன்றைய அரசியல் நிலையைப் படம் பிடித்துக் காட்டியது.

      அவ்வை நிர்மலா அவர்களின் கவிதை பெண்ணுரிமை பேசுகின்றது.  பாருங்கள்.

      விரும்பிய வாழ்வை யான் தேர்ந்தெடுக்கும்
      உரிமை பெண் எனக்கு இல்லையோ சொல்வீர்!

விஞ்ஞானி நெல்லை அ. முத்து அவர்களின் கவிதை ஒன்று.

      நின்றாலும் நடந்தாலும் சிங்க ஏறு!
      நெருப்பாகும் அவன் கவிதை தங்கச் சாறு!

      கவிஞர்  மா.உ. ஞானவடிவேல் கவிதை ஒன்று.
      என் கவிதை 
      என்னை வளர்க்கும் தாய் ; அவளை
      எந்நாளும் கடுக்கமப்பேன் 
      நான் ... நான் !

      கோவையின் பெருமைகளிளல் ஒன்றாகிவிட்ட சிந்தனைக் கவிஞர் கவிதாசன் கவிதை நன்று.,மாமனிதர் அப்துல் காலம் பற்றிய நூலினைத் தொகுத்தவர் .எனது கட்டுரையும் அந்த நூலில் இடம்பெறச் செய்தவர் 

      முடங்கிக் கிடந்தால் 
      சிலந்தியும் 
      உனைச் சிறைபிடிக்கும்
      எழுத்து நடந்தால் 
      எரிமலையும்  
      உனக்கு வழிகொடுக்கும்!

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பெயர் இன்றியே முக நூலில் இக்கவிதை வலம் வருகின்றது. தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். சுறுசுறுப்பைக் கற்பிக்கும் சிறப்பான கவிதை.

      என்னுடைய 17வது  நூலான "ஹைக்கூ உலா " விற்கு வழங்கிய அணிந்துரையும் நூலில் இடம் பெற்றுள்ளது.

      தந்த அணிந்துரைகளையும், கவிதை உறவு மாத இதழில் எழுதி வரும் கவிதை அலைவரிசையையும் தொகுத்து நூலாக்கி கவி விருந்து படைத்துள்ளார்கள்.  பாராட்டுக்கள்.கவிதை நந்தவனத்தில் உலவி வந்த உணர்வைத்  தந்தது .,குடத்து விளக்காக   இருந்த என் போன்ற படைப்பாளிகளை, குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார் .நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். 

கருத்துகள்