எல்லோரும் நலம் வாழ ! ஏர்வாடியாரின் சிந்தனைகள் ! தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் பேராசிரியர்; இராம. குருநாதன் !





எல்லோரும் நலம் வாழ !

ஏர்வாடியாரின் சிந்தனைகள் !

தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !

நூல் விமர்சனம் பேராசிரியர்; இராம. குருநாதன் !


 வானதி பதிப்பகம்,  23.தீனதயாளூ தெரு, தி.நகர்.சென்னை 17. விலை  ரூ 170.


இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே' என்ற புறநானூற்றின் தொடர், வாழ்க்கையில் இனிமையைப் போற்றவேண்டும் என்னும் உளக்கிடக்கையின் உயர்ந்த நெறியை முன்வைக்கிறது. இன்பமும் துன்பமும் மாறி மாறிவரும் சூழல் உண்டெனினும், இனிமையை ரசிக்கவும் வேண்டும், துன்பத்தை உற்றுநோக்கி அதன் உண்மைத் தன்மையை உணர்ந்துகொள்ளவும் வேண்டும். எனினும், இன்பமயமானது வாழ்க்கை என்ற எண்ணம் இதயத்தில்  ஏற்றம் பெற்றிருக்குமானால், வசந்தம் நம் வாழ்க்கைக்கு வரவேற்பு வளையம் வைக்கும். 'வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நம்மை சுயச்சிந்தனைக்கு உள்ளாக்கிக்கொள்ளும்போது இனிமை காண்பதே இலட்சியமாக இருக்கவேண்டும்' என்பார் நார்மன் வின்செண்ட் ஃபீல். உலக அளவில் மிக அதிகமாக விற்றுப் பரவலாக அறியப்பட்ட  'தி பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங்க்' என்னும்   நூலில் இவ்வாறு அவர் சுட்டியுள்ளார்.



வாழ்வின் பல்வேறு நிலைகளைச் சுருக்கமான கருத்துகளால் சொல்லும் தொகுப்பு நூலுக்கு  இலக்கிய வரலாறே உண்டு."Glimpses", "Quotable Quotes" என்ற  நிலையில் அதனை ஒரு வகைமை யாக (genre)மேனாட்டு இலக்கிய உலகில் இடம்பெற்றுள்ளது. தமிழில், பூந்துணர்கள், கொய்த மலர்கள், தேன்துளிகள், சிந்தனைக் களஞ்சியம், மணிமொழிகள் முதலிய பெயர்களில் அவ்வப்போது இவ்வரிசையில் தொகைநூல்கள் வெளிவந்துள்ளன.



ஏர்வாடியாரின் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், தொகுப்பு நூல்கள் என ஏறக்குறைய எழுபதுக்கு மேற்பட்ட நூல்களிலிருந்து திரட்டியுள்ள கருத்துகளை இந்த நூலில் அழகுற தொகுத்துத் தந்துள்ளார், இலக்கியத் தேனீ முனைவர் இரா.மோகன். சில சொல் என்று தலைப்பில்  எழுதியிருக்கும் அவருடைய முன்னுரையில், ''இத்தொகை நூலினைப் படிப்போர் ஏர்வாடியாரின் பன்முகப்பரிமாணங்களையும், ஆளுமைப்பண்புகளையும் அறிந்து கொள்ளஇயலும். மேலும் ஏர்வாடியாரின் எழுத்துலகு நோக்கி வாசகர்களை ஆற்றுப்படுத்துவதாகவும், மறுவாசிப்புச் செய்யத் தூண்டுவதாகவும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது' என்பதைத் தெரிவிக்கிறார். தாம் எடுத்துக்கொண்ட பணியினைச் செம்மையாகச் செய்துள்ளமையை இத்தகைய விளக்கம்  உணர்த்துகிறது.



நூலை அமைத்துள்ள விதம் பாராட்டும்படி உள்ளது. அன்றாட நாட்குறிப்புப்போலத் தேதியிட்டு ஒவ்வொரு கருத்தையும் எடுத்துக்காட்டியிருப்பது தொகுப்பாசிரியரின் பட்டறிவுக்குச் சான்று பகரும். பன்னிரு தலைப்புகளில் வகைப்படுத்த்தி, தரம் பிரித்து  இந்நூலை  உருவாக்கியுள்ளார்.



உதிரத்திலிருந்து முதலில் உச்சரிக்கும் வார்த்தை அம்மா. ''எது உனக்கு நல்லதாகப்படுகிறதோ அதன் படி நடந்துகொள்' என்ற தாயின் சொல்லை மறவாத மூல ஆசிரியரின் உள்ளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் முதற்கருத்து அமைந்துள்ளது.  தம்மைப்பெற்றெடுத்த அன்னையைப் பெரிதும் போற்றும் கவிஞர், ஓரிடத்தில் சுருக்கமாகச்சுட்டுகிறார். ''அன்புள்ள அம்மாவுக்கு….  அம்மாவுக்கு என்றாலேயே போதும், கூறியது  கூறல் ஏன்? என்று கேட்டிருப்பதில் அம்மாவின் பாசம் அடர்த்தியான ஒரு சொல்லிலேயே அடங்கிவிட்டிருக்கிறது என்பதைக் காட்டும்.



ஏர்வாடியார் எழுதிய முதற்கவிதை, 'காலம் களவுசெய்துகொண்ட லால் பகதூர் சாஸ்திரி பற்றிய கவிதையாகும்' என்பதைக் கனத்த இதயத்தோடு எடுத்துக்காட்டியுள்ளார்.



குடும்ப உறவு, தனிமனித நெறி, பொதுவாழ்கை ஒழுக்கம்,  நட்புவட்டம், சமூக அக்கறை முதலிய கோணங்களில் தொகுக்கப்பட்டுள்ள கருத்துகள்  சமுதாய  வேருக்கு நீருற்றி அறப்பயிர் வளர்ப்பன வாய் விளங்குவன. சொல்லும் கருத்துகளில் எளிமை. இனிமை, நுட்பம், நகைச்சுவை உணர்வு முதலியன ஆங்காங்கே  கனிச்சுவையாக இனிமை தருவன. 'தாய் கூடப் பாதித்தாய் தான்', என்ற சிந்தனைக் கீற்று நம்மைக் கேள்விக்குறியாக்குகிறது.'' எல்லோருக்குமே  இறைவன் நல்ல மனைவியைத் தான் தருகிறான். நம்மில் எத்தனை பேர் நல்ல கணவனாய்  அவர்களுக்கு அமைகிறோம்' என்ற கருத்து  ஆண் வர்க்கத்திற்குரிய சிந்தனைப்பொறி. எங்கள் வீடு சிதம்பரந்தான் என வரும் பகுதியில் தம் மனைவி பெயரான சிதம்பரத்தம்மாள்  என்பதைப் பொருள் பொதிந்த நகைச்சுவையாக்கியிருக்கிறார் ஏர்வாடியார். கோமதி என்று தவறாமல் தாம் எழுதிய நாடகங்களில் அடிக்கடி வருவதைக் கூட எவ்வளவு நகைச்சுவையாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது! தப்பும் தவறுமாகத் தம் மகன் எழுதிய கடிதத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். தாம் பணிபுரிந்த வங்கியின் பின்னணியை, இப்படிச்சொல்கிறார் ,''வங்கி ஜீவனமாகவும், கவிதை ஜீவனாகவும்' தம் வாழ்க்கை  அமைந்து போனதை எடுத்துக்காட்டுகிறார். கவிதைக்கலையில் அவருக்கிருக்கும் தணியாத ஆர்வத்தைப் இதன் வழியே புரிந்துகொள்ளமுடிகிறது. எனவேதான், ஜீவன் உள்ள கவிதைகள் பலவற்றை அவரால் உருவாக்க முடிந்தது, முடிகிறது. கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே காணப்பெறும் இடைவெளியை அவர் கூறியுள்ள விதம் எளிமையானது; இதயம் தொடுவது.'' உரைப்பது உரைநடை  என்றால், உணர்த்துவது கவிதை. சொற்களின் சிறந்த அணிவகுப்பு உரைநடை என்றிருக்க, சிறந்த சொற்களின் சிறந்த அணிவகுப்பு கவிதை'' என்கிறார்.  இவ்வாறு கூறியிருப்பது, "proper words in proper order is prose: best  words in best order is poetry'  என்ற மேனாட்டரின் கருத்தோடு ஒப்ப விளங்குகிறது இவ்விளக்கம். தமக்கு வாழ்வில் இதம் சேர்ப்பது கவிதைதான் என்பதையும் பிரகடனப்படுத்துகிறார்.  எனவேதான் 'அதுவே உணவாகவும், கண்களில் வளர்கிற கனவாகவும்' இருக்கக்காண்கிறார். கவிதைக்குப்பொய் அழகு என்பார்கள். அது கற்பனை வயப்பட்டது. ஆனால், கவிஞன் வாழ்க்கையில் பொய் இருக்கக்கூடாது  என்று தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருப்பது நல்ல சிந்தனை. கவிஞர் வேறோர் இடத்தில், '' கவிதைக்குப் பொய் அழகு; கவிஞனுக்குப் பொய் அழிவு என்றும் சுட்டிக்காட்டுவர். காதல் கவிதை எழுதாத கவிஞன் இல்லை என்றுரைத்துவிட்டு, அதை எழுதாவிட்டால் கவிஞனே இல்லை என்று கவிஞனைப் பற்றி அலசுகிறார்.



கனவு காணவேண்டும் என்றார் மேனாள் இந்தியக்குடியரசு தலைவர்  அப்துல் கலாம். கனவு  என்னவாக இருக்கவேண்டும் என்ற ஏர்வாடியாரின் எண்ணம் இப்படி விரிகிறது.' கனவுகளைக் கண்ணில் வாங்க வேண்டிய வயதும், வளர்க்க வேண்டிய  பருவமும் இளமை கொலுவிருக்கிற காலமாகும்', என்று உரைநடையில் சொல்லிவிட்டு, கவிதையில், கனவுதான் எந்தக் காரியத் துக்கும் தொடக்கம்; கனவுதான் கண்களின் கெளரவம்'' என்று கனவோடு கண்ணையும் இணைத்துக்காட்டியிருப்பதில்  அரிய கருத்துப் பொதிந்திருப்பதைக் காணமுடிகிறது.



சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் எளிமை, இனிமை, நுட்பம், செறிவு இருக்கவேண்டும் என்பர். ஒரு கருத்தை வெளிப்படுத்துவதின் ஆழம் பாதரசத்தின் அடர்த்தியாக இருக்கவேண்டும். ''நேற்று என்பது பணமாக்கப்பட்ட  காசோலை (paid cheque) ; நாளை என்பது கேட்புறுதிக் காசோலை(demand draft) ; இன்று என்பது ரொக்கம்.(cash)''   என்றுகூறியிருப்பது மேலே கூறியதற்குச் சான்று. இதைப் போலவே இன்னொன்று, ''போராடித்தான் வாழ்க்கையைப் பெற வேண்டும். இளமையில் சிந்துகிற வியர்வை  நாம் முதுமையில் விடுகிற கண்ணீரைத் தவிர்க்கிறது'' என்று சொல்கிறார். 'துன்பம் உறவரினும் செய்க; துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை'' என்ற திருவள்ளுவரின் கருத்துக்குரிய எளிய விளக்கமாக இருத்தலை அறியலாம்.



நாள்தோறும் பொழுதுவிடிகிறது; ஆனால் பழைய தடங்களின் அடிச்சுவட்டை எண்ணிப் பார்க்காமல் விடிவதில்லை. எண்ணச் சலனங்கள் மனிதரை அவ்வாறு இயங்கவைத்துள்ளன. இன்றுநாம் புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ண வெளிப்பாட்டில் மனிதன் இயங்கவேண்டும். பழையன கழிதல் என்பது போகியில் எரிக்கப்படும் பொருள்கள் போல. புதிய விடியலுக்க்கான பூபாளத்தை நாம் வரவேற்கவேண்டும். இந்த எண்ணத்தின் எதிரொலியை ' தினம்  புதிதாய்ப் பிறப்போம்' என்ற கவிதை வழி உணர்த்துகிறார் கவிஞர்.  சொல்லும் நயம் புதுமையானது. ''



இரவில்  முதல் நாள்

இறந்துவிடுங்கள்;

இருக்கும் துயர்களை

எரித்துவிடுங்கள்;

கிழக்கில் உதிக்கும் கதிர்போல்,

காலைப் பொழுதில்

புதிதாய்ப் பிறந்துவிடுங்கள்''

என்கிறார்.



இன்றுள்ள அரசியல் எத்தகைய திசை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று மக்கள் அறிவார்கள். அறிந்தும் என்ன? மக்கள் சிந்தனை செய்யமாட்டாத நிலையில் அல்லவா இருக்கிறார்கள். அவர்கள் சிந்தனை  செய்யவோ அல்லது அவர்களைச் சிந்தனை செய்யவிடவோ அரசியல் உலகம் விடுவதாயில்லை. இதை எண்ணிப் பார்த்த கவிஞர் வார்த்தைச் சாட்டைகளைச் சொடுக்கிவிடுகிறார்.



பாட்டுத் திறத்தாலே

பாலித்திடச் சொன்னாயே பாரதி…

நோட்டுத் திறமல்லவா

இந்த நாட்டை நடத்துகிறது



என்றும்,

இந்த நாட்டில்

பணத்தாளே  அடிக்கலாம்;

மாட்டிக்கொண்டால்

பணத்தாளே அடிக்கலாம்'



என்றும் எள்ளல் சுவை தோன்றக் கூறியிருப்பது உண்மைதானே! புதுக்கவிதைகளில் இவ்வாறு எள்ளலும், குத்தலும்  இயல்பாக அமைந்துள்ளதை இடமறிந்து தொகுத்துள்ளார் தொகுப்பாளர். ஈட்டலும் நீட்டலும் அரசியல் வாதிகளுக்கும், கையூட்டுவாங்குவோர்க்கும் உரிய சொற்களாகிவிட்டன. இதை நயமாக எடுத்துரைக்கும் கவிஞர்,



                  ஈட்டுக பொருள்

                  என்று யாரோ சொன்னதற்கு

                  நீட்டுக கை

                  என்றா நாம் பொருள் கொள்வது '



என்று உரைக்கிறார்.

சமுதாயத்தின் பலவீனங்களையும், தனிமனிதர் திசைமாறிப் போவதையும் பல கோணங்களில் சிந்தனை செய்துள்ள கவிஞரின் கருத்துகளை மணிச்சரமாகக் கோத்துள்ளார் தொகுப்பாளர். தனிமனிதன் திருந்தினால், சமுதாயம் திருந்தும் என்ற கருத்தை நோக்கி அவரது எண்ணங்கள் விரிகின்றன. 'வாழத் தெரிவதற்கு முன் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள வேண்டும்' என்ற மையப் புள்ளியை நோக்கியே அவரது கருத்துகள் நகர்கின்றன. 'வாழ்க்கை என்பது பூந்தோட்டமல்ல; போராட்டம்' என்று கருத்துரைக்கும் அவர், வாழ்க்கையைப் பூந்தோட்டமாக ஆக்கப் பாருங்கள் என்கிறார்., 



இப்படி ஏர்வாடியார் சிந்தனைகள் உரைநடை வாயிலாகவும், கவிதை வாயிலாகவும் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் தேனடையாகத் தித்திக்கின்றன.  இதனைத் தொகுப்பித்த முனைவர் இரா. மோகனைப் பாராட்டவேண்டும். எழுதி எழுதிப் பழகிய கையல்லவா!



ஏர்வாடியார் ஓரிடத்தில், ''நன்றாகப் பேசுகிறவர்கள் இந்த நாட்டில் நிறையப் பேர் இருக்கிறார்கள்; ஆனால், நல்லதைப் பேசுகிறவர்கள் குறைவு'' என்று கூறியிருப்பார். நன்றாக எழுதுகிறவர்கள் நிறையப் பேர் இருக்கலாம்; நல்லதை எழுதுகிறவர்கள் ஏர்வாடியார் போலச் சிலர்தாம் என்பதை இரா.மோகன் இந்நூல் வழி மெய்ம்மைப்படுத்தியிருக்கிறார்.

_________________________________________________________________________________________________________________

\

கருத்துகள்