தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.




தனிமையில் வாடும் பொம்மை !

நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 

வெளியீடு :
அன்னை ராசேசுவரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011.  பக்கம் 64, விலை : ரூ. 50.

******
      ‘தனிமையில் வாடும் பொம்மை’ என்ற தலைப்பைப் படித்தவுடன் குழந்தையின் நினைவு வந்து விடுகிறது.  நூல் ஆசிரியர் கவிஞர் இராமசெயம் அவர்கள் இந்நூலை வாழ்க்கை இணை சீதா மரகதம் மகள் இராம. சுடர்க்கொடிக்கு காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு.

      முனைவர் ஹைக்கூ கவிஞர் ம. ரமேஷ் அவர்களின் அணிந்துரை நன்று.  ஹைக்கூ நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளிவந்துள்ள ஹைக்கூ நூல்.

      பெய்யும் மழை
      ஏக்கத்தில் குழந்தை
      கட்டிய மணல் வீடு!

      குழந்தையின் குழந்தை மனசை படம்பிடித்துக் காட்டிடும் ஹைக்கூ நன்று.

      பூவாய் மாற்றியது
      தோள் மீது அமர்ந்து என்னை
      வண்ணத்துப் பூச்சி!

      வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துவிட முயற்சி செய்தால் தோல்வியே மிஞ்சும். ஆனால் அதுவாக வந்து தோள் மீது அமர்ந்தால் பரவசம்.  பூவாக மனமும் மாறி விடும் என்பது உண்மை தான்!

      மெல்ல நகரும் பூனை
      பழகிக் கொண்டது
      பின்னால் நகரும் எலி!

      பூனையையும் எலியையும் காட்சிப்படுத்தும் விதமாக ரசிக்கும்படியான எள்ளல் சுவையுடன் கூடிய ஹைக்கூ நன்று பாராட்டுக்கள்.

      கவிழ்ந்தது கப்பல்
      சிறிதும் கவலையில்லை
      வேறொன்று கப்பல்!

      கன்னத்தில் கை வைத்தால் கப்பல் கவிழ்ந்து விட்டதா? என்று கேட்பார்கள். பெரியவர்கள் கவலை கொள்வது போல குழந்தைகள் கவலை கொள்வது இல்லை.  குழந்தைத்தனத்தை படம்பிடிக்கும் விதமாக பல ஹைக்கூ கவிதைகள் உள்ளன.

      பெய்த மழை
      நிறைய வளர்த்துள்ளது
      மனித நேயம்!

      உண்மை தான். சென்னையில் பெய்த பெருமழை சாதி, மத வேறுபாடுகளைத் தகர்த்து மனிதநேயத்தை மனிதமனங்களில் விதைத்தது உண்மை தான்.

      நல்ல மழை
      ரசிக்க முடியவில்லை
      ஒழுகும் குடிசை!

      ஏழ்மையை குடிசையின் குறைபாட்டை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாகச் சுட்டிய விதம் அருமை.  குடிசையில் வாழ்பவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும்.  வசதியானவன் ரசிக்கும் மழையை வசதியற்றவன் ரசிக்க முடிவதில்லை என்பது உண்மை!

      மழையில் நனையும் மரம்
      தலை துவட்டி விடுகிறது
      இடை இடையே வீசும் காற்று!

      மழையில் நனையும் மரத்தைப் பார்த்து ரசனையுடன் வடித்து ஹைக்கூ நன்று.  காற்று தலை துவட்டுவது நல்ல கற்பனை.

      நல்ல இசை
      தொடர்ந்து தருகிறது
      ஓட்டை புல்லாங்குழல்!

      நேர்முகம் சிந்தனை விதைக்கும் நல்ல ஹைக்கூ.  ஒரு சிலரிடம் ஏதாவது ஒரு வேலை சொன்னால் செய்யாமல் அதில் ஒரு ஓட்டை, இதில் ஒரு ஓட்டை என்று சாக்கு போக்கு சொல்வார்கள்.  அவர்களுக்கான ஹைக்கூ இது.  ஓட்டைகள் உள்ள புல்லாங்குழல் தான் நல்ல இசை தருகின்றது.  ஓட்டைகளுக்காக அவை வருந்துவதில்லை என்ற சிந்தனை விதைத்த விதம் அருமை. 

      மனம் முழுக்க ஆசை
      புத்தனாக
      தடுக்கும் ஆசை!

      ஆசையைத் துறக்க எல்லாராலும் முடியாது.  பேராசையைத் துறந்து விடலாம். ஆனால் ஆசையைத் துறப்பது கடினம் தான்.  எல்லோரும் புத்தராகி விட முடியாது என்ற உண்மையை உணர்த்திய விதம் சிறப்பு.

      இயற்கையைப் பாடாமல் எள்ளல் சுவையுடன் நடைமுறைகளைப் பாடுவது சென்ரியூ என்ற தலைப்பில் நூலின் இரண்டாம் பகுதியில் எழுதி உள்ளார். அவற்றிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.

      வெளிநாட்டுக் கொள்ளையரை விரட்டினோம்
      வீரமாய் நீட்டி முழங்கினார்
      உள்நாட்டுக் கொள்ளையர்!

      இங்கிலாந்துக்காரன் நம்மை சுரண்டுகின்றான் என்று சொல்லி வீரமாகப் போராடி விடுதலை பெற்றோம். ஆனால் அடுத்து வந்த அரசியல்வாதிகளின் சுரண்டலோ அளவிட முடியாது.  ஆங்கிலேயனே தேவலாம் என்ற மனநிலைக்குத் தள்ளி விட்டனர் இன்றைய அரசியல்வாதிகள்.

      வேறென்ன சொல்ல
      இன்னும் நம்புகின்றன ஆடுகள்
      கசாப்புக் கடைக்காரனையே!

      மக்கள் இன்னும் மாக்களாகவே இருக்கின்றன.  விழிப்புணர்வு வரவில்லை.  இலவசங்களுக்கு மயங்கிடும் இளிச்சவாயர்களாகவே இருக்கின்றனர் என்ற வேதனையை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.கோடிகள் திருடுபவன் எல்லாம் வெளிநாடு ஓடி விடுகிகிறான் .நூறு இருநூறு திருடுபவன் சிறையில் கம்பி எண்ணுகிறான் .

யாரேனும் காப்பாத்துங்கோ கடவுளை
கோவிலுக்குள் புகுந்தது
மழை வெள்ளம்!

எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் விதமாக வடித்த ஹைக்கூ. நன்றி.  வெள்ளத்திலிருந்தும் தீயிலிருந்தும் கடவுளை மனிதன் தான் காக்க வேண்டி உள்ளது என்ற உண்மை கசக்கும் பலருக்கு.

பஞ்சகல்யாணிக்கோ கல்யாணராமனுக்கோ
      கொடுங்கள் விவாகரத்து
      விடும் அடைமழை!

மழை வேண்டும் என்பதற்காகவே கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கும் மூட நம்பிக்கை கணினியுகத்திலும் சிலர் நடத்தி வருவதை இன்றும் காண்கிறோம்.  அந்த மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக மழை நிற்க கழுதைக்கு விவாகரத்து செய்யுங்கள் என்று சொன்ன எள்ளல் புத்தி நன்று. 
 நூலாசிரியர் கவிஞர்  க. இராமசெயம் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.


.

கருத்துகள்